Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இத்தாலி பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இத்தாலி பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்


பெருமதிப்பிற்குரிய இத்தாலி பிரதமர் மெலோனி அவர்களே,

இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

முதல் முறையாக இந்தியா வந்துள்ள மெலோனி மற்றும் தூதுக் குழுவினரை அன்புடன் வரவேற்கிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தாலி மக்கள் முதலாவது பெண் மற்றும் இளம் பிரதமரைத் தேர்வு செய்துள்ளனர். இந்த வரலாற்றுச் சாதனைக்காக இந்திய மக்கள் சார்பில் அவருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் பதவியேற்ற சில நாட்களில் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் நாங்கள் முதல் முறையாக சந்தித்துப் பேச்சு நடத்தினோம்.

நண்பர்களே,

இன்று நாங்கள், மேற்கொண்ட பேச்சுவார்த்தை பயனுள்ளதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்திருந்தது. இந்த ஆண்டு இருதரப்பு உறவுகளின் 75-வது ஆண்டு விழாவை இந்தியாவும், இத்தாலியும் கொண்டாடி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் இந்தியா – இத்தாலி இடையிலான ஒத்துழைப்புக்கு உத்தி ரீதியான அந்தஸ்தை வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். பொருளாதார ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் தற்சார்பு இந்தியா இயக்கங்கள், இந்தியாவில் மிகப் பெரிய அளவில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், தகவல் தொழில்நுட்பம், செமி கண்டக்டர்கள், தொலைத் தொடர்பு, விண்வெளி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம். இந்தியாவுக்கும், இத்தாலிக்கும் இடையிலான ஸ்டார்ட் அப் இணைப்பை நிறுவும் அறிவிப்பை இன்று நாங்கள் வெளியிடுவதுடன், இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

நண்பர்களே,

இருநாடுகளுக்கும் இடையே புதிய அத்தியாயம் தொடங்கும் மற்றொரு துறை உள்ளது. அது பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு ஆகும். இந்தியாவில் பாதுகாப்புத் துறை உற்பத்தியில், கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும். தொடர்ச்சியாக கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யவும் நாங்கள் முடிவு செய்துள்ளதுடன் இரு நாடுகளின் ஆயுதப் படையினர் பங்கேற்கும் பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இத்தாலியும் தோள் கொடுத்து நடைபோட்டு வருகின்றன. இதில் மேலும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக நாங்கள் விரிவாக ஆலோசனை நடத்தினோம்.

நண்பர்களே,

இந்தியாவுக்கும், இத்தாலிக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான, கலாச்சார மற்றும் மக்கள் ஒத்துழைப்புப் பிணைப்பு உள்ளது. தற்காலத் தேவைக்கேற்ப இந்த உறவுகளுக்கு புதிய சக்தியையும், வடிவத்தையும் வழங்குவது குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இரு நாடுகளுக்கும் இடையே இடப்பெயர்வு மற்றும் போக்குவரத்து ஒத்துழைப்பு தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விரைவில் இந்த ஒப்பந்தம் ஏற்படும்போது இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவுகள் மேலும் வலுவடையும். இரு நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் வலியுறுத்தினோம். இந்தியாவுக்கும், இத்தாலிக்கும் இடையே உறவுகள் ஏற்பட்ட 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக ஒரு செயல் திட்டத்தை உருவாக்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் இரு நாடுகளின் பன்முகத் தன்மை, அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள், விளையாட்டு, சாதனைகள் உள்ளிட்டவற்றை உலகளாவிய தளத்தில் காட்சிப்படுத்த முடியும்.

நண்பர்களே,

கொவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போரால் அனைத்து நாடுகளும் உணவு, எரிபொருள், மற்றும் உரம் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இது வளரும் நாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாங்கள் கவலையைப் பகிர்ந்து கொண்டதுடன் இந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண, கூட்டு முயற்சி தேவை என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின்போது இதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். உக்ரைன் சிக்கலின் தொடக்கத்திலேயே, இப்பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தை மூலமாகவும், ராஜிய ரீதியிலும் தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்தியது. அமைதி நடவடிக்கைகளில் முழுமையான பங்களிப்பை வழங்க இந்தியா தயாராக உள்ளது. இந்தோ – பசிபிக் செயல்பாடுகளில் இத்தாலியின் தீவிரப் பங்களிப்பையும் நாம் வரவேற்கிறோம். இந்தோ பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் இணைய இத்தாலி முடிவு செய்திருப்பது, மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இது இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் நமது ஒத்துழைப்பில் வலுவான கருப் பொருள்களை அடையாளம் காண உதவும். உலகளாவிய பிரச்சனைகளைச் சிறந்த முறையில் வெளிப்படுத்த, பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம். இது தொடர்பாகவும் நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.

பெருமதிப்பிற்குரிய இத்தாலி பிரதமர் அவர்களே,

இன்று மாலை நடைபெறவுள்ள ரெய்சினா பேச்சுவார்த்தையில் தலைமை விருந்தினராக நீங்கள் பங்கேற்கவுள்ளீர்கள். உங்களது உரையை அங்கு கேட்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். உங்களது இந்திய வருகைக்காகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்காகவும் உங்களுக்கும், உங்களது பிரதிநிதிக் குழுவினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புத் துறப்பு:

இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.