பாரத் மாதா கி ஜெய் !
பாரத் மாதா கி ஜெய் !
பாரத் மாதா கி ஜெய் !
அஸ்ஸாம் முதலமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால் அவர்களே, மத்திய அமைச்சர் திரு.ராமேஷ்வர் தேளி அவர்களே, அஸ்ஸாம் மாநில அமைச்சர்கள் திரு.ஹிமந்த பிஸ்வ சர்மா, திரு.அதுல்போரா, திரு.கேஷப் மகந்தா, திரு.ரஞ்சித் தத்தா, போடோலாந்து பிராந்திய அமைப்பின் தலைவர் திரு.பிரமோத் போரோ, மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே.
எனதருமை சகோதர, சகோதரிகளே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஏழைகள் மற்றும் சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட பிரிவு மக்களுக்கு நிலங்களை குத்தகைக்கு விடும் திட்டத்தில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் அஸ்ஸாம் வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அஸ்ஸாம் மக்கள் காட்டும் பாசமும், அன்பும், என்னை மீண்டும் மீண்டும் அஸ்ஸாமுக்கு வரவழைக்கிறது என்று அப்போது கூறினேன். தற்போது, மீண்டும் ஒருமுறை நான் உங்கள் அனைவரையும் சந்தித்து, வாழ்த்துவதற்காக வந்துள்ளேன். தேகியாஜுலி எவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டு, பின்னர் அது டுவிட் செய்யப்பட்டுள்ளது என்பதை சமூக ஊடகங்களில் நான் பார்த்தேன். நீங்கள், ஏராளமான விளக்குகளை ஏற்றியிருந்தீர்கள். அஸ்ஸாம் மக்கள் காட்டும் இந்த அன்புக்கு நான் தலைவணங்குகிறேன். அஸ்ஸாமின் வளர்ச்சிக்ககாக அதிவிரைவாக பணியாற்றி, இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நான் இங்கு வருவதற்கான வாய்ப்பை உருவாக்கிவரும் முதலமைச்சர் சர்பானந்தா, ஹிமந்தா, ரஞ்சித் தத்தா, மற்றும் அரசு அதிகாரிகள், பிஜேபி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்ட விரும்புகிறேன். இன்றைய தினம் எனக்கு மிகச் சிறப்பான தினம் என்பதற்கு மற்றொரு காரணம் உண்டு! புனித பூமியான சோனித்பூர் – தேகியாஜுலி முன்பு தலைவணங்கும் வாய்ப்பு, இன்று எனக்குக் கிடைத்துள்ளது. ருத்ரபாதா கோவில் அருகே இருந்து தான் அஸ்ஸாமின் நூற்றாண்டு சிறப்புமிக்க வரலாறு நமக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புனித பூமியில் தான் அஸ்ஸாம் மக்கள், நமக்கு எதிரான படையெடுப்பாளர்களை விரட்டியடித்து, தங்களது ஒற்றுமை, பலம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்தினர். இந்த புனித பூமியில் தான், 1942-ம் ஆண்டு, அஸ்ஸாமைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாட்டிற்காகவும், நமது மூவர்ணக் கொடியை பாதுகாக்கவும் தங்களது இன்னுயிரை ஈந்தனர். அந்த தியாகிகளைப் பற்றி பூபேன் ஹசாரிகா கூறும்போது :
भारत हिंहहआजि जाग्रत हय।
प्रति रक्त बिन्दुते,
हहस्र श्वहीदर
हाहत प्रतिज्ञाओ उज्वल हय।
அதாவது, இந்தியாவின் சிங்கங்கள் இன்று விழித்தெழுந்துவிட்டன. இந்த தியாகிகள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும், அவர்களது துணிவும், நமது எண்ணங்களை வலுப்படுத்துகின்றன. எனவே, சோனித்பூர் பூமி, தியாகிகளின் வீரதீரம், அஸ்ஸாமின் கடந்த காலம் போன்றவை எனது அறிவைத் தூண்டி, அஸ்ஸாம் மக்களைப் பற்றி எனக்குள் மீண்டும் மீண்டும் பெருமிதத்தை ஏற்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளார்.
நண்பர்களே,
நாட்டின் விடியல் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தான் தொடங்குகிறது என்பதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். ஆனால், வடகிழக்கு மற்றும் அஸ்ஸாமின் வளர்ச்சி என்ற விடியலுக்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது தான் உண்மை. ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும், வன்முறை, இழப்பு, மன அழுத்தம், பாகுபாடு, ஒருசார்பு மற்றும் போராட்டங்களைப் புறந்தள்ளி, தற்போது வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன. இதில், அஸ்ஸாம் மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. போடோ அமைதி உடன்படிக்கையின் தொடர்ச்சியாக, சமீபத்தில் நடைபெற்ற போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல்கள், வளர்ச்சி மற்றும் நம்பிக்கை குறித்த புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. அஸ்ஸாமின் அதிர்ஷ்டத்திலும், வருங்காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்பதற்கு சான்றாக இந்நாள் அமைந்துள்ளது. இன்று ஒருபுறம், அஸ்ஸாமிற்கு பிஸ்வநாத் மற்றும் சராய்தியோ ஆகிய இடங்களில் இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்கும் வேளையில், மறுபுறம், அஸோம் மாலா மூலம், நவீன கட்டமைப்புப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அஸ்ஸாமின் வளர்ச்சிப் பயணத்தில், இன்றைய தினம் முக்கியமான நாளாகும். இந்த நன்னாளில், அஸ்ஸாம் மக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
நண்பர்களே,
ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் மன உறுதி, எத்தகைய நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு அஸ்ஸாம் சிறந்த உதாரணமாகும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை, அஸ்ஸாமின் தொலைதூரப் பகுதி மக்களுக்கு, சிறந்த மருத்துவமனைகள் என்பது ஒரு கனவாகவே இருந்ததை நீங்கள் நினைவிற்கொள்ள வேண்டும். சிறந்த மருத்துவமனைகள், நல்ல சிகிச்சை கிடைக்க, பல மணி நேரப் பயணம், நீண்ட நேரம் காத்துக் கிடக்க வேண்டியிருந்ததுடன், எண்ணற்ற தடைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது! மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே, தங்களது கவலையாக இருந்தது என்று அஸ்ஸாம் மக்கள் என்னிடம் கூறியுள்ளனர்! ஆனால், இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய தருணம் தற்போது வேகமாக நெருங்கி வருகிறது. இந்த மாற்றத்தை நீங்கள் எளிதாக பார்த்தும், உணர்ந்தும் வருகிறீர்கள். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து கடந்த 70 ஆண்டுகளில், அதாவது 2016-ம் ஆண்டு வரை, அஸ்ஸாமில் ஆறு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், அஸ்ஸாமில் மேலும் ஆறு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட அஸ்ஸாம் மற்றும் அஸ்ஸாமின் மேல் பகுதி மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, பிஸ்வநாத் மற்றும் சராய்தியோவில், மேலும் இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகள், நவீன சுகாதார சேவைகள் கிடைக்கும் இடமாகத் திகழ்வேதாடு, அடுத்த சில ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், டாக்டர்களாக உருவெடுப்பார்கள். 2016-ம் ஆண்டு வரை, அஸ்ஸாமில் 725 எம்பிபிஎஸ் இடங்கள் தான் இருந்தன. ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியதும், அஸ்ஸாமிற்கு ஆண்டுதோறும் 1600 புதிய மருத்துவர்கள் கிடைப்பார்கள். எனக்கு மற்றொரு கனவும் உள்ளது. அது மாபெரும் துணிச்சலானதாகக் கூட இருக்கலாம், ஆனால், நம் நாட்டிலுள்ள கிராமப்புற மற்றும் ஏழைகளின் வீடுகளில் அறிவாற்றலுக்குப் பஞ்சமில்லை. அவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. சுதந்திர இந்தியா 75-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போது, என்னிடம் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலாவது அவர்களது தாய்மொழியில் பாடம் பயிற்றுவிப்பதைத் தொடங்க வேண்டும். அஸ்ஸாம் மொழியில் படித்து ஒருத்தராவது சிறந்த மருத்துவராக முடியாதா ? நாடு தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள வேளையில், அஸ்ஸாம் மக்களின் சார்பில் நான் ஒரு உறுதியை அளிக்க விரும்புகிறேன். அஸ்ஸாமில், உள்ளூர் மொழியில் பயிற்றுவிக்கக் கூடிய ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை நாம் தொடங்குவோம், பின்னர் அது படிப்படியாக அதிகரிக்கும். இதை, யாராலும் தடுக்க முடியாது. இதன் மூலம், மக்கள் சிகிச்சைகளுக்காக, நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்வது தவிர்க்கப்படுவதோடு, உள்ளூரிலேயே தரமான சிகிச்சை கிடைக்கவும் உதவிகரமாக இருக்கும்.
நண்பர்களே,
குவஹாத்தி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஒன்றரை அல்லது இரண்டாண்டுகளுக்குள் இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும். எம்.பி.பி.எஸ் வகுப்பின் முதலாவது அணி தற்போதைய எய்ம்ஸ் வளாகத்திலிருந்தே வெளிவருவார்கள். அடுத்த சில ஆண்டுகளில், புதிய வளாகம் தயாரானவுடன், நவீன மருத்துவ சிகிச்சை கிடைக்கும் இடமாக குவஹாத்தி உருவெடுக்கும். குவஹாத்தி எய்ம்ஸ், அஸ்ஸாம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த வடகிழக்கு மாநில மக்களின் வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இன்று நான் எய்ம்ஸ் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். குவஹாத்தியிலேயே ஒரு எய்ம்ஸ் அமைக்கப்பட்டிருக்குமானால், நீங்கள் எத்தனை பேர் பயனடைவீர்கள் என்பதைப் பற்றி, முந்தைய அரசுகள் ஏன் சிந்தித்துப் பார்க்கவில்லை ? அவர்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கு அப்பால் வெகு தொலைவில் இருந்ததுடன், உங்களது பாதிப்புகள் மற்றும் வேதனைகளை ஒருபோதும் அவர்கள் உணர்ந்ததில்லை.
நண்பர்களே,
இன்று, அஸ்ஸாமின் வளர்ச்சிக்காக, தற்போதைய மத்திய அரசு, அக்கறையுடன் பணியாற்றி வருகிறது. அஸ்ஸாம், நாட்டிற்கு தோளோடு தோள் கொடுத்து முன்னேறி வருகிறது. ஆயுஷ்மான் பரத், மக்கள் மருந்தகம், பிரதமரின் தேசிய டாயலிசிஸ் திட்டம் அல்லது சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் போன்றவற்றால் ஏற்பட்டு வரும் மாற்றத்தை நாடு கண்கூடாகப் பார்த்து வருகிறது, அத்தகைய மாற்றம் அஸ்ஸாமிலும் தெரிகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால், தற்போது அஸ்ஸாமிலுள்ள 1.25 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். அஸ்ஸாமிலுள்ள மேலும் 350 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற குறுகிய காலத்திற்குள், அஸ்ஸாமிலுள்ள 1.5 லட்சம் ஏழைகள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். இந்தத் திட்டங்கள் அனைத்தும், மருத்துவ சிகிச்சைகள் மூலம் அஸ்ஸாமிலுள்ள ஏழை மக்களுக்கு, கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளன. ஏழைகளின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் தவிர, அஸ்ஸாம் அரசின் ‘அடல் அம்ரித் அபியான்‘ திட்டம் மூலமாகவும் மக்கள் பயனடைகின்றனர். இத்திட்டத்தின் கீழ், ஏழைகள் மட்டுமின்றி, பொதுப் பிரிவு மக்களுக்கும் , மிகக் குறைந்த ப்ரீமியத்தில் சுகாதாரக் காப்பீடு வசதி வழங்கப்படுகிறது. அதேவேளையில், அஸ்ஸாமின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டு, ஏழை மக்களின் அடிப்படை சுகாதாரத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதுவரை, அஸ்ஸாமைச் சேர்ந்த 55 லட்சத்திற்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு அடிப்படை சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
சுகாதார சேவைகளின் அவசியத்தை இந்த நாடு உணர்ந்திருப்பதோடு, கொரோனா காலகட்டத்தில் நவீன வசதிகளின் அவசியத்தையும் உணர்ந்துள்ளது. இந்தியா, கொரோனாவை எதிர்கொண்ட விதத்தையும், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் சக்திவாய்ந்த தடுப்பூசி தயாரிப்பு குறித்தும், ஒட்டுமொத்த உலகமும் பாராட்டி வருகிறது. கொரோனாவிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகள் காரணமாக, நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் உயிரையும், பத்திரமாகப் பாதுகாப்பதற்கான பணிகளை, இந்த நாடு துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. இதன் மகத்துவத்தை நீங்கள் இந்தாண்டு நிதிநிலை அறிக்கையிலும் பார்த்திருப்பீர்கள். இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில், இதுவரை இல்லாத வகையில், சுகாதாரத் துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், ஒருங்கிணைந்த பரிசோதனைக் கூடங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்களுக்கு பேருதவியாக அமைவதோடு, அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்காக நீண்டதொலைவு செல்வது தவிர்க்கப்படும்.
நண்பர்களே,
அஸ்ஸாமிலுள்ள தேயிலைத் தோட்டங்கள், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான முக்கிய மையங்கள் ஆகும். சோனித்பூரில் உற்பத்தியாகும் சிவப்புத் தேயிலை, அதன் தனித்துவமான சுவைக்குப் பிரசித்திபெற்றதாகும். சோனித்பூர் மற்றும் அஸ்ஸாம் தேயிலையின் தனிச்சுவையை, என்னைத் தவிர சிறப்பாக உணர்ந்திருப்பவர்கள் வேறு யாராக இருக்க முடியும்? எனவே, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் முன்னேற்றம் தான் ஒட்டுமொத்த அஸ்ஸாமின் முன்னேற்றம் என்று நான் கருதுகிறேன். இந்த நிலையை அடைய, அஸ்ஸாம் அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொண்டு வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நேற்று கூட, அஸ்ஸாம் சா பகிச்சார் தன் புரஷ்கார் மேளா திட்டத்தின்கீழ், அஸ்ஸாமிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 7.5 லட்சம் பேரின் வங்கிக் கணக்கில், கோடிக்கணக்கான ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, சிறப்புத் திட்டத்தின்கீழ் நேரடி உதவி வழங்கப்படுகிறது. நடமாடும் மருத்துவக் குழுக்களும், தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேயிலைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருககு இலவச மருந்துகளும் வழங்கப்படுகின்றன. அஸ்ஸாம் அரசின் இந்த முயற்சிகளுக்கு இணையாக, மத்திய நிதிநிலை அறிக்கையிலும், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் நமது சகோதர சகோதரிகளுக்கான ஆயிரம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்! இந்த நிதி, நீங்கள் பெற்றுவரும் வசதிகளை அதிகரிப்பதோடு, தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.
நண்பர்களே,
தேயிலைத் தோட்டத் தொழிலளர்களைப் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், அன்மைக் காலமாக நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சதித் திட்டங்களைப் பற்றியும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அந்த சதிகாரர்கள், நாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக, இந்தியத் தேயிலையைக் கூட விட்டுவைக்கவில்லை. நீங்கள் செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள், இந்த சதிகாரர்கள், இந்தியத் தேயிலையின் நற்பெயருக்கு திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர். உலகெங்கும் இந்தியத் தேயிலை மீதான நல்லெண்ணத்திற்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர். இந்தியாவின் அடையாளமாக கருதப்படும் தேயிலைக்கு அவப்பெயர் ஏற்படுத்த, சில அன்னிய சக்திகள் சதித் திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுபோன்ற தாக்குதலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ? இதுபோன்ற தாக்குதலுக்குப் பிறகும், அமைதியாக இருப்பவர்களை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ? இதுபோன்ற சக்திகளைப் பாராட்டுவோரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ? ஒவ்வொருவரும் இதற்குப் பதிலளிக்க வேண்டும். இந்தியத் தேயிலையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடிவு செய்திருப்போர் மற்றும் அவர்களுக்குச் சாதகமாக மவுனம் சாதிக்கும் அரசியல் கட்சிகளிடமிருந்து, ஒவ்வொரு தேயிலைத் தோட்டமும் பதிலைப் பெற்றாக வேண்டும். இந்தியத் தேனீரைப் பருகும் ஒவ்வொருவரும் இதற்குப் பதில் கேட்க வேண்டும். இதுபோன்ற சதிகாரர்களின் நாசவேலைகள் வெற்றிபெற இந்த நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை அஸ்ஸாம் மண்ணிலிருநது நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனதருமை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், இந்தப் போரில் நிச்சயம் வெற்றியடைவார்கள். இந்திய தேயிலை மீதான இதுபோன்ற தாக்கதல்கள், நமது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கடின உழைப்பிற்கு இணையாக முடியாது. நாடு தொடர்ந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் செல்லும். அதேபோன்று, அஸ்ஸாம் மாநிலமும், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் புதிய உச்சத்தை எட்டும். அஸ்ஸாமின் வளர்ச்சிச் சக்கரம், தொடர்ந்து இதே வேகத்தில் சுழலும்.
நண்பர்களே,
தற்போது, அஸ்ஸாமின் ஒவ்வொரு துறையிலும் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, ஒவ்வொரு துறையும் வளர்ச்சி பெற்று வருகிறது, எனினும், அஸ்ஸாம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டியது மிகவும் அவசியம். நவீன சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள், அஸ்ஸாமின் திறமையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும். இதனைக் கருத்திற்கொண்டு தான், ‘பாரத் மாலா‘ திட்டத்தைப் போன்றே, தற்போது ‘அஸோம் மாலா‘ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில், இந்த அஸோம் மாலா திட்டம், உங்களது எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளைப் பூர்த்தி செய்வதோடு, அனைத்துக் கிராமங்களும், அகலமான சாலைகள், பிரதான சாலைகளுடன் இணைக்கப்பட்டு, நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் உள்ளது போன்ற சாலைகள் அமைக்கப்படும்போது, உங்களது திறமையையும் மேம்படுத்தும். கடந்த சில ஆண்டுகளில் மட்டும், அஸ்ஸாமில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு சாலைகள் மற்றும் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று, பூபேன் ஹசாரிகா பாலம் மற்றும் சராய்காட் பாலம் ஆகியவை, அஸ்ஸாமின் புதிய அடையாளமாகத் திகழ்கின்றன. இந்தப் பணிகள், வரும் நாட்களில் மேலும் விரைவுபடுத்தப்படும். வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை துரிதப்படுத்தும் நோக்கில், இம்முறை நிதிநிலை அறிக்கையில், அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருபுறம், நவீன கட்டமைப்பு வசதிக்கான பணிகளும், மறுபுறம், ‘அஸோம் மாலா‘ போன்ற திட்டங்கள் வாயிலாக இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன ! வரும் நாட்களில் அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகளை நினைத்துப் பாருங்கள், எத்தனை இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறப் போகின்றனர். நெடுஞ்சாலை வசதி மேம்படும்போது, இணைப்புச் சாலைகளும் மேம்பட்டு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, சுற்றுலா போன்ற துறைகளும் வளர்ச்சியடையும். இதுவும், நமது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அஸ்ஸாமின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கவும் உதவும்.
நண்பர்களே,
பிரசித்திபெற்ற அஸ்ஸாம் கவிஞர் ரூப்கொன்வர் ஜோதி பிரசாத்
मेरी नया भारत की,
नया छवि,
जागा रे,
जागा रे,
தற்போது இந்த வரிகளை நனவாக்கும் விதமாக, புதிய இந்தியாவை விழித்தெழச் செய்வோம். இந்த புதிய இந்தியா, சுயசார்பு இந்தியாவாக இருக்கும், இந்த புதிய இந்தியா, அஸ்ஸாமை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த நல்வாழ்த்துகளோடு, உங்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றி கூறிக் கொள்கிறேன்! உங்கள் இரு கைகளையும் இணைத்து, முழு பலத்துடன் ஒலி எழுப்புங்கள், பாரத் மாதா கி ஜெய். பாரத் மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய், மிக்க நன்றி.
*****
Addressing a public meeting in Sonitpur district, Assam. https://t.co/LnRt81JyB6
— Narendra Modi (@narendramodi) February 7, 2021
Tea is India’s pride. It is closely linked with Assam.
— Narendra Modi (@narendramodi) February 7, 2021
But, sad to see some people running grand campaigns against Indian tea. pic.twitter.com/AHHZDmmBwd