பிரதமர் திரு நரேந்திர மோடி, இட்டாநகரில் உள்ள தோன்யி போலோ விமான நிலையத்தை திறந்து வைத்ததுடன், 600 மெகாவாட் கமெங் புனல் மின் நிலையத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விமான நிலையத்திற்கான அடிக்கல் 2019 பிப்ரவரியில் பிரதமரால் நாட்டப்பட்டது. இடையில் பெருந்தொற்று காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், விமான நிலையத்தின் பணிகள் குறுகிய காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அருணாச்சலப் பிரதேசத்திற்கு அடிக்கடி வந்து சென்றதை நினைவு கூர்ந்தார், அருணாச்சலப் பிரதேச மக்கள் தங்கள் மாநிலத்தின் வளர்ச்சியில் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். மாநில மக்களின் மகிழ்ச்சியான, ஒழுக்கமான பண்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார். அடிக்கல் நாட்டும் திட்டங்களை தாமே நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பாரம்பரியத்தை நடத்திக் காட்டி வரும் பிரதமர், மாறுபட்ட பணி கலாச்சாரமே இதற்கு காரணம் என்று கூறினார். விமான நிலையம் அடிக்கல் நாட்டப்பட்ட போது, இது ஒரு தேர்தல் நேர தந்திரம் என்று விமர்சித்தவர்களுக்கு இந்த விமான நிலையம் திறப்பு மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அரசியல் விமர்சகர்கள் புதிய சிந்தனையுடன் எதையும் அணுக வேண்டும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சியை அரசியல் ஆதாயங்களைக் கொண்டு பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். மாநிலத்தில் இப்போது தேர்தல் நடக்கவில்லை என்று கூறிய அவர், மாநிலத்தில் எதிர்காலத் தேர்தல் எதுவும் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். மாநிலத்தின் வளர்ச்சியே அரசின் முன்னுரிமை என்று கூறிய பிரதமர், “நான் சூரியன் உதிக்கும் மாநிலத்தில் இன்றைய நாளைத் தொடங்குகிறேன், இந்தியாவில் சூரியன் மறையும் போது டாமனில் இருப்பேன், இடையில் காசிக்கும் செல்கிறேன்” என்று கூறினார்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் வடகிழக்கு பிராந்தியம் அலட்சியத்தையும் புறக்கணிப்பையும் எதிர்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார். அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசுதான் இப்பகுதியில் கவனம் செலுத்தி வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். பின்னர், அந்த வேகம் தடைபட்டது, ஆனால் 2014-க்குப் பிறகு, வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கியது. முன்பு, தொலைதூர எல்லை கிராமங்கள் கடைசி கிராமமாக கருதப்பட்டன. ஆனால், எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களை நாட்டின் முதல் கிராமமாகக் கருதி எங்கள் அரசு செயல்பட்டது. இது வடகிழக்கின் வளர்ச்சியை அரசாங்கத்தின் முன்னுரிமையாக மாற்றுவதற்கு வழிவகுத்துள்ளது. சுற்றுலா, வர்த்தகம், தொலைத்தொடர்பு, ஜவுளி என எந்த துறையாக இருந்தாலும் வடகிழக்கு தற்போது முதலிடம் பெறுகிறது, என்று பிரதமர் குறிப்பிட்டார். ட்ரோன் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து மூலம் விவசாய உற்பத்தியை எளிதாக்க்கி ஊக்குவிக்கும் கிரிஷி உடான் திட்டம், விமான நிலைய இணைப்பு, துறைமுக இணைப்பு என எதுவாக இருந்தாலும், வடகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இந்தியாவின் மிக நீளமான பாலம், மிக நீளமான ரயில் பாலம், ரயில் பாதை இணைப்பு, நெடுஞ்சாலைகளின் சாதனை கட்டுமானம் ஆகியவற்றை உதாரணங்களாக பிரதமர் எடுத்துக்காட்டினார். இது எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளின் புதிய சகாப்தம், இந்தியாவின் புதிய அணுகுமுறைக்கு இன்றைய நிகழ்ச்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பிரதமர் விளக்கினார்.
தோன்யி போலோ விமான நிலையம் அருணாச்சலப் பிரதேசத்தின் நான்காவது செயல்பாட்டு விமான நிலையமாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். இதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 1947 முதல் 2014 வரை வடகிழக்கு பகுதியில் 9 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. கடந்த எட்டு வருடங்களில் மட்டும் இப்பகுதியில் 7 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள விமான நிலையங்களின் விரைவான வளர்ச்சி, வடகிழக்கில் இணைப்பை மேம்படுத்துவதில் பிரதமரின் சிறப்பு முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. வடகிழக்கு இந்தியாவை இணைக்கும் விமானங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். “தோன்யி போலோ விமான நிலையம் அருணாச்சல பிரதேசத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு சாட்சியாக மாறி வருகிறது” என்று திரு மோடி குறிப்பிட்டார். விமான நிலையத்திற்கு பெயர் சூட்டியது குறித்து விளக்கிய பிரதமர், ‘தோன்யி’ என்றால் சூரியன் என்றும், ‘போலோ’ என்றால் சந்திரன் என்றும் கூறினார். சூரியன் மற்றும் சந்திரனின் ஒளிக்கு மாநிலத்தின் வளர்ச்சியை ஒப்பிட்ட பிரதமர், ஏழைகளின் வளர்ச்சியைப் போலவே விமான நிலையத்தின் வளர்ச்சியும் முக்கியமானது என்று கூறினார்.
தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதிகளில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு அருணாச்சலப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு கண்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், அருணாச்சலப் பிரதேசத்தின் இயற்கை அழகு, சுற்றுலாவுக்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கு முறையான இணைப்பு தேவை என்பதை வலியுறுத்திய அவர், மாநிலத்தில் உள்ள 85 சதவீத கிராமங்கள் பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். புதிய விமான நிலைய உள்கட்டமைப்பு, மேம்பாட்டுடன் சரக்கு சேவைத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இதன் விளைவாக, மாநில விவசாயிகள் இப்போது தங்கள் விளைபொருட்களை பெரிய சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்க முடியும். மாநிலத்தில் பிரதமர் கிசான் நிதியின் பலனை விவசாயிகள் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அருணாச்சலப் பிரதேச மக்கள் மூங்கில் அறுவடை செய்வதைத் தடை செய்த காலனித்துவச் சட்டத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசின் நடவடிக்கை குறித்துத் தெரிவித்தார். மூங்கில் மாநிலத்தின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும் என்றும், அதை சாகுபடி செய்து, இந்தியாவில் மட்டுல்லாமல், உலகம் முழுவதும் மூங்கில் பொருட்களை ஏற்றுமதி செய்ய இப்பகுதி மக்களுக்கு அரசின் நடவடிக்கை உதவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “இப்போது நீங்கள் மற்ற பயிர்களைப் போலவே மூங்கில் பயிரிடலாம், அறுவடை செய்யலாம், விற்கலாம்” என்று அவர் கூறினார்.
“ஏழைகள் அருமையான வாழ்க்கையை நடத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று பிரதமர் குறிப்பிட்டார். மலையகப் பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரம் வழங்குவதில் முந்தைய அரசுகளின் மெத்தனம் பற்றி வருத்தம் தெரிவித்த அவர், தற்போதைய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. பிரதமரின் வீட்டு வசதி திட்டம், ஏக்லவ்யா மாதிரி பள்ளிகள், அருணாச்சலப் பிரதேச ஸ்டார்ட்அப் கொள்கை ஆகியவற்றை அவர் உதாரணமாக குறிப்பிட்டார். 2014 இல் தொடங்கப்பட்ட அனைவருக்கும் மின்சாரம் ழங்கும் சௌபாக்யா திட்டம் பற்றி எடுத்துரைத்த பிரதமர், அருணாச்சலப் பிரதேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக பல கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்ததை சுட்டிக்காட்டினார்.
“மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும், வீட்டுக்கும் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான பணி முறையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று திரு மோடி குறிப்பிட்டார். எல்லைக் கிராமத் திட்டத்தின் கீழ் அனைத்து எல்லைக் கிராமங்களையும் மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளையும் அவர் விளக்கினார். இது சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதுடன், பிராந்தியத்தில் இடம்பெயர்ந்து செல்வதைக் குறைக்கும் என்றார் அவர். இளைஞர்களை என்.சி.சி.யுடன் இணைக்கும் சிறப்புத் திட்டம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது இளைஞர்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி அளிப்பதுடன் மட்டுமின்றி நாட்டுக்கு சேவை செய்யும் உணர்வைத் தூண்டும் என்றும் அவர் தெரிவித்தார். “ அனைவரது முயற்சியுடன் இணைந்த மாநிலத்தின் இரட்டை எந்திர அரசு அருணாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு, அருணாச்சலப் பிரதேச ஆளுநர் திரு பி டி மிஸ்ரா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
வடகிழக்கு பிராந்தியத்தில் இணைப்பை அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, அருணாச்சல பிரதேசத்தில் இட்டாநகர் தோன்யி போலோ முதல் பசுமை விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார். விமான நிலையத்தின் பெயர் அருணாச்சல பிரதேசத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் சூரியன், சந்திரன் மீதான மரியாதையையும் பிரதிபலிக்கிறது.
அருணாச்சல பிரதேசத்தின் இந்த முதல் பசுமை விமான நிலையம் 690 ஏக்கர் பரப்பளவில் ரூ. 640 கோடி செலவில், 2300 மீ ஓடுபாதையுடன், அனைத்து வானிலைக்கும் பொருத்தமான செயல்படும் திறன் கொண்டது. விமான நிலைய முனையம் ஒரு நவீன கட்டிடமாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன், வளங்களை மறுசுழற்சி செய்வதை இது ஊக்குவிக்கிறது.
இட்டாநகரில் ஒரு புதிய விமான நிலையத்தின் மேம்பாடு, பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கான ஊக்கியாகவும் செயல்படும், இதனால் பிராந்தியத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
மிசோரம், மேகாலயா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய ஐந்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் 75 ஆண்டுகளில் முதல் முறையாக விமானங்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.
வடக்கு-கிழக்கில் விமான இயக்கம் 2014 இல் இருந்து 113% அதிகரித்துள்ளது, 2014 இல் வாரத்திற்கு 852 இல் இருந்து 2022 இல் வாரத்திற்கு 1817 ஆக அதிகரித்துள்ளது.
600 மெகாவாட் கமெங் புனல் மின் நிலையம்
ரூ.8450 கோடி செலவில் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அருணாச்சலப் பிரதேசத்தை மின் உபரி மாநிலமாக மாற்றும்.
*********
MSV/PKV/DL
A new dawn of development for the Northeast! Launching connectivity & energy infrastructure projects in Arunachal Pradesh. https://t.co/kmPtgspIwr
— Narendra Modi (@narendramodi) November 19, 2022
Our government's priority is development of the country, welfare of citizens. pic.twitter.com/9ROq1kjgIb
— PMO India (@PMOIndia) November 19, 2022
Our government worked considering the villages in the border areas as the the first village of the country. pic.twitter.com/rsvfZxC3gg
— PMO India (@PMOIndia) November 19, 2022
Today, Northeast gets top priority when it comes to development. pic.twitter.com/gXJKdFn242
— PMO India (@PMOIndia) November 19, 2022
After 2014, a campaign to ensure electricity to every village was initiated. Several villages of Arunachal Pradesh have also benefited from this. pic.twitter.com/A5ne93KyDS
— PMO India (@PMOIndia) November 19, 2022
It is our endeavour to strengthen the villages in border areas. pic.twitter.com/opsM2t6mLL
— PMO India (@PMOIndia) November 19, 2022