ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்க ளில் 2025 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். நீடித்த வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், ஜனவரி 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். ஜனவரி 9 அன்று காலை 10 மணிக்கு புவனேஸ்வரில் நடைபெறும் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
ஆந்திராவில் பிரதமர்
பசுமை எரிசக்தி மற்றும் நீடித்த எதிர்காலத்திற்கான அவரது உறுதிப்பாட்டின் மற்றொரு முக்கிய படியாக, ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் அருகே புடிமடகாவில் அதிநவீன என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட் பசுமை ஹைட்ரஜன் மைய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இது தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் முதல் பசுமை ஹைட்ரஜன் மையமாக விளங்கும். இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.1,85,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன்களில் மேற்கொள்ளப்படும்முதலீடுகளும் உள்ளடங்கும், இது நாளொன்றுக்கு 1500 டன் பசுமை ஹைட்ரஜன் மற்றும் 7500டன் அது சார்ந்த வாயுக்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளில் ஒன்றாகும். இதில் பசுமை மெத்தனால், பசுமை யூரியா மற்றும் நிலையான விமான எரிபொருள் ஆகியவை அடங்கும். இது முதன்மையாக ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் புதைபடிவம் அல்லாத எரிசக்தி திறன் இலக்கான 500 ஜிகாவாட் இலக்கை அடைவதில் இந்த திட்டம் கணிசமான பங்களிப்பை வழங்கும்.
விசாகப்பட்டினத்தில் தெற்குக் கடலோர ரயில்வே தலைமையகத்திற்கு அடிக்கல் நாட்டுவது உட்பட ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.19,500 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே மற்றும் சாலைத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, போக்குவரத்தை மேம்படுத்தி, பிராந்திய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்.
எளிதில் அணுகக்கூடிய மற்றும் குறைந்த செலவில் சுகாதார சேவை என்ற தனது தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அனகாபள்ளி மாவட்டம் நாக்கபள்ளியில் மருந்துப் பூங்காவுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை வழித்தடம், விசாகப்பட்டினம்-காக்கிநாடா பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்திற்கு அருகாமையில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும் இந்த மருந்து பூங்கா ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் சென்னை- பெங்களூரு தொழில் வழித்தடத்தின் கீழ் கிருஷ்ணபட்டினம் தொழில் பகுதிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். தேசிய தொழில்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு முதன்மை திட்டமான கிருஷ்ணபட்டினம் தொழில்துறை பகுதி, பசுமை தொழில்துறை நவீன நகரமாக கருதப்படுகிறது. இந்த திட்டம் சுமார் ரூ.10,500 கோடிக்கு குறிப்பிடத்தக்க உற்பத்தி முதலீடுகளை ஈர்க்க அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1 லட்சம் நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வாழ்வாதாரங்களை கணிசமாக மேம்படுத்தி, பிராந்திய முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.
ஒடிசாவில் பிரதமர்
ஒடிசாவில் 18-வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார். வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாடு என்பது மத்திய அரசின் முதன்மையான நிகழ்வாகும். இது வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் தொடர்பு கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும், அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது. 18 வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாடு, ஒடிசா மாநில அரசுடன் இணைந்து 2025 ஜனவரி 8 முதல் 10 வரை புவனேஸ்வரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டின் கருப்பொருள் “வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு” என்பதாகும். இந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டில் பங்கேற்க 50-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர்.
தில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான சிறப்பு சுற்றுலா ரயில் சேவையை பிரதமர் ஒடிசாவில் இருந்து கொண்டே தொடங்கி வைப்பார். இந்த ரயில், மூன்று வார காலத்திற்கு இந்தியாவில் சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் யாத்திரை திட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்படும்.
***
TS/IR/AG/DL