ஆயுஷ் துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும், முழுமையான நல்வாழ்வு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு, பாரம்பரிய அறிவைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் ஆரோக்கிய சூழலியலில் பங்கேற்பது ஆகியவற்றில் ஆயுஷ் துறையின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் 7, லோக் கல்யாண் மார்க்கில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.
2014-இல் ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கப்பட்டதிலிருந்து, ஆயுஷ் அமைச்சகத்தின் பரந்த திறனை அங்கீகரித்து, அதன் வளர்ச்சிக்கான தெளிவான திட்டம் குறித்த தொலைநோக்குப் பார்வையை பிரதமர் கொண்டிருக்கிறார். இத்துறையின் முன்னேற்றம் குறித்த விரிவான ஆய்வில், அதன் முழு திறனையும் பயன்படுத்த உத்திசார் தலையீடுகளின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இந்த மதிப்பாய்வு, முன்முயற்சிகளை நெறிப்படுத்துதல், வளங்களை மேம்படுத்துதல் மற்றும் ஆயுஷ் துறையின் உலகளாவிய செயல்பாட்டை உயர்த்துவதற்கான தொலைநோக்குப் பாதையை வகுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
இந்த ஆய்வின் போது, நோய்த்தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை ஊக்குவித்தல், மருத்துவத் தாவரங்களை பயிரிடுவதன் மூலம் ஊரகப் பொருளாதாரத்தை உயர்த்துதல், பாரம்பரிய மருத்துவத் துறையில் இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாட்டை மேம்படுத்துதல் உள்ளிட்ட துறைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை பிரதமர் வலியுறுத்தினார். இந்தத் துறையின் நெகிழ்தன்மை மற்றும் வளர்ச்சியை அவர் எடுத்துரைத்ததுடன், உலகளவில் அதன் அதிகரித்து வரும் தகவமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை இயக்குவதற்கான அதன் திறனைக் குறிப்பிட்டார். கொள்கை ஆதரவு, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் ஆயுஷ் துறையை வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் மருந்தியல் துறையில் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நிலையான நெறிமுறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்துத் துறைகளிலும் அரசின் செயல்பாடுகளுக்கு வெளிப்படைத்தன்மை அடித்தளமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அனைத்து பங்குதாரர்களும் தங்கள் பணி சட்டத்திற்கு உட்பட்டும் பொது நலனுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்து, மிகுந்த நேர்மையுடன் செயல்படுமாறு அவர் அறிவுறுத்தினார்,.
கல்வி, ஆராய்ச்சி, பொது சுகாதாரம், சர்வதேச ஒத்துழைப்பு, வர்த்தகம், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் உலகளாவிய விரிவாக்கம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்து, ஆயுஷ் துறை இந்தியாவின் சுகாதார சூழலில் ஒரு உந்து சக்தியாக விரைவாக உருவாகியுள்ளது. அரசின் முயற்சிகள் மூலம், இந்தத் துறை பல முக்கிய சாதனைகளைக் கண்டுள்ளது, அவை குறித்து கூட்டத்தின் போது பிரதமரிடம் விளக்கப்பட்டது.
– ஆயுஷ் துறை அதிவேக பொருளாதார வளர்ச்சியை நிரூபித்தது, 2014 இல் 2.85 பில்லியன் அமெரிக்க டாலர்கலாக இருந்த உற்பத்தி சந்தை அளவு 2023 இல் 23 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.
– ஆயுஷ் ஆராய்ச்சி தளம் இப்போது 43,000 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை வழங்குவதன் மூலம், சான்றுகள் அடிப்படையிலான பாரம்பரிய மருத்துவத்தில் உலகளாவிய தலைமையாக இந்தியா தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
– கடந்த 10 ஆண்டுகளில் ஆராய்ச்சி வெளியீடுகள் முந்தைய 60 ஆண்டுகளின் வெளியீடுகளை விட அதிகமாக உள்ளன.
– மருத்துவ சுற்றுலாவை மேலும் மேம்படுத்தவும், முழுமையான சுகாதார தீர்வுகளை நாடும் சர்வதேச நோயாளிகளை ஈர்க்கவும் ஆயுஷ் விசா தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள முன்னணி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மூலம் ஆயுஷ் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.
– உள்கட்டமைப்பை வலிமைப்படுத்தி, ஆயுஷ் தொகுப்பின் கீழ் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதில் புதிய கவனம் செலுத்துதல்.
– யோகாவை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.
– ஒய்-பிரேக் யோகா போன்ற முழுமையான உள்ளடக்கத்தை ஐகாட் தளம் வழங்கும்
– குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை நிறுவியது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், இது பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியாவின் தலைமையை வலுப்படுத்துகிறது.
– உலக சுகாதார அமைப்பின் நோய்களின் சர்வதேச வகைப்பாடு -11 இல் பாரம்பரிய மருத்துவத்தைச் சேர்த்தல்.
– இந்தத் துறையின் உள்கட்டமைப்பு மற்றும் அணுகலை விரிவுபடுத்துவதில் தேசிய ஆயுஷ் இயக்கம் முக்கியமானதாக உள்ளது.
– 2024 சர்வதேச யோகா தினத்தில் 24.52 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
– 2025-ஆம் ஆண்டின் 10வது சர்வதேச யோகா தினம் உலகெங்கிலும் உள்ள மக்களின் அதிக பங்கேற்புடன் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும்.
இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, ஆயுஷ் துறை இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சருமான திரு பிரதாப்ராவ் ஜாதவ், பிரதமரின் முதன்மைச் செயலாளர்கள் டாக்டர் பி.கே.மிஸ்ரா, திரு சக்திகாந்த தாஸ், பிரதமரின் ஆலோசகர் திரு அமித் கரே மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
—–
RB/DL