பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இணையதள பாதுகாப்புக்காக இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு உடன்பாடு எடுத்துரைக்கப்பட்டது. இந்தியாவின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலை செயல்பாட்டு குழு-வுக்கும் (CERT-In), வங்காளதேசத்தின் தபால், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் வங்காளதேச கணினி கவுன்சில் பிரிவில் உள்ள வங்காளதேச அரசு கணினி வழி செயல்பாட்டுக் குழுவுக்கும் (BGD e-Gov CIRT) இடையே உடன்பாடு கையெழுத்தானது. ஏப்ரல் 8, 2017-ல் இந்த புரிந்துணர்வு உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.
CERT-In மற்றும் BGD e-Gov CIRT இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த புரிந்துணர்வு உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. இதில், இணையவழி தாக்குதல் மற்றும் இணையதள பாதுகாப்பு சம்பவங்கள் குறித்த தகவல் பரிமாற்றம்; இணையதள பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு; ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, இந்தத் துறையில் இணையதள பாதுகாப்பு கொள்கைகள், சிறப்பான நடைமுறைகள் மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றை பரிமாறிக் கொள்தல், இதில் சமத்துவம், பரிமாறிக் கொள்தல், பரஸ்பர நலன் அடிப்படையில், தகவல் பரிமாற்றம் செய்யப்படும்.
இணைய பாதுகாப்புக்கான கூட்டுக் குழுவை அமைத்து CERT-In மற்றும் BGD e-Gov CIRT இடையேயான புரிந்துணர்வு உடன்பாடு, செயல்படுத்தப்படும்.
பின்னணி:
இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய அமைப்பு CERT-In. இந்தியாவின் இணையதள வழிமுறைகளைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு கணினி அவசரநிலை நடவடிக்கை குழுக்களுடன் (CERTs) CERT-In இணைந்து செயல்படுகிறது.
அரசுகள், வர்த்தகர்கள், நுகர்வோர் ஆகியோருக்கு பல்வேறு வகையான இணையதள அச்சுறுத்தல்கள் அதிகரித்துவருவதால், இந்த உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இணையதள பாதுகாப்புக்கான தயார் நிலையை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கணினிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும், இணையதள பாதுகாப்பில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரண்டு அமைப்புகளும் அங்கீகரித்துள்ளன.
*****