பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களைக் கோரும் வகையில், அரசு துறைகளில் உள்ள பதவிநிலைகளுக்கு இணையாக, பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றிலும் பதவிநிலைகளை உருவாக்குவதற்கான விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், சுமார் 24 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. இது, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் கீழ்நிலைகளில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கு, அரசு துறைகளில் கீழ்நிலைகளில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கு இணையாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு சலுகைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும். மேலும் இது, பொதுத்துறை நிறுவனங்களில் முதுநிலை பணியிடங்களில் பணியாற்றுவோருக்கு அரசு பணியிடங்களுக்கு இடையேயான பணியிடம் இல்லாததால், தவறான வருவாய் மதிப்பீட்டின் மூலம், அவர்களது குழந்தைகளுக்கு அரசு பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் பணி கிடைப்பது தடுக்கப்படும். மேலும், உண்மையான கிரீமிலேயர் வரம்பில் இல்லாத பிரிவினருக்கு இடஒதுக்கீடு வாய்ப்பு இல்லாத நிலை மாறி, சரிசமமான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் பலன்களை, சமூகத்தில் முன்னேறிய நபர்கள்/பிரிவினர் (கிரீமி லேயர்) பெறுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் தற்போது பின்பற்றப்படும் கிரீமி லேயருக்கான ஆண்டு வருமான அளவு ரூ.6 லட்சம் என்பதை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய வருமான வரம்பு, ஆண்டுக்கு ரூ.8 லட்சமாக இருக்கும். கிரீமி லேயர் பிரிவினரை தவிர்ப்பதற்கான வருமான வரம்பு, நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு பணி மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் அதிக அளவிலானோர் பயனடைய முடியும்.
சமூக நீதியை உறுதிப்படுத்தவும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கவும் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியல்சாசன அங்கீகாரம் வழங்குவதற்கான மசோதாவை, நாடாளுமன்றத்தில் அரசு ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உட்பிரிவுகளை ஏற்படுத்துவதற்காக அரசியல்சாசனத்தின் 340-வது பிரிவின்படி, ஆணையத்தை அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களால், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற முடியும். இந்த அனைத்து முடிவுகளும், ஒரே நேரத்தில் எடுத்திருப்பதால், கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பங்களிப்பு அதிகரிப்பது உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அந்தப் பிரிவில் உள்ள மிகவும் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு சமூக மாற்றத்தில் வாய்ப்பு மறுக்கப்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்படும்.
பின்னணி:
ரிட் மனு 930/1990 (இந்திரா சாஹ்னி வழக்கு)-யை விசாரித்து 16-11-1992-ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் முன்னேறியவர்களை வெளியேற்றுவதற்கான அடிப்படையை குறிப்பிடுமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இதில், பொருத்தமான மற்றும் தேவையான சமூக-பொருளாதார வரையறையை கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டது.
இதன்படி, வல்லுநர் குழு ஒன்று பிப்ரவரி 1993-ல் அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தனது அறிக்கையை 10.03.1993-ல் தாக்கல் செய்தது. அதில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சமூகத்தில் முன்னேறிய நபர்களை கண்டறிவதற்கான வழிவகையை அதாவது கிரீமி லேயர் என்ற வரம்பு குறிப்பிடப்பட்டது. இந்த அறிக்கையை அப்போதைய நலத் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டு, பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு அனுப்பிவைத்தது. இதனைத் தொடர்ந்து, கிரீமிலேயர் பிரிவில் இருப்பவர்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு 08.09.1993-ல் வெளியிடப்பட்டது.
அந்த உத்தரவில், கிரீமி லேயர் வரம்பில் இருப்பவர்களை அடையாளம் காண்பதற்காக 6 பிரிவுகள் குறிப்பிடப்பட்டன.
அ. அரசியல்சாசன/சட்டப்பூர்வ பதவிகள்
ஆ. மத்திய மற்றும் மாநில அரசுகளின் குரூப் ஏ மற்றும் குரூப் பி அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்பு, பல்கலைக் கழக ஊழியர்கள்.
இ. ஆயுதப்படைகளில் கலோனல் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவியில் இருப்பவர்கள். துணை ராணுவத்தில் அதற்கு இணையான பதவியில் இருப்பவர்கள்.
ஈ. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், மேலாண்மை ஆலோசகர்கள், பொறியாளர்கள் போன்ற தொழில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
உ. விவசாய இடங்கள் அல்லது காலி நிலம் மற்றும்/அல்லது கட்டிடங்களின் உரிமையாளர்கள்.
ஊ. வருமான/சொத்து வரி செலுத்துவோர்.
மேலும், அந்த உத்தரவில், மேற்குறிப்பிட்ட வரையறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றில் இணையான அல்லது ஒத்த தன்மையுடைய அதிகாரிகளுக்கும் பொருந்தும். எனவே, அரசு துறைக்கு இணையாக இந்த அமைப்புகளில் பதவியிடங்களை அரசு கண்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிறுவனங்களை சமநிலைப்படுத்தி, இந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் வருமான வரம்பை அமல்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், அரசுத் துறையில் உள்ள பதவிநிலைகளுக்கு இணையாக பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில் பதவிநிலைகளை நிர்ணயிப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, பதவிநிலைகளை சமநிலைப்படுத்துவதற்கான இலக்கு, சுமார் 24 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இதையடுத்து, சமநிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக விரிவான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களில் அனைத்து செயல் அதிகாரி பதவியிடங்கள், அதாவது, வாரிய அளவிலான செயல் அதிகாரிகள் மற்றும் மேலாண்மை அளவிலான பதவியிடங்கள் அனைத்தும் அரசு துறைகளில் உள்ள குரூப் ஏ பதவியிடங்களுக்கு இணையாக கருதப்படும். இந்தப் பதவியிடங்கள் கிரீமி லேயர் என கணக்கில் கொள்ளப்படும். பொதுத் துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை காப்பீட்டுக் கழகங்களில் உள்ள இளநிலை மேலாண்மை பிரிவு வரம்பு – 1 (Junior Management Grade Scale–1) மற்றும் அதற்கு மேல் இருப்பவர்களை, அரசுத் துறையில் குரூப் ஏ பணியிடங்களில் இருப்பவர்களுக்கு இணையானவர்கள் என்று கருத வேண்டும். எனவே, இவர்கள் கிரீமி லேயர் வரம்பில் இருப்பவர்கள். பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை காப்பீட்டுக் கழகங்களில் எழுத்தர்கள் (Clerks), சேவகர்கள் (Peons) ஆகியோருக்கு காலத்துக்கு ஏற்ப வருமான வரம்பு மாற்றியமைக்கப்படுவது பொருந்தும். இவையே விரிவான வழிமுறைகள் ஆகும். ஒவ்வொரு வங்கி, பொதுத்துறை நிறுவனம், காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தங்களது வாரியத்தில் இதுகுறித்து விவாதித்து தனிநபர்களின் பதவியிடங்களை அடையாளம் காண வேண்டும்.
******