Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா. மெக்சிகோ நாடுகளுக்கு பிரதமரின் பயணம்


ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா. மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜூன் 4, 2016 முதல் ஜூன் 8, 2016 வரை பயணம் மேற்கொள்கிறார். இது குறித்த பிரதமர் தனது பேஸ்புக் பக்கத்தில் அடுத்தடுத்து குறிப்பிட்டுள்ள பதிவுகள்:

“நாளை ஆப்கானிஸ்தானிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளேன். அங்கு ஹிராத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான்-இந்தியா நட்பு அணையின் திறப்புவிழாவில் அதிபர் திரு. அஷ்ரப் கனியுடன் கலந்துகொள்கிறேன். இந்த ஆணை நமது நட்பின் சின்னமாகும். இது நம்பிக்கையையும், வீடுகளுக்கு ஒளியையும் ஹீராத் மண்ணிற்கும் அப்பகுதிகளில் வாழு மக்களின் வாழ்க்கைக்கும் வளத்தை உருவாக்கும்.
எனது நண்பரும் ஆப்கன் அதிபருமான திரு. அஷ்ரப் கனியை சந்தித்து பிராந்திய நிலைமையை குறித்து பேசவும் வரும் காலங்களில் இருதரப்பின் உறவுக்கான செயற்பட்டியல் குறித்து விவாதிக்கவும் ஆவலுடன் உள்ளேன்.

கத்தார் அரசரின் அழைப்பை ஏற்று 4 மற்றும் 5ம் தேதிகளில் கத்தார் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறேன்..
தனது பயணம் மூலம் இந்தியா கத்தார் உறவிற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்த அரசர் ஷேக் தமீமை சந்திக்க ஆவலாக உள்ளேன்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளின் உறவினை வழிநடத்தி வந்த அரசரின் தந்தையை சந்திக்கும் கவுரவத்தை நான் அடைவேன்.

இந்த பயணம் இரு நாட்டு மக்களிடையே உள்ள உறவு மின்னாற்றல், வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் உள்ள உறவினை மேலும் வலுவடைய செய்யும்.

கத்தார் நாட்டில் தனது வேர்வையினாலும் கடும் உழைப்பினாலும் நமது உறவினை வலுபடுத்திய ஆறு லட்சம் இந்திய தொழிலாளர்களில் சிலரை தொழிலாளர்கள் கூடத்தில் சந்தித்து பேச உள்ளேன். இரு நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடு துறைகளில் முழு பயன் பெறுவதற்காக அந்நாட்டில் உள்ள தொழில் முனைவோரை சந்திக்க உள்ளேன்.

ஐந்தாம் தேதியன்று மாலை ஜெனீவாவிற்கு செல்கிறேன். ஐரோப்பிய கண்டத்தில் நமது முக்கிய பங்குதாரரான சுவிட்சர்லாந்துடனான இருதரப்பு மற்றும் பல்முனை உறவினை வலுப்படுத்த அதிபர் ஸ்னைடர்-அம்மானை சந்தித்து பேச உள்ளேன்.

ஜெனீவாவில் உள்ள முக்கிய தொழில் முனைவோர்களை சந்திக்கிறேன். நமது முக்கிய நோக்கம் பொருளாதார மற்றும் முதலீட்டு உறவுகளை வலுபடுத்துவதாகும். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானிகளை சந்திக்கிறேன். மனித இனத்திற்கு சேவைபுரியும் நோக்கத்தில் அறிவியல் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் அவர்களில் பங்கினை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது.

இருதரப்பு சந்திப்பிற்காக 6-ஆம் தேதி வாஷிங்டன் டிசியில் அதிபர் திரு. பராக் ஒபாமாவை சந்திக்கிறேன்.
7-ஆம் தேதி அதிபருடனான சந்திப்பில் பல்வேறு துறைகளில் நம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவுகளுக்கு ஒரு புது உத்வேகம் அளிக்கக்கூடிய முயற்சிகள் குறித்து பேச உள்ளேன்.

அமெரிக்க – இந்திய வரத்தக சபையின் 40-வது ஆண்டு பொது கூட்டத்தில் பங்கேற்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேலும் கடந்த இரு ஆண்டுகளாக இந்தியா மீது பெரும் நம்பிக்கையை கொண்ட அமெரிக்க தொழில் தலைவர்களை சந்திக்க உள்ளேன்.

இந்தியாவின் பழம்பெரும் பொக்கிஷங்களை திரும்ப பெற்றுக்கொடுத்ததற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவில் பங்கேற்று அமெரிக்காவின் அறிஞர்களுடன் எனது கருத்துக்களை பரிமாற உள்ளேன். ஆர்லிங்டன் கல்லறையை நான் பார்வையிடும்போது பெயர்தெரியாத போர்வீரரின் கல்லறை மற்றும் கொலம்பியா விண்கல நினைவிடத்திற்குச் சென்று நான் அஞ்சலி செலுத்த உள்ளேன். அங்கு தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீரர், கல்பனா சாவ்லாவின் நினைவிடமும் உள்ளது.

எட்டாம் தேதி அன்று அமெரிக்க காங்கிரஸ் கூட்டுக் கூட்டத்தில் உரையாட உள்ளேன். காங்கிரஸ் மற்றும் மேலவை உறுப்பினர்களுடன் என்னை பேச அழைத்ததற்காக சபாநாயகர் பால் ரியானுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அமெரிக்க தலைநகரத்திற்கு நான் செல்லும்போது இந்தியா-அமேரிக்கா உறவினை வலுபடுத்திவரும் பல்வேறு கீழவை மற்றும் மேலவை உறுப்பினர்களுடனும் உரையாட உள்ளேன்.

தங்கள் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவம் கொண்டாடும் இரண்டு துடிப்பான ஜனநாயகங்களான இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவு இயற்கையாக உருவானது. இந்தியா-அமெரிக்காவின் வலுவான உறவு இருநாடுகளுக்கு மட்டும் அல்ல உலகிற்கே நன்மையை உண்டாக்கும்.

லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் நமது முக்கிய பங்குதாரரான மெக்சிகோவிற்கு நான் ஜூன் 8-ஆம் தேதி செல்லும்போது அதிபர் பெனா நியோட்டோவை சந்திக்க உள்ளேன்.

சீர்திருத்தங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருபவர் அதிபர் பெனா நியோட்டோ. இந்த சந்திப்பின்போது எங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஆவலுடன் உள்ளேன். 30 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமர் மெக்சிகோவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

குறுகிய காலம் என்றாலும், இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவில் ஒரு புதிய உயரத்துக்கு எடுத்து செல்லும்.

இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****