ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் மாண்புமிகு டாக்டர் முகம்மது அஷ்ரப் கனி 14 & 15 ஆம் தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, இந்தியாவுக்கு வருகை தந்தபோது, அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் போது அவர் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்றைக்கு அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதிபர் கனியை சந்தித்தபோது 2015 டிசம்பரில் காபூலுக்கும், இந்த ஆண்டு ஜூன் மாதம் ஹெராத் நகருக்கும் தாம் மேற்கொண்ட பயணங்கள் பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி அன்புடன் நினைவுகூர்ந்தார். அந்த இரு பயணங்களின்போதும் தமக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளாலும், அப்போதும் தெஹ்ரானிலும் (மே 2016) மற்றும் தாஸ்கெண்ட்டிலும் (ஜூன் 2016) அதிபருடன் நடந்த சந்திப்புகளிலும் நடந்த பலன் தரக் கூடிய பேச்சுவார்த்தைகளால் தாம் மிக்க மகிழ்ச்சி அடைந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அனைத்து நிலைகளிலும் நெருக்கமான மற்றும் அடிக்கடி கலந்தாலோசனைகள் நடைபெறுவது குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இரு நாடுகளின் முக்கியமான கூட்டு முயற்சிகளுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையிலும், அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலும் அவை இருந்ததாக இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே இருதரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தானில் வெற்றிகரமான அரசியல், பாதுகாப்பு மற்றும் பொருளாதார மாற்றத்துக்கான சுய முயற்சிகளுக்கு உதவிகரமாக இருந்ததை அவர்கள் நினைவுகூர்ந்தனர். நாடாளுமன்ற கட்டடம் மற்றும் ஆப்கானிஸ்தான் – இந்தியா நட்புணர்வு அணை போன்ற முக்கிய மைல்கற்கள் பூர்த்தியானதை இரு தலைவர்களும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். 2016 ஆகஸ்ட் 22 ஆம் தேதி வீடியோ மூலமாக ஸ்டோரே அரண்மணையை கூட்டாக தொடங்கி வைத்தபோது, 1.25 பில்லியன் இந்திய மக்களும், ஆப்கானிஸ்தானின் சகோதர, சகோதரிகளுக்கு துணை நிற்பதாக , பிரதமர் அளித்த உறுதிமொழியின் முக்கியத்துவத்தை அதிபர் வலியுறுத்திக் கூறினார்.
ஒன்றுபட்ட, இறையாண்மையுள்ள, ஜனநாயகமான, அமைதியான, நிலையான மற்றும் வளமிக்க ஆப்கானிஸ்தானை உருவாக்க இந்தியாவின் ஒத்திசைவான ஆதரவு உண்டு என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார். கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் திறன் மேம்பாடு, மகளிருக்கு அதிகாரமளித்தல், எரிசக்தி, கட்டமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற துறைகளில் ஆப்கானிஸ்தான் திறமை மற்றும் வல்லமையைப் பெறுவதற்கான கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த வகையில், நெருக்கமான அருகாமை நாடு மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் மக்களின் நட்பு நாடு என்ற வகையில், இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்வதாகவும் பிரதமர் அறிவித்தார். உலகத் தரத்திலான மற்றும் எளிதில் வாங்கக் கூடிய விலைகளில் இந்தியாவில் இருந்து மருந்துகளை வழங்கவும், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளின்படி சூரியசக்தி மின்சார உற்பத்தியில் ஒத்துழைப்பு அளிக்கவும் பிரதமர் அறிவிப்புகள் செய்தார்.
பிராந்தியத்தில் உள்ள நிலைமைகள் பற்றி இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். அரசியல் நோக்கங்களை அடைவதற்காக, இந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை பயன்படுத்தப்படுவது பற்றி இரு தலைவர்களும் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர். இந்தப் பிராந்தியத்திலும், அதைக் கடந்த பகுதிகளிலும் அமைதி, நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தனிப்பட்ட ஓர் அச்சுறுத்தலாக இது இருக்கிறது என்பதில் இருவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். எந்தவிதமான பாரபட்சமும் இன்றி, அனைத்து வகையான பயங்கரவாதங்களையும் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவை குறிவைத்த செயல்பாடுகள் உள்பட, பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்தல், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்தல் போன்றவற்றுக்கு சம்பந்தப்பட்டவர்கள் முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்திய – ஆப்கானிஸ்தான் முக்கிய கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளவாறு, பயங்கரவாதத்தை ஒழிப்பது, பாதுகாப்பு மற்றும் ராணுவத் துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றை அமல் செய்வதில் உறுதியுடன் இருப்பதாக இரு தலைவர்களும் மீண்டும் தெரிவித்தனர்.
இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தலைமையிலான, முக்கிய துறைகளில் கூட்டு செயல்பாடு கொள்ளும் கவுன்சில் கூட்டம் விரைவில் நடத்துவது என்றும், வெவ்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை கையாள்வது மற்றும் மேற்கொண்டு வழிகாட்டுதல்களை கற்பித்தல் ஆகியவை குறித்த நான்கு கூட்டு பணிக் குழுக்களின் பரிந்துரைகள் அந்தக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம், சிவில் மற்றும் வணிக விவகாரங்களில் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம், புறவெளிப் பகுதியை அமைதிக்கான வழியில் பயன்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை அதிபரின் பயணத்தின் போது கையெழுத்தானது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். சபாஹர் துறைமுகத்தை பயன்படுத்துவது தொடர்பாக, ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் ஈரானுக்கு இடையில் மே 2016-ல் கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்தை விரைந்து அமல்படுத்துவதால், இந்தப் பிராந்தியத்தில் தொடர்பு வசதிகள் மேம்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த விஷயத்தில், இதில் தொடர்புடைய வணிகம் மற்றும் தொழில் துறையினர் உள்ளிட்டவர்களைக் கொண்ட முக்கியஸ்தர்களின் கூட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது என்று சமீபத்தில் மூன்று நாடுகளும் மேற்கொண்ட முடிவை இரு தலைவர்களும் பாராட்டினர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி, நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலும், மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனும் கலந்துரையாடல்கள் தீவிரப்படுத்தப் பட்டிருப்பதையும் இரு தலைவர்களும் வரவேற்றனர். இந்தியா – ஈரான் – ஆப்கானிஸ்தான் முத்தரப்பு கலந்தாலோசனைகளால் ஏற்பட்ட பலன்களை அவர்கள் குறிப்பாகப் பாராட்டினர். இந்த மாதத்தின் பிற்பகுதியில் நியூயார்க் நகரில் இந்தியா – அமெரிக்கா – ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இயன்ற அனைத்து வழிகளிலும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு உதவக் கூடிய வகையில், சர்வதேச அமைப்புகளை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்று அதிபரிடம் பிரதமர் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில், டிசம்பர் 4-ல் நடைபெறவுள்ள ஆசிய – இஸ்தான்புல் செயல்பாடு (HoA) குறித்த அமிர்தசரஸ் அமைச்சரவை மாநாட்டின் முக்கியத்துவத்தையும், அக்டோபர் 5-ல் பிரசல்ஸில் நடைபெறும் கூட்டத்தின் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் கோடிட்டுக் காட்டினர். தொடர்பை புதுப்பித்தல் என்பதன் மதிப்பை உணர்த்தும் வகையில் அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதையும், HoA-வின் இந்த ஆண்டு கொள்கையான “சவால்களை சந்திப்பது, வளத்தை எட்டுவது” என்பதை ஒருமித்தும் இது அமைந்திருப்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா இடையில் தடையற்ற இருவழி தொடர்பு என்பதை விரைந்து செயல்படுத்துவதில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் உறுதியுடன் இருப்பதையும் அது கோடிட்டுக் காட்டுகிறது.
அமிர்தசரஸ் மாநாட்டு தொடக்க நிகழ்வில் பங்கேற்குமாறு அதிபருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இதை அதிபர் ஏற்றுக் கொண்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள பொருளாதார வாய்ப்புகள் மற்றும் வாய்ப்பு வளங்கள் குறித்து இந்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் மூத்த நிர்வாகிகளிடம் அதிபர் விளக்கவுள்ளார். பாதுகாப்பு கல்விகள் மற்றும் ஆய்வுகள் நிலையத்தில், `அரசியல் வன்முறை மற்றும் உலகளாவிய பயங்கரவாதத்தின் ஐந்தாவது அலைவீச்சு’ குறித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நிபுணர்கள் மத்தியிலும் அவர் உரையாற்றுகிறார்.
Glad to have met President @ashrafghani in Delhi. We had extensive talks on India-Afghanistan ties. @ARG_AFG pic.twitter.com/5EgOtwEXuN
— Narendra Modi (@narendramodi) September 14, 2016