Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமரின் உரை


ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் அவர்களே,

மேடையில் வீற்றிருக்கும் இதர சான்றோர்களே,

இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளே,

சகோதர, சகோதரிகளே

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாது வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வங்கி மற்றும் அதன் உறுப்பினர்களுடனான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி 2016 ஜனவரியில் அதன் நிதிப் பரிவர்த்தனைகளை தொடங்கியது. மூன்றாண்டுகளுக்கு உள்ளாகவே, இந்த வங்கி 87 உறுப்பினர்களை கொண்டதாக வளர்ந்துள்ளது. 10,000 கோடி டாலர் தொகையை  உறுதியான மூலதனமாகக் கொண்டுள்ளது. இந்த வங்கி ஆசியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

ஆசிய நாடுகள் தமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக, கூட்டு முயற்சியில் உருவானது தான் ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி.  வளரும் நாடுகள் என்ற முறையில், நாம் அனைவரும் ஒரே மாதிரியான சவால்களை பகிர்ந்து கொள்கிறோம்.  அதில் ஒன்று, கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிதிஆதாரங்களை உருவாக்குவதாகும். “கட்டமைப்புப் பணிகளுக்கு நிதிஆதாரங்களை திரட்டுவது-கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பு” என்பது இந்த ஆண்டின் மையக்கருத்தாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.  நீடித்தக் கட்டமைப்பு வசதிகளுக்கு ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி வழங்கும் முதலீட்டுத் தொகை, பல நூறு கோடி மக்களின் வாழ்வில் உரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆசிய நாடுகளில் கல்வி, சுகாதாரம், நிதிச் சேவைகள் மற்றும் முறையான வேலைவாய்ப்பு கிடைப்பதில் இன்னும் பாகுபாடு நிலவுகிறது.

ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி போன்ற நிறுவனங்கள் வாயிலாக, பிராந்திய பன்முகத் தன்மையுடன் நிதி ஆதாரங்களை திரட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எரிசக்தி மற்றும் மின்சாரம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, கிராமப்புற கட்டமைப்பு, வேளாண் வளர்ச்சி, குடிநீர் மற்றும் துப்பரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் சரக்கு போக்குவரத்து போன்ற துறைகளுக்கு நீண்டகால நிதியுதவி தேவைப்படுகிறது. இந்த நிதிக்கான வட்டி வீதம், கட்டுபடியாகக் கூடியதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டும்.

குறைந்த காலகட்டத்தில், 12-க்கும் மேற்பட்ட நாடுகளில், சுமார் 400 கோடி டாலர் மதிப்பீட்டிலான, 25 திட்டங்களுக்கு ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இதுவொரு நல்ல தொடக்கம்.

10,000 கோடி டாலர் தொகையை உத்திரவாதமாகக் கொண்டு, உறுப்பு நாடுகளின் பெருமளவிலான கட்டமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக, ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கி, தற்போது 400 கோடி டாலர் அளவில் வழங்கிவரும் நிதியுதவியை, 2020-ஆம் ஆண்டுக்குள் 4,000 கோடி டாலர் அளவுக்கும், 2025-ஆம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலராகவும் அதிகரிக்க வேண்டும்.

இந்த நிதியுதவியை பெறுவதற்கான நடவடிக்கைகள் எளிமையானதாக இருப்பதுடன், விரைவில் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.   இதற்கு உயர்தரம் வாய்ந்த திட்டங்களும், வலுவான திட்ட  முன்மொழிவுகளும் அவசியம்.

பொருளாதார வளர்ச்சி மேலும் உள்ளார்ந்ததாகவும், நீடித்ததாகவும் அமைய, இந்தியாவும் ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் உறுதிபூண்டுள்ளதாக நான் நம்புகிறேன். இந்தியாவில், நாங்கள் அரசு – தனியார் ஒத்துழைப்பு என்ற புதுமையான நடைமுறையை பின்பற்றுவதுடன், கட்டமைப்பு கடன் நிதி மற்றும் கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள், கட்டமைப்புப் பணிகளுக்கு நிதியுதவி செய்கின்றன. நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட சிக்கல்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே, இதுபோன்ற உடமைகளுக்கு அமைப்பு ரீதியான முதலீடு, அதாவது ஓய்வூதியம், காப்பீடு மற்றும் அரசு நலநிதி போன்றவையும் அவசியமாகிறது.

மற்றொரு முன்முயற்சியாக, தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதியுதவிகளை கட்டமைப்புத் தேவைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்தும் நோக்கி்ல் இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டு்ளளது. இந்த நிதியத்திற்கு, ஆசியக் கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி 20,000 கோடி டாலர் வழங்க ஒப்புக் கொண்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியதாகும்.

சகோதர  சகோதரிகளே,

உலகில் முதலீட்டுக்கு உகந்த பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்கிறது.  முதலீட்டாளர்கள் வளர்ச்சி மற்றும் பெரிய அளவிலான பொருளாதார நிலைப்பாட்டைத்தான் எதிர்பார்க்கின்றனர். அரசியல் நிலைத்தன்மை மற்றும் அவர்களது முதலீட்டுக்கு உகந்த பாதுகாப்பான நடைமுறை ஆதரவை விரும்புகின்றனர். பெரிய அளவிலான செயல்பாடு மற்றும் உயர்மதிப்பு கூட்டுதல் போன்றவற்றுடன்,  பெரிய அளவிலான உள்நாட்டு சந்தை வாய்ப்புகள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் நல்ல ஆரோக்கியமான கட்டமைப்பு போன்றவையும் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன. இதுபோன்ற அளவீடுகளால், இந்தியா நல்ல இடத்தைப் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்களது சில அனுபவங்கள் மற்றும் சாதனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சர்வதேச பொருளாதார அரங்கில் இந்தியா வலுவான நாடாக உருவாகியிருப்பதுடன், உலகளாவிய வளர்ச்சிக்கும் வழிவகுத்து்ளளது. 2.8 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன், இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாக திகழ்கிறது. வாங்கும் திறன் அடிப்படையில், மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. 2017-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியா 7.7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2018-ல் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலையான விலைவாசி, வலுவான அந்நிய முதலீடு மற்றும் நிதிநிலைமை கட்டுக்குள் இருப்பதுதான் எங்களது பேரியல் பொருளாதாரத்தின் அடித்தளமாக திகழ்கிறது. எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நிதி ஒருங்கிணைப்பை தொடர்ந்து பின்பற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதத்தில் அரசு கடன் அளவு கணிசமாக குறைந்துள்ளது. நீ்ண்டகாலக் காத்திருப்புக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.

அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வலுவாக உள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 40 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு வலுவாக உள்ளது.  இந்தியப் பொருளாதாரம் மீதான உலகளாவிய நம்பிக்கை அதிகரித்து வருகிறது.  மொத்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவும் நிலையாக அதிகரித்து, கடந்த நான்காண்டுகளில் 22 ஆயிரத்து 200 கோடி டாலர் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடுகள் வரப்பெற்றுள்ளன.  ஐ.நா வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பின் உலக முதலீட்டு அறிக்கையின்படி, உலகின் அந்நிய நேரடி முதலீட்டிற்கு உகந்த முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து திகழ்கிறது.

சகோதர, சகோதரிகளே

அந்நிய முதலீட்டாளர்களின் பார்வையில், அரசியல் ரீதியிலான பொருளாதார நெருக்கடி குறைவான நாடாக இந்தியா கருதப்படுகிறது. முதலீடுகளை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்தியிருப்பதுடன், சீர்திருத்தங்களையும் உறுதியுடன் மேற்கொண்டு வருகிறோம்.  முதலீட்டாளர்களுக்கு உகந்த திறமையான, வெளிப்படையான, நம்பகமான மற்றும் கணிப்புக்கு உகந்த சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளோம்.

அந்நிய நேரடி முதலீட்டு நடைமுறைகளை நாங்கள் வெகுவாக தளர்த்தியிருக்கிறோம்.  தற்போது பெரும்பாலான துறைகளில், தானியங்கி முறையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, இந்தியா மேற்கொண்டு வரும் நடைமுறை மாற்றங்களில் குறி்ப்பிடத்தக்கதாகும். ஒரே தேசம், ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரிக் கட்டமைப்பை இது வெகுவாக குறைத்திருப்பதுடன், வெளிப்படைத் தன்மையை அதிகரித்து. சரக்குப் போக்குவரத்தை திறமையாக கையாளவும் வழிவகை செய்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவில் தொழில் தொடங்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை எளிமையாக்கியுள்ளது.

இதுபோன்ற மாற்றங்களையும், பிற மாற்றங்களையும் உலக சமுதாயம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உலக வங்கியின் ஆய்வறிக்கையின்படி,  தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழல் பற்றிய 2018-ஆம் ஆண்டுக்கான பட்டியலில், இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறி முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.

இந்தியச் சந்தையின் அளவும் வளர்ச்சியும் மிகப்பெரிய சக்தியாக உள்ளது. இந்தியாவின் தனி நபர் வருமானம் கடந்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காகி இருக்கிறது. 300 மில்லியனுக்கும் அதிகமான நடுத்தரப் பிரிவு நுகர்வோரை நாம் பெற்றிருக்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தேவைப்படும் முதலீட்டு  அளவும் பரிமாணமும் முதலீட்டாளர்களுக்கு பொருளாதாரத்தின் கூடுதல் ஆதாயத்தை அதிகப்படுத்துகிறது. உதாரணமாக இந்தியாவின் நகர்ப்புற  வீட்டு வசதி திட்ட இலக்கு பத்து மில்லியன் வீடுகளாக உள்ளது. பல நாடுகளை ஒன்றாக எடுத்துக் கொண்டு பார்க்கும் போது ஏற்படும் தேவையை விட இது அதிகமாக இருக்கிறது. எனவே, இந்தியாவின் வீடு கட்டும் முயற்சிகளில் புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாடு நமக்குக் கூடுதல் பலன் அளிக்கும்.

வளர்ச்சிக்கான இன்னொரு உதாரணம் இந்தியாவின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டமாகும். 2022-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்  திறன் இலக்காக 175  ஜிகாவாட் என நாம் நிர்ணயித்துள்ளோம். இதில் சூரிய எரிசக்தித் திறன் 100 ஜிகாவாட் ஆகும். இந்த இலக்குகளை விஞ்சும் அளவிற்கு நமது நிலை உள்ளது. 2017-ல் மரபு சார்ந்த எரிசக்தியைவிட, மரபு சாரா எரிசக்தித் திறனை நாம் கூடுதலாகப் பெற்றிருந்தோம். சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு என்ற வடிவில் நாம் ஒத்துழைப்பு முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு துவக்கத்தில் இந்தக் கூட்டமைப்பின் தொடக்க மாநாடு நடைபெற்றது. 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் ஆயிரம் ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி திறனுக்கு இந்த கூட்டமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இ-இயக்கத்திற்காக நாம் பாடுபட்டு வருகிறோம். தொழில்நுட்பம் என்பது குறிப்பாக சேமித்து வைப்பது தொடர்பான தொழில்நுட்பம் நம் முன் சவாலாக இருக்கிறது. இந்த ஆண்டு உலகளாவிய இயங்குதல் மாநாட்டை நாம் நடத்தவிருக்கிறோம். இது நாம் முன்னேறிச் செல்வதற்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவில் போக்குவரத்துத் தொடர்பை எல்லா நிலைகளிலும் நாம் மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம். பாரத்மாலா எனும் திட்டம் தேசிய சரக்குப் போக்குவரத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பதன் மூலம் சாலை வழியானத் தொடர்புகள் மேம்பாட்டை  நோக்கமாகக் கொண்டது. துறைமுகம் சார்ந்த போக்குவரத்துத் தொடர்பு, துறைமுக நவீன மயம், துறைமுகம் தொடர்பான தொழில்துறைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சாகர்மாலா திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம். நமது ரயில்வேயில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சரக்குப் போக்குவரத்து சாலைகள் அமைக்கப்படுகின்றன. உள்நாட்டு வர்த்தகத்தை உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து மூலம் செயல்படுத்தி தேசிய நீர்வழிகளின் திறனை மேம்படுத்துவதாக ஜல் மார்க் விகாஸ் திட்டம் இருக்கும். நமது உதான் திட்டம் மண்டல விமானப்போக்குவரத்தை மேம்படுத்தி வான்வழியானத் தொடர்பை அதிகப்படுத்தும் பணிகளை நோக்கியதாகும். போக்குவரத்து மற்றும் சரக்குகள் ஏற்றிச் செல்லப்  பயன்படுத்துவதற்கு சாத்தியமானதாக இந்தியாவின் நீண்ட கடற்கரைவழி உள்ளது.  இதுவே இன்னமும் முயற்சி செய்து பார்க்கப்படாததாகவும், கவனம் தேவைப்படுவதாகவும் இருப்பதாக நான் நம்புகிறேன்.

அடிப்படை கட்டமைப்புப் பற்றி வழக்கமான கருத்தை நாம் பேசும்போது இந்தியா செயல்படுத்திக் கொண்டிருக்கும் நவீனகால அடிப்படைக் கட்டமைப்பு பற்றியும் சிலவற்றை நான் குறிப்பிடவேண்டும். பாரத்நெட் என்பது நாட்டின் கடைகோடியில் உள்ளவர்களுக்கும் இணையதள தொடர்பு கிடைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. 460 மில்லியனுக்கும் அதிகமான இணையதள பயன்பாட்டாளர்களையும் 1.2 பில்லியன் செல்பேசிகளையும் இந்தியா கொண்டிருக்கிறது. டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதை நாம் ஊக்கப்படுத்தி வருகிறோம். இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் உண்மையான சக்தியைக் காட்டுவதாக பீம் செயலி, ரூபே அட்டை ஆகியவற்றுடன் பணம் செலுத்துவதற்கான ஐக்கிய ஒருங்கிணைப்பு முறை அல்லது யுபிஐ உள்ளது. பொதுமக்களுக்கு அவர்களின் செல்பேசி வழியாக நூற்றுக்கும் அதிகமான பொது சேவைகள் உமாங் செயலி மூலம் வழங்கப்படுகின்றன. கிராமப்புற-நகர்ப்புற டிஜிட்டல் பாகுபாட்டை நீக்கும் பாலமாக இருப்பது நமது டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் நோக்கமாகும்.

இந்தியப் பொருளாதாரத்தின் உயிரோட்டமாக இருப்பது வேளாண்மை, கிடங்குகள், தொடர்ச்சியான குளிர்ப்பதன இடங்கள், உணவுப் பதப்படுத்துதல், பயிர்க்காப்பீடு மற்றும் இவை தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். இந்தத் துறையில் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள ஏஐஐபி நம்மோடு இணைந்து செயல்படவும் விரும்புகிறது.

2022-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஏழைக்கும், வீடற்றவர்களுக்கும் கழிப்பறை, தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றுடன் வீடு கிடைப்பதை நாம் இலக்காக கொண்டிருக்கிறோம். கழிவுப்பொருள்களை பல்வேறு நிலைகளில் திறமையாக நிர்வகிப்பது பற்றியும் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கமான ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தையும் அண்மையில் நாம் தொடங்கி இருக்கிறோம். 100 மில்லியன் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 7,000 டாலர் பயன்கிடைக்க இது வகை செய்கிறது. சுகாதார வசதிகளை விரிவுப்படுத்துவதால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக வழி ஏற்படும். இது உயர்தரமான மருந்துகள் உற்பத்தியையும், பயன்பாட்டையும் மருத்துவ தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தியையும் அதிகரிக்கும். அழைப்பு, ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு ஐஇசி போன்ற துணை செயல்பாடுகளிலும் வேலைகள் உருவாக்கப்படும். ஒட்டுமொத்த சுகாதார தொழில்துறையும் ஊக்கம் பெறும்.

மேலும் சுகாதார பயன்களை அரசு உறுதி செய்திருப்பதன் மூலம் தற்போது மற்றவற்றை  நுகர்வதற்கும் முதலீடு செய்வதற்கும் குடும்பத்தின் சேமிப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏழைக் குடும்பத்தின் கைகளில் மாற்றத்தக்க வருவாய் அதிகரிப்பது பொருளாதாரத்தில் தேவையை அதிகரிக்க வழி வகுக்கும். இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய பயன்பாட்டு சக்தியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் பொருளாதார எழுச்சியின் வரலாறு ஆசியாவின் மற்ற பல பகுதிகளில் பிரதிபலிக்கிறது. தற்போது உலகப் பொருளாதார செயல்பாட்டின் மையமாக இதனை இந்தக் கண்டம்  காண்கிறது. இது உலகின் மிக முக்கியமான வளர்ச்சி எந்திரமாக மாறி வருகிறது. உண்மையில் பலரும் சொல்வதுபோல் ‘ஆசிய நூற்றாண்டு’ என்பதற்கேற்ப நாம் வாழ்ந்து வருகிறோம்.

ஒரு ‘புதிய இந்தியா’ எழுந்து வருகிறது. அனைவருக்கும் பொருளாதார வாய்ப்பு அறிவுசார் பொருளாதாரம் முழுமையான வளர்ச்சி, நல்ல எதிர்காலம், விரிவான மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு என்கிற தூண்களின் மீது இந்தியா நின்றுகொண்டிருக்கிறது. ஏஐஐபி உள்ளிட்ட நமது வளர்ச்சிக்கான பங்குதாரர்களுடன் நமது தொடர்ச்சியான இணைப்போடு நாம் முன்னேறிச் செல்வோம்.

நிறைவாக இந்த அமைப்பின் கலந்துரையாடல்கள் பயன் அளிப்பவையாகவும் அனைவரையும் வளப்படுத்துவதாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

நன்றி.

 

                                *****