Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்தில் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை

ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்தில் அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பிரதமரின் உரை


ஆந்திரப்பிரதேச ஆளுநர் திரு பிஸ்வபூஷன் ஹரிசந்தன் அவர்களே, முதல்வர் திரு ஜகன் மோகன் ரெட்டி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மேடையில் அமர்ந்துள்ள பிரமுகர்களே, ஆந்திரப்பிரதேசத்தின் சகோதர, சகோதரிகளே!

இன்று, நாடு ஒருபுறம் 75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடி வரும் அதே வேளையில், மறுபுறம் அல்லூரி சீதாராம ராஜு அவர்களின் 125-வது பிறந்தநாள் விழாவையும் கொண்டாடி வருகிறது. அதேபோல நாட்டு விடுதலைக்கு வித்திட்ட ராம்ப்பா கிளர்ச்சியின் நூறாவது ஆண்டாகவும் இது அமைகிறது. அல்லூரி சீதாராம ராஜுவின் 125-வது பிறந்தநாளும், ராம்ப்பா கிளர்ச்சியின் நூற்றாண்டும் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும். ‘விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின்’ போது சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு பற்றி நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உறுதிமொழியை நாம் ஏற்றிருக்கிறோம். இன்றைய நிகழ்ச்சி அதன் பிரதிபலிப்பு.

நண்பர்களே,

விடுதலைப் போராட்டம் என்பது சில ஆண்டுகளின், சில பகுதிகளின் அல்லது சில மக்களின் வரலாறு மட்டுமல்ல. அது இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும்  எழும் விட்டுக்கொடுத்தல், விடாமுயற்சி மற்றும் தியாகங்களின் வரலாறு. நம் நாட்டின் ஆற்றல்மிக்க பன்முகத்தன்மை, கலாச்சார சக்தி மற்றும் ஒற்றுமையின் சின்னமாக சுதந்திரப் போராட்ட வரலாறு அமைகிறது. அல்லூரி சீதாராம ராஜு, இந்திய கலாச்சாரம் மற்றும் பழங்குடி மக்களின் அடையாளம், இந்தியாவின் வீரம், கொள்கைகள் மற்றும் மாண்புகளை உருவகப்படுத்துகிறார். ஆயிரம் ஆண்டுகளாக நாட்டை ஒன்றுபடுத்தி இருக்கும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கோட்பாட்டின் சின்னமாக சீதாராம ராஜு விளங்குகிறார்.

புதிய இந்தியாவின் கனவுகளை நனவாக்க இளைஞர்கள் முன்வருவதற்கு இதுவே சிறந்த தருணம். தற்போது நாட்டில் புதிய வாய்ப்புகள் இருப்பதோடு, புதிய பரிணாமங்களும் உருவாகி வருகின்றன. விடுதலையின் ‘அமிர்த காலத்தில்’, சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குவது 130 கோடி இந்தியர்களின் கடமையாகும். புதிய இந்தியா என்பது ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும் இந்தியாவாக, அவர்கள் கண்ட கனவைப் பற்றியதாக இருக்க வேண்டும். இந்த உறுதிபாட்டை நிறைவேற்றும் நோக்கத்துடன் கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு கொள்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி மக்களின் தனித்துவம் வாய்ந்த பங்களிப்பை ஒவ்வொருவரிடமும் எடுத்துச் செல்வதற்காக, அமிர்த மகோத்சவத்தின் போது எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விடுதலைக்குப் பிறகு முதன் முறையாக, பழங்குடி மக்களின் பெருமையை எடுத்துரைக்கும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுக்கின்றன. ஆந்திரப்பிரதேசத்தின் லம்பாசிங்கியில் “அல்லூரி சீதாராம ராஜு நினைவு பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம்” அமைக்கப்படவுள்ளது.

திறன் இந்தியா இயக்கத்தின் வாயிலாக பழங்குடியின கலைத்திறன்கள் தற்போது புதிய அடையாளத்தைப் பெற்று வருகின்றன. “உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்” என்ற முழக்கம், பழங்குடியினரின் கலைத்திறன்களை வருவாய் ஆதாரமாக மாற்றி வருகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்களை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் கடலென திரண்டுள்ள மக்கள் மற்றும் அவர்களிடையே காணப்படும் உற்சாகம் எடுத்துரைக்கிறது. உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வந்தே மாதரம்!

நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***************