ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்காக பிரதமருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட திரு. குக் தனது இந்திய வருகைபற்றி அவருடன் விவாதித்தார். தமக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார். நாட்டின் பல பகுதிகளுக்கும் மேற்கொண்ட தமது பயணம் பற்றியும் இளைஞர்கள் உட்பட தொழில் முனைவோர் மற்றும் திரைப்பட கலைஞருடன் தமது சந்திப்பு குறித்தும் எடுத்துரைத்தார். மும்பையில் சித்தி விநாயகர் கோவிலில் வழிபட்டது பற்றியும் கிரிக்கெட் போட்டியை ரசித்தது குறித்தும் எடுத்துரைத்தார். திரு. குக் வருகையை பாராட்டிய பிரதமர் இந்தியாவில் நேரில் காண்பதே நம்புவதுதான் என்று குறிப்பிட்டு இங்கு பெறும் அனுபவங்கள் திரு. குக்கின் வர்த்தக சம்பந்தமான முடிவுகளை நிச்சயம் ஊக்குவிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பிரதமரிடம் திரு. குக் பகிர்ந்து கொண்டார். இந்தியாவிலேயே ஆப்பிள் தயாரிப்பை தொடங்குவது குறித்தும் சில்லறை விற்பனைக்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் விரிவாக பேசினார். இந்திய இளைஞர்களின் அற்புதமான திறமைகளை புகழ்ந்த திரு. குக் அவர்களின் இந்த திறமைகளை பயன்படுத்த ஆப்பிள் நிறுவனம் விரும்புகிறது என்றார். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அளப்பரிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார். ஐதராபாதில் ஆப்பிள் நிறுவனம் அமைக்கும் நில வரைபடப் பிரிவு குறித்தும் அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். தொழில் தொடங்குவதற்கான முறைகளை எளிமைப் படுத்துவதில் பிரதமரின் முன்முயற்சிகளை அவர் பாராட்டினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விஷயத்தில் பிரதமரின் முன் முயற்சிகளை திரு. குக் புகழ்ந்தார். ஆப்பிள் நிறுவனம் தனது செயல்பாட்டுக்கு 93 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையே பயன்படுத்துகிறது என்றும் அனைத்து நடவடிக்கைகளையும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். திரு. குக்குடன் வந்திருந்த ஆப்பிள் நிறுவன குழுவினர், ராஜஸ்தான் மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சியில் தங்களின் அனுபவத்தை விவரித்தார்கள். அங்கு கிராமங்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் சூரியசக்தி சாதனங்களை இணைத்து உருவாக்குவதில் அந்த மாநில பெண்கள் பெற்றுள்ள திறமையையும் அவர்கள் எடுத்துரைத்தார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள் தயாரிப்பில் கிடைத்த பிரத்யேக அனுபவங்களை பிரதமரும் திரு. குக்கும் பகிர்ந்து கொண்டார்கள்.
பிரதமர் தாம் தொடங்கி உள்ள டிஜிட்டல் இந்தியா முயற்சிகளை குறிப்பிட்டு, கல்வி, சுகாதாரம், விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதில் மின்னணு முறையின் பயன்பாட்டை கொண்டுவருவதே டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.
சைபர் பாதுகாப்பு, தகவல்களின் ரகசியத்தை காப்பது ஆகிய அம்சங்களையும் அவர்கள் விவாதத்தில் இடம் பெற்றது. சைபர் குற்றங்களால் எழும் சவால்களை சந்திக்க உலக சமுதாயத்திற்கு உதவும்படி திரு. குக்கை பிரதமர் வலியுறுத்தினார்.
நரேந்திர மோடி மொபைல் செயலியின் மேம்படுத்தப்பட்ட இணைய தளத்தை திரு. டிம் குக் தொடங்கி வைத்தார்.
Thank you @tim_cook! Friends, welcome & happy volunteering. Your views & efforts are always enriching. pic.twitter.com/aAu4isv6wM
— Narendra Modi (@narendramodi) May 21, 2016