Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அலைக்கற்றை வர்த்தகம் : தொலைதொடர்புத்துறையில் சீர்த்திருத்தம்


அலைக்கற்றை பங்கீடு செய்வதற்கான முடிவையடுத்து, அலைக்கற்றை வர்த்தகத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய தொலைதொடர்பு வழிநடத்து ஆணையம் அளித்த பரிந்துரையின்படி மத்திய தொலைதொடர்புத் துறை அளித்த ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு முடிவுகளை தொடர்ந்து தொலைதொடர்பு பிரிவு அலைக்கற்றை பயன்பாட்டை சிறந்த முறையில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலைக்கற்றை வர்த்தகத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. தற்போது அலைக்கற்றைகளை பயன்படுத்தும் சேவை நிறுவனங்கள் மட்டும் இதில் பங்கு பெற முடியும். இரண்டு சேவை நிறுவனங்களுக்கு இடையே அலைக்கற்றையை ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்தவுடன் அதை வாங்கும் நிறுவனம் அதை தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்கப்படும்.

2. அலைக்கற்றை ஒதுக்கீட்டின் போது அளிக்கப்பட்ட கால வரையறை அதை அலைக்கற்றை வர்த்தகத்தின் மூலம் விற்றபின் அலைக்கற்றையை வாங்கிய நிறுவனத்திற்கும் அது செல்லுபடியாகும்.

3. அலைக்கற்றை வர்த்தகத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டபின்னர் அதை விற்ற நிறுவனம் அனைத்து எஞ்சிய தொகைகளையும் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், அலைக்கற்றையை வாங்கிய நிறுவனம் அந்த தொகையை எந்த நாளிலிருந்து வாங்கியதோ அந்நாளிலிருந்து ஈடுசெய்ய வேண்டும். அதற்கு பின்பும் ஏதாவது தொகையை அரசுக்கு கொடுக்க வேண்டியிருந்தால் அதையும் அலைக்கற்றையை வாங்கிய நிறுவனத்திடமிருந்து அரசு பெற்றுக் கொள்ளலாம்.

4. உரிமம் பெற்ற நிறுவனம் விதிமுறைகளுக்கு உட்பட்டு அலைக்கற்றை வர்த்தகத்தை செயல்படுத்த வேண்டும். உரிமத்தில் காணப்பட்ட விதிமுறைகள் மீறப்பட்டால் அந்த நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

5. உரிமம் தரப்பட்ட சேவைப்பகுதியில் தான் அலைக்கற்றை வர்த்தகம் அனுமதிக்கப்படுகிறது. அலைக்கற்றையை விற்பனை செய்யும் நிறுவனம் அதற்கு உரிமம் தரப்பட்ட பகுதியின் ஒரு பிரிவை விற்பனை செய்தால் விற்பனைக்கு பின்னர் எஞ்சிய பகுதிக்கு உண்டான உரிமைகளையும் விற்பனை செய்தவருக்கு அளிக்க வேண்டும். குறிப்பிட்ட சேவைப் பிரிவிற்கு உரிமம் தரப்பட்ட நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபடும் போது அந்த நிறுவனங்களின் விண்ணப்பங்களை பெறும் போது குறிப்பிடப்பட்ட விதிமுறைகள், வர்த்தகம் செய்த பின்னர் அதை வாங்கிய நிறுவனத்திற்கும் பொருந்தும்.

6. குறிப்பிட்ட அலைக்கற்றைகளுக்கு உரிமம் பெற்ற நிறுவனம் அவற்றை விற்க தகுதி படைத்ததாகிறது.

7. 2010ஆம் ஆண்டு அல்லது அதற்கு பிறகு ஏலத்தின் மூலம் பெறப்பட்ட அலைக்கற்றைகளை மட்டும் வர்த்தகத்தில் ஈடுபடுத்தலாம். சந்தை அடிப்படையில் உள்ள தொகையை அளித்த நிறுவனமும் குறிப்பிட்ட அலைக்கற்றைகளை வர்த்தகம் செய்யலாம். 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 800 மெகாஹெர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றையை ஏலத்தின் மூலம் எடுத்த நிறுவனங்கள் அந்த அலைக்கற்றையை வர்த்தகம் செய்ய தற்போதைய ஏலத்தொகைக்கும், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் செலுத்தப்பட்ட ஏலத்தொகைக்கும் உள்ள எஞ்சிய தொகையை செலுத்த வேண்டும்.

8. அலைக்கற்றை வர்த்தகத்தின் 800 / 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை வாங்கிய நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
9. விண்ணப்பங்களை பெறும் போது குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் அலைக்கற்றை வர்த்தகம் செய்யப்பட்ட பின்னர் அதை பெற்ற நிறுவனத்திற்கும் பொருந்தும்.

10. தற்போது தொலைதொடர்பு சேவையை அளிக்கும் நிறுவனம் அலைக்கற்றையின் ஒரு பகுதியை மட்டும் விற்றால் அலைக்கற்றை வர்த்தகத்திற்கு பிறகு மீதமுள்ள எஞ்சிய தொகையை (ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்ட அலைக்கற்றைக்கு உரிய தொகையை பின்னர் அளிப்பதாக உள்ள ஏற்பாட்டின்படி) இரு நிறுவனங்களும் அளிக்க வேண்டும்.

11. அலைக்கற்றை வர்த்தகத்தில் அலைக்கற்றையை பெறுவோர் மொத்த அலைக்கற்றை அளவை தாண்டக்கூடாது. வர்த்தகத்தின்போது பெறப்பட்ட அலைக்கற்றைக்கும் இதில் அடங்கும்.

12. அலைக்கற்றையை விற்கும் நிறுவனம் தவணைத் தொகைகளை முழுவதுமாக செலுத்தி இருக்க வேண்டும். (ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்ட அலைக்கற்றைக்கு உரிய தொகையை பின்னர் வழங்குவதாக உள்ள ஏற்பாட்டின்படி)

13. விற்பனை செய்ய இருக்கும் அலைக்கற்றைகள் குறித்து வழக்குகள் ஏதேனும் இருந்தால் சட்ட விதிமுறைகளின்படி விற்பனை செய்பவர் அதற்குரிய உரிமைகளையும் கடன் பொறுப்புகளையும் வாங்குபவருக்கு மாற்ற வேண்டும். அனுமதி பெறுபவரின் நலன்கள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் வர்த்தகத்திற்கான அனுமதி வழங்கப்படும்.

14. அலைக்கற்றையை வர்த்தகம் செய்ய விரும்பும் நிறுவனம் ஏலத்தின் மூலம் அந்த அலைக்கற்றையை எடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்புதான் வர்த்தகத்தில் ஈடுபட முடியும். அல்லது அதற்கான வர்த்தகம் செய்வதற்காக மாற்றப்பட்ட உரிமையை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு மாற்றப்பட வேண்டும் எனில் அதற்கான சந்தை விலையை அளிக்க வேண்டும். இதற்கும் இரண்டு ஆண்டுகள் என்கின்ற விதி பொருந்தும்.

15. அலைக்கற்றை வர்த்தகத்தின் மூலம் அது மாற்றப்பட வேண்டுமெனில் அரசுக்கு அதன் சந்தை விலையில் ஒரு சதவீதம் அளிக்கப்பட வேண்டும். இந்த தொகை திருப்பித் தரப்பட மாட்டாது. இந்த தொகை உரிமம் மற்றும் அலைக்கற்றை பயன்படுத்தும் கட்டணங்கள் ஆகியவற்றில் சரி செய்யப்படும்.

16. அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் அதிர்வு எண்களை மாற்றிக் கொண்டாலோ அல்லது அவற்றை திருத்தி அமைத்தாலோ அது அலைக்கற்றை வர்த்தகத்திற்கு உட்படாது. விண்ணப்பங்களை பெறும்போது காணப்பட்ட விதிமுறைகள் மட்டும்தான் இதற்கு பொருந்தும்.

17. வர்த்தகத்தில் ஈடுபட்ட பின் அலைக்கற்றை பெற்ற நிறுவனம் முன்பு விதித்திருந்த அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணங்கணை தொடர்ந்து செலுத்த வேண்டும். அலைக்கற்றை வர்த்தகத்தின் மூலம் பெற்ற அலைக்கற்றை ஏலத்தின் மூலம் எடுத்ததாக கருதப்படும்.

18. அலைக்கற்றையை விற்கும் நிறுவனமும், அதை வாங்கும் நிறுவனமும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முன்குறைந்தது 45 நாட்களுக்கு முன்பு அரசுக்கு முன்னறிவிப்பை அளிக்க வேண்டும். இரண்டு நிறுவனங்களும் உரிமம் மற்றும் அலைக்கற்றை வர்த்தகத்தின் விதிமுறைகளை ஏற்றுக் கொள்வது பற்றிய உறுதிமொழியை அளிக்க வேண்டும். விதிமுறைகளின் படியோ வழிமுறைகளின் படியோ நிறுவனங்கள் செயல்படவில்லை என அறியப்பட்டால் வர்த்தக ஒப்பந்தத்தை அரசு நீக்கிவிடலாம்.

2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய அரசு அலைக்கற்றை வர்த்தகம் குறித்து ஒப்புதல் அளித்திருந்தாலும் அதற்கான வழிமுறைகளை அப்போது வெளியிடப்படாததால் அக்கொள்கை அமல்படுத்தப்படாமல் இருந்தது.

தற்போதைய அரசு இந்தப் பிரச்சினைக் குறித்து தீவிரமாக பரிசீலித்தது. இதனால் போட்டியிடக்கூடிய தன்மை புதிய கண்ணோட்டங்கள், சிறந்த சேவை மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் தன்மை நுகர்வோருக்கு எளிதாகவும், மலிவான கட்டணங்களிலும் கிடைக்கும். இதனால் நிறுவனங்கள் இந்தியாவில் வர்த்தகத்தை நன்கு செயல்படுத்த முடியும். இந்தியாவில் வர்த்தகம் பெருகவேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டோடு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி தரமான சேவையும் கிடைக்கும்.

பின்னணி:

பல நாடுகளில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்கு அந்தந்த நாட்டு அரசுகள் தொலைத்தொடர்புத்துறையில் பல்வேறு வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு பிரிவில், அதனால் ஏற்படும் பயன்கள் அலைக்கற்றையின் தேவைகள் அப்போது இருந்த வழிமுறைகள் ஆகியவை போதுமானதாக இல்லை என்று உணரப்பட்டது. மேலும், உரிமம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை சந்தைக்கு தேவையானவாறு மாற்ற வேண்டிய கட்டாயமும் இருந்தது. இந்தியாவிலும் அலைக்கற்றை சேவைகளின் விதிமுறைகளை தற்போதைய தேவைக்கு ஏற்றபடி மாற்றப்படுவதற்கான கவனம் செலுத்தப்பட்டது. ஏனெனில், சந்தைக்கு ஏற்றபடி வாய்ப்புகளை ஏற்படுத்தவும், அலைக்கற்றைகளை சிறந்த முறையில் பயன்படுத்தவும், நுகர்வோருக்கு சிறந்த சேவைகளை அளிக்கவும் இதனால் இயலும்.

இந்தியாவில் 20 ஆண்டு காலத்திற்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த காலகட்டத்தில், சில நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களைவிட விரைவாக முன்னேற்றமடைகின்றன. இதனால் சில நிறுவனங்கள் அலைக்கற்றைகளை சரியான அளவு பயன்படுத்தப்பட இயலவில்லை. சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் மேலும் தேவைப்படுகின்றன. மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் இந்தியாவில் அலைக்கற்றைகள் குறைந்த அளவே கிடைக்கின்றன. ஆகவே, அலைக்கற்றை பங்கீடு, அலைக்கற்றை வர்த்தகம் ஆகிய இரண்டும் மிக அவசியமாகிறது. இதனால் சேவையின் தரம் உயருகிறது.

அலைக்கற்றை வர்த்தகத்தின் மூலம் ஒரு நிறுவனம் அலைக்கற்றையை வேறொரு நிறுவனத்திற்கு உரிமைகளோடு மாற்ற இயலும். இதனால் அலைக்கற்றையின் பயன்பாடு அதிகரிப்பதோடு அலைக்கற்றைகள் தேவையான நிறுவனத்திற்கு அளிக்கப்படுகிறது. நுகர்வோருக்கும் சேவையில் முன்னேற்றம் ஏற்படுகிறது.

***********