குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “மாநில ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மையைக் காப்பாற்றும் வேளையில், சமூக மாற்றத்துக்கான கிரியா ஊக்கிகளாகச் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். 2022 ஆம் ஆண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்கு குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், “அதை மக்கள் இயக்கமாக உருவாக்குவதன் மூலமே அந்த இலக்கை அடைய முடியும்” என்று வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் ஆளுநர்கள் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்தார் பிரதமர். அண்மையில் மத்திய அரசு நடத்திய கணினிவழித் தீர்வு நிகழ்வில் (Hackathon) எடுத்துக்காட்டிய பிரதம மந்திரி, “பல பிரச்சினைகளுக்கு மாணவர்கள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தீர்வுகளைக் கண்டனர். பல்கலைக்கழகங்கள் புதுமையாக்கத்திற்கான மையங்களாகத் திகழ வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இதைப் போல் குறிப்பிட்ட பிரதமர், “ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார். “ஆளுநர்கள் தூய்மை இயக்கத்திற்குத் தலைமை வகிக்க வேண்டும். இந்தியாவைத் திறந்த வெளிக் கழிப்பிடம் இல்லாத நாடாக உருவாக்குவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் வேளையில், 2019ஆம் ஆண்டு கொண்டாடப்படும் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் விழா உத்வேகம் அளிப்பதாக அமையும்” என்று கூறினார்.
மாற்றத்தைத் தேடி நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கு இத்தகைய கொண்டாட்டங்கள், ஆண்டு விழாக்கள் நமக்கு உந்துதலாகவும் சக்தியூட்டுவதாகவும் அமையும் என்று பிரதமர் கூறினார். “பழங்குடியினர், தலித்துகள், மகளிர் ஆகியோருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிகள் கடனுதவி அளிப்பதற்கு மாநில ஆளுநர்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டும். குறிப்பாக, நவம்பர் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் அரசியல் சாசன தினம் (Constitution Day) முதல் டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினம் (Ambedkar Mahaparinirvana Diwas) வரையில் இக்கடனுதவியை அளிக்க ஊக்கமளிக்க வேண்டும்” என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
சூரிய சக்தி, நேரடிப் பலன்கள் பரிமாற்றம் (Direct Benefit Transfer – DBT), மண்ணெண்ணெய்ப் பயன்பாடு இல்லாத பிரதேசமாக மாற்றுதல் போன்ற திட்டங்களில் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கையாளும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஊக்கப்படுத்தினார். இத்தகைய சாதனைகள் யூனியன் பிரதேசங்களுக்கு உடனடியாக விரிவுபடுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
*****
Joined the Conference of Governors at Rashtrapati Bhavan. Here are the highlights of my remarks. https://t.co/hp8J1y3pok
— Narendra Modi (@narendramodi) October 12, 2017