Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலக மாநாட்டு மையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் சாய் ஹிரா உலக மாநாட்டு மையத்  திறப்பு விழாவில் பிரதமர்  நிகழ்த்திய  உரையின் தமிழாக்கம்


சாய் ராம்! ஆந்திர மாநில ஆளுநர் திரு அப்துல் நசீர் அவர்களே, திரு ஆர்.ஜே. ரத்னாகர் அவர்களே, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், திரு கே. சக்ரவர்த்தி அவர்களே, எனது பழைய நண்பர் திரு ரியூகோ ஹிரா அவர்களே, டாக்டர் வி. மோகன் அவர்களே, திரு எம்.எஸ். நாகானந்த் அவர்களே, திரு நிமிஷ் பாண்டியா அவர்களே, மற்ற அனைத்துப் பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவருக்கும் மீண்டும் சாய் ராம்.

புட்டபர்த்திக்குப் பலமுறை பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.இன்று இங்கு வருவதன் மூலம் மீண்டும் ஒருமுறை உங்கள் மத்தியில் இருக்கவும், உங்களைச் சந்திக்கவும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும்,   உண்மையிலேயே நான் விரும்பினேன். ஆனால், எனது பரபரப்பான பணிச் சூழல் காரணமாக என்னால் அப்படி செய்ய  முடியவில்லை. பாய் ரத்னாகர் அவர்கள் என்னை அழைக்கும் போது,  ‘நீங்கள் ஒருமுறை வந்து ஆசிர்வதியுங்கள்’ என்றார். ரத்னாகர் அவர்களின் கூற்றைத்  திருத்த வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன். நான் அங்கு நிச்சயமாக  வருவேன். ஆனால் ஆசீர்வாதம் வழங்க அல்ல, ஆசீர்வாதம் பெற. தொழில்நுட்பத்தின் உதவியால் நான் இன்று உங்கள் அனைவர் மத்தியிலும் இருக்கிறேன். இன்று நடைபெறும் இந்நிகழ்ச்சிக்காக ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையுடன் தொடர்புடைய அனைத்து உறுப்பினர்களுக்கும், சத்ய சாய் பாபாவின் பக்தர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முழு நிகழ்விலும் ஸ்ரீ சத்ய சாயியின் உத்வேகமும் ஆசீர்வாதமும் நம்முடன்  உள்ளன. இந்தப் புனிதமான நேரத்தில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பணி விரிவடைவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்ரீ ஹிரா உலக மாநாட்டு மையத்தின்  வடிவில் நாடு ஒரு பெரிய சிந்தனைக் குழுவைப் பெறுகிறது. இப்போது திரையிடப்பட்ட குறும்படத்தில் இந்த மாநாட்டு மையத்தின் படங்களையும் அதன் காட்சிகளையும் பார்த்தேன். இது நவீனத்துவத்துடன் ஆன்மீக அனுபவத்தையும் வழங்குகிறது. இது கலாச்சார தெய்வீகம்  மற்றும் அறிவுசார் மகத்துவத்தை உள்ளடக்கியது. இந்த மையம் ஆன்மிக மாநாடுகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளுக்கான மையமாக செயல்படும். உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் இங்கு ஒன்று கூடுவார்கள். இந்த மையம் இளைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இன்று, மாநாட்டு மையத் திறப்பு விழாவுடன், உலகளாவிய ஸ்ரீ சத்ய சாய்  கவுன்சில் தலைவர்கள் மாநாடும் இங்கு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். குறிப்பாக, இந்த நிகழ்விற்காக நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள, “பயிற்சி மற்றும் ஊக்கம்”, என்ற மையப்பொருள் தாக்கம் நிறைந்தது; பொருத்தமானது.

இந்தியா இன்று சுதந்திரத்தின் 100 வது ஆண்டு விழாவின் இலக்குகளை நோக்கமாகக் கொண்டு, தனது கடமைகளுக்கு முன்னுரிமை அளித்து முன்னேறி வருகிறது. இவை ஆன்மிக விழுமியங்களின் வழிகாட்டுதல் மட்டுமின்றி, எதிர்காலத்திற்கான விருப்பங்களையும் உள்ளடக்கியதாக நாம் நம்புவதால், இதற்கு  ‘அமிர்த காலம்’,  ‘கடமையின் காலம் ‘  என்று பெயரிட்டுள்ளோம். இது முன்னேற்றத்தையும்  பாரம்பரியத்தையும்   குறிக்கிறது. நாட்டில் ஆன்மீக மையங்கள் புத்துயிர் பெற்றுள்ள நிலையில்,  பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்திலும்  இந்தியா முன்னணியில் உள்ளது.

நண்பர்களே,

சாய்பாபாவின் பெயருடன் இணைந்த புட்டபர்த்தி மாவட்டத்தை 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்குமாறு ரத்னாகர் அவர்களையும், சாய் பக்தர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு பரிவர்த்தனையும் டிஜிட்டல் முறையில் இருக்க வேண்டும். இந்த மாவட்டம் உலகிலேயே தனித்துவம் பெறுவதை நீங்கள் காணவிருக்கிறீர்கள். பாபாவின் ஆசியுடன் எனது நண்பர் ரத்னாகர் அவர்கள்   பொறுப்பேற்றால், பாபாவின் அடுத்த பிறந்தநாளில்  ரொக்கமாக ஒரு ரூபாய் கூட தேவைப்படாமல் மாவட்டம் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்குவது சாத்தியமாகும்.  இதைச் செய்ய முடியும்.

நண்பர்களே,

சத்ய சாயியின் ஆசீர்வாதம் நம் அனைவருக்கும் உண்டு. இந்த சக்தியைக் கொண்டு, வளர்ந்த இந்தியாவை உருவாக்கி, முழு உலகிற்கும் சேவை செய்ய வேண்டும் என்ற நமது உறுதியை நிறைவேற்றுவோம்.  உங்களை நேரில் சந்திக்க இயலவில்லை, ஆனால் இனி வரும் காலங்களில் நிச்சயம் நேரில் வந்து உங்களிடையே செலவிட்ட  அந்த இனிய தருணங்களை நினைவு கூர்வேன். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி. சாய் ராம்!

***

(Release ID: 1937242)

IR/SMB/RJ