Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை

அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை


பாரத மாதாவுக்கு வணக்கம்.

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் அவர்களே, பிரபலமான மற்றும் அதிரடியாக செயல்படும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா அவர்களே, உத்தரப்பிரதேச அரசின் அமைச்சர்களே, மற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, அலிகாரைச் சேர்ந்த எனது அருமை சகோதர, சகோதரிகளே.

அலிகார் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்துக்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இன்று ராதா அஷ்டமியும் கூட. இந்த தருணம், மேலும் நமக்கு ஆசி வழங்குகிறது.

 

இந்த புனித நாளில் பல்வேறு தொடர் வளர்ச்சிப் பணிகளை நாம் தொடங்கியிருப்பது நமக்கு கிடைத்த பாக்கியமாக உள்ளது. எந்தவொரு நல்ல பணியையும் நாம் மேற்கொள்ளும்போது, நமது மூதாதையர்களை நினைவுகூர்வது நமது கலாச்சாரம். இந்த மண்ணின் மாபெரும் மகனான மறைந்த கல்யாண்சிங் அவர்கள் இல்லாததை எண்ணி வருந்துகிறேன். கல்யாண்சிங் அவர்கள் நம்முடன் இருந்திருந்தால், பாதுகாப்புத் துறையில் அலிகாரும் இடம்பிடிப்பதையும், ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநில பல்கலைக் கழகம் அமைக்கப்படுவதையும் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவரது ஆன்மா நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கும்.

 

நண்பர்களே,

 

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட இந்திய வரலாற்றில், தங்களது தியாகம் மற்றும் உறுதியான உணர்வுடன் ஒவ்வொரு நேரத்திலும் இதுபோன்ற தேசபக்தர்கள் இந்தியாவுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளனர். நமது சுதந்திரப் போராட்டத்துக்காக ஏராளமான மாபெரும் ஆளுமைகள் தங்களது அனைத்தையும் வழங்கியுள்ளனர்.

 

இன்று, நமது நாடு 75-ம் ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் நிலையில், இந்த முயற்சிகளுக்கு மேலும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக ராஜா மகேந்திர பிரதாப் சிங் அளித்த பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் புனிதமான தருணமாக இந்த முயற்சி அமைந்துள்ளது.

 

நண்பர்களே,

 

இன்று, பெரிய கனவுடன் இருக்கும் மற்றும் பெரிய இலக்குகளை நிறைவேற்ற விரும்பும் நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞரும், ராஜா மகேந்திர பிரதாப் சிங் அவர்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ராஜா மகேந்திர பிரதாப் சிங் அவர்களிடமிருந்து திடமான உறுதியையும், வேட்கையையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். சுதந்திர இந்தியாவை அவர் விரும்பினார். இதற்காக தனது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அர்ப்பணித்தார். இந்தியாவில் தங்கியிருந்து நாட்டு மக்களை ஊக்குவித்தது மட்டுமன்றி, இந்தியாவின் சுதந்திரத்துக்காக உலகின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றார். ஆப்கானிஸ்தான், போலந்து, ஜப்பான், தென்ஆப்பிரிக்கா என எந்த நாடாக இருந்தாலும், தாய் மண்ணான இந்தியாவுக்கு தடைகளிலிருந்து சுதந்திரத்தைப் பெற்றுத்தர தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொண்டதுடன், தனது வாழ்க்கையையே  பணயம் வைத்தார்.

 

மேலும் நண்பர்களே,

 

உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, நாட்டின் மற்றொரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான குஜராத்தின் மகனான ஷியாம்ஜி கிருஷ்ணா வர்மா அவர்களை நினைவுபடுத்துகிறேன். முதலாவது உலகப் போர் காலத்தில், ஷியாம்ஜி வர்மா அவர்களையும், லாலா ஹர்தயால் அவர்களையும் சந்திப்பதற்காகவே ஐரோப்பாவுக்கு ராஜா மகேந்திர பிரதாப் சென்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் நாடுகடந்த இந்திய அரசு உருவாக்கப்பட்டது. இந்த அரசு ராஜா மகேந்திர பிரதாப் சிங் அவர்களின் தலைமையில் அமைந்தது.

 

73 ஆண்டுகளுக்குப் பிறகு, ஷியாம்ஜி கிருஷ்ணா வர்மாவின் அஸ்தியை, இந்தியாவுக்கு கொண்டுவரும் பாக்கியத்தை, குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நான் பெற்றேன். கட்ச் பகுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை நீங்கள் பெற்றால், மண்ட்வி பகுதியில் மிகவும் ஊக்கமளிக்கும் வகையிலான ஷியாம்ஜி கிருஷ்ணா வர்மாவின் நினைவிடத்தை காண முடியும். அங்கு அவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. இது அன்னை இந்தியாவுக்காக நாம் வாழ வேண்டும் என்று நம்மை ஊக்குவிக்கும்.

 

நாட்டின் பிரதமராக இருக்கும்போது, ராஜா மகேந்திர பிரதாப் போன்ற தொலைநோக்கு கொண்ட மற்றும் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரில் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் இந்த வாய்ப்பை மீண்டும் ஒரு முறை நான் பெற்றுள்ளேன். இது எனது வாழ்க்கையில் மிகப்பெரும் பாக்கியமாக உள்ளது. இதுபோன்ற புனிதமான தருணத்தில் ஆசிகளை வழங்குவதற்காக மிகப்பெரும் அளவில் நீங்கள் வந்திருப்பதும், உங்களை நான் சந்திப்பதும் மிகப்பெரும் சக்தியை அளிக்கிறது.

 

இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியது மட்டுமல்லாமல், இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கான அடித்தளமிடுவதற்கு சிறந்த பங்களிப்பை ராஜா மகேந்திர பிரதாப் சிங் வழங்கியுள்ளார். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதன் மூலம் கிடைத்த அனுபவங்களை இந்திய கல்வி முறையை நவீனமயமாக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டார். இன்று, 75 ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் சூழலில், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை நோக்கி 21-ம் நூற்றாண்டு இந்தியா முன்னேறி வரும் நிலையில், பாரத தாயின் மதிப்புமிகுந்த மகன் பெயரில் பல்கலைக் கழகத்தை உருவாக்குவது, அவருக்கு அளிக்கும் உண்மையான அஞ்சலியாக உள்ளது.

 

நண்பர்களே,

 

இந்தப் பல்கலைக் கழகம், நவீன கல்விக்கான மிகப்பெரும் மையமாக மட்டுமன்றி, நவீன பாதுகாப்பு ஆய்வுகள், பாதுகாப்பு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் மனிதவள மேம்பாட்டுக்கான மையமாகவும் உருவெடுக்கும். புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்களான திறன் மற்றும் உள்ளூர் மொழியில் கல்வி அளிப்பது ஆகியவை, இந்த பல்கலைக் கழகத்தின் மாணவர்களுக்கு மிகப்பெரும் அளவில் பயனளிக்கும். ராணுவ பலத்தில் சுயசார்பை எட்டும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இந்தப் பல்கலைக் கழகத்தில் அளிக்கப்படும் கல்வி, புதிய ஊக்கத்தை அளிக்கும்.

 

நண்பர்களே,

 

பாதுகாப்பு வழித்தடத்தில் உள்ள அலிகார் முனையத்தின் வளர்ச்சியை சிறிது நேரத்துக்கு முன்பு நான் கண்டறிந்தேன். பல நூறு கோடி ரூபாய் முதலீட்டுடன் கூடிய 20-க்கும் மேற்பட்ட பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் மூலம், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சிறு ஆயுதங்கள், போர்த் தளவாடங்கள், டுரோன்கள் மற்றும் வான்வழி தொடர்பான உற்பத்தி பொருட்கள், உலோகப் பொருட்கள், டுரோன்களை வீழ்த்தும் கட்டமைப்புகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்காக பாதுகாப்பு வழித்தடத்தில் உள்ள அலிகார் முனையத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுகிறது. இது அலிகார் மற்றும் அதற்கு அருகே உள்ள பகுதிகளுக்கு புதிய அடையாளத்தை வழங்கும்.

 

ஆனால், நண்பர்களே,

தனது பிரபலமான பூட்டுகள் மூலம் வீடுகள் மற்றும் கடைகளைப் பாதுகாப்பதற்கு பெயர்பெற்ற அலிகார் பகுதி, தற்போது, தேசத்தின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான பொருட்களை தயாரிப்பதிலும் பிரபலமாக உள்ளது. ஏற்கனவே உள்ள தொழில் முனைவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சிறப்புப் பலன்களைப் பெற உள்ளனர். பாதுகாப்பு தொழில் நிறுவனங்கள் மூலம், புதிய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும் ஊக்கத்தொகையை பெற உள்ளன. சிறு தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளையும் பாதுகாப்பு வழித்தடத்தில் உள்ள அலிகார் முனையம் ஏற்படுத்த உள்ளது.

சகோதர, சகோதரிகளே,

பாதுகாப்பு வழித்தடத்தில் உள்ள லக்னோ முனையத்தில் உலகின் சிறப்பான ஏவுகணைகளில் ஒன்றான பிரம்மோஸை கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த சில ஆண்டுகளில் சுமார் ரூ.9,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. ஜான்சி முனையத்திலும் கூட,, மற்றொரு ஏவுகணை தயாரிப்புப் பிரிவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரும் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளுடன் உத்தரப்பிரதேச பாதுகாப்பு வழித்தடம் வர உள்ளது.

நண்பர்களே,

 

கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒருங்கிணைந்த தொழில் நகரியம் கட்டுமானம், பல்முனை சரக்கு போக்குவரத்து முனையம், ஜேவர் சர்வதேச விமான நிலையம், தில்லிமீரட் பிராந்திய விரைவு போக்குவரத்து மாற்றி முனையம், மெட்ரோ இணைப்பு, நவீன நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகள் ஆகியவை மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தத் திட்டங்களால், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரும் அடிப்படையாக உத்தரப்பிரதேசம் மாறும்.

யோகி அவர்களின் ஆட்சியில், ஏழைகளின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. அவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி என்ற பிரச்சாரமே, யோகி அவர்களின் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு செயல்படும் முறைக்கு மிகப்பெரும் ஆதாரமாக உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை செலுத்தியுள்ளது. நாட்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திய சாதனையையும் உத்தரப்பிரதேசம் படைத்துள்ளது. இந்த கொரோனா நெருக்கடி காலத்தில், ஏழை மக்களின் நலனே அரசின் அதி முன்னுரிமையாக உள்ளது. பல மாதங்களாக உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. இதன்மூலம், ஏழைகள் பசியின்றி இருக்கின்றனர். ஏழைகளை பட்டினியிலிருந்து பாதுகாக்க, உலகில் உள்ள வளர்ந்த நாடுகள் செய்ய முடியாததைக் கூட, இந்தியாவும், உத்தரப்பிரதேச மாநிலமும் செய்துள்ளன.

நண்பர்களே,

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 4 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதார விலையில் விளைபொருட்களை கொள்முதல் செய்வதில் புதிய சாதனை படைக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கரும்பு விவசாயிகளுக்கு பணம் செலுத்தும் விவகாரத்தில் கூட, தொடர்ந்து தீர்வுகாணப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1.40 லட்சம் கோடிக்கும் மேலான தொகை வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கான புதிய வாய்ப்புகள், அடுத்த சில ஆண்டுகளுக்கு கிடைக்கும். கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை, உயிரி எரிபொருளாக மாற்றி, எரிபொருளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதுவும் கூட, உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு பயனளிக்க உள்ளது.

நண்பர்களே,

அலிகார் உள்ளிட்ட ஒட்டுமொத்த மேற்கு உத்தரப்பிரதேசத்தின் வளர்ச்சிக்காக யோகி அரசும், மத்திய அரசும் தோளோடு தோள் கொடுத்து, கடுமையாக உழைத்து வருகின்றன. நாம் ஒன்றாக இணைந்து, இந்த பிராந்தியத்தை அதிக வளமானதாக மாற்ற வேண்டும். மேலும், நமது மகன்கள் மற்றும் மகள்களின் திறனை மேம்படுத்தி, வளர்ச்சிக்கு எதிரான சக்திகளிடமிருந்து உத்தரப்பிரதேசத்தைப் பாதுகாக்க வேண்டும். எனக்கு ஆசி வழங்குவதற்காக மிகப்பெரும் அளவில் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் அனைவரையும் பார்க்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். இதற்காகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றன.

நன்றிகள் பல.

*****