Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசுத் துறைகளில் புதிதாக சேரும் 51,000க்கும் அதிகமானோருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

அரசுத் துறைகளில் புதிதாக சேரும் 51,000க்கும் அதிகமானோருக்கு  பணி நியமனக் கடிதங்கள் வழங்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


வணக்கம்!

இந்த ‘விடுதலையின் அமிர்த காலத்தில்’ நாட்டின் சுதந்திரத்தின் பாதுகாவலர்களாகவும், கோடிக்கணக்கான நாட்டு மக்களின் பாதுகாவலர்களாகவும் மாறிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நான் உங்களை ‘அமிர்த பாதுகாவலர்’ என்று அழைக்கிறேன், ஏனென்றால் இன்று நியமனக் கடிதங்களைப் பெறும் இளைஞர்கள் நாட்டிற்கு சேவை செய்வது மட்டுமல்லாமல் நாட்டின் குடிமக்களையும் பாதுகாப்பார்கள். அதனால்தான் ஒரு வகையில் நீங்கள் மக்களின் பாதுகாவலர்களாகவும், ‘அமிர்த கால பாதுகாவலர்களாகவும்’ இருக்கிறீர்கள்.

என் குடும்ப உறுப்பினர்களே,

இந்த முறை, இந்த வேலைவாய்ப்பு  மேளா, நாட்டிற்கு பெருமையும், நம்பிக்கையும் நிறைந்த சூழலில் நடத்தப்படுகிறது. நமது சந்திரயான் மற்றும் அதன் ரோவர் பிரக்யான், நிலவில் இருந்து தொடர்ந்து படங்களை அனுப்பி வரலாறு படைத்து வருகிறது. இந்த பெருமையான தருணத்தில், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணத்தைத் தொடங்கப் போகிறீர்கள். வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

ராணுவத்தில் சேருவது,  போலீஸ் பணியில் சேருவது என ஒவ்வொரு இளைஞரும் நாட்டின் பாதுகாப்புக்கு காவலாளியாக வேண்டும் என்று கனவு காண்கின்றனர். எனவே உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. அதனால்தான் உங்கள் தேவைகளிலும் எங்கள் அரசு மிகவும் தீவிரமாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், துணை ராணுவப் படைகளின் ஆட்சேர்ப்பு செயல்முறையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளோம். விண்ணப்பம் முதல் தேர்வு வரை செயல்முறை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் படைகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான தேர்வு இப்போது 13 உள்ளூர் மொழிகளிலும் நடத்தப்படுகிறது. முன்னதாக இதுபோன்ற தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே நடந்தது.  ஆனால் இப்போது தாய்மொழிக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உதவியுள்ளது.

கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் நக்சல் பாதித்த மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான பழங்குடி இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் வளர்ச்சியின் நீரோட்டத்துடன் இணைந்திருக்க விதிகளைத் தளர்த்துவதன் மூலம் பாதுகாப்புப் படைகளில் ஆட்சேர்ப்பு செய்ய அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல், எல்லையோர மாவட்டங்கள் மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கான கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வில் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசின் முயற்சியால், துணை ராணுவப் படைகள் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதில் நீங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றின் சூழல் வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துகிறது. உ.பி.யை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் உ.பி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி இருந்தது, குற்றங்களின் அடிப்படையில் மிக மோசமாக இருந்தது. ஆனால் இப்போது சட்டத்தின் ஆட்சி நிறுவப்பட்டுள்ளதால், உ.பி வளர்ச்சியின் புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. ஒரு காலத்தில் குண்டர்கள் மற்றும் மாஃபியாக்களின் பயத்தில் வாழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அச்சமற்ற சமூகம் நிறுவப்பட்டு வருகிறது. இதுபோன்ற சட்டம் ஒழுங்கு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. குற்ற விகிதம் குறைக்கப்பட்டபோது, உ.பி.,யில் முதலீடும் அதிகரிக்கத் துவங்கியது; முதலீடுகள் வரத் தொடங்கின. மாறாக, குற்ற விகிதம் உச்சத்தில் உள்ள மாநிலங்களில், முதலீடு விகிதாச்சார அடிப்படையில் குறையத் தொடங்குவதையும் காண்கிறோம்; வாழ்வாதாரத்திற்கான அனைத்து வேலைகளும் ஸ்தம்பித்து விடுகின்றன.

என் குடும்ப உறுப்பினர்களே,

இப்போதெல்லாம் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியா என்று தொடர்ந்து படிக்கிறீர்கள். இந்த தசாப்தத்தில் டாப்-3 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும். இந்த உத்தரவாதத்தை நான் உங்களுக்கு வழங்கும்போது, அல்லது மோடி தனது நாட்டு மக்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவாதத்தை வழங்கும்போது, அது ஒரு பெரிய பொறுப்புடன் செய்யப்படுகிறது. ஆனால் இதைப் பற்றிப் படிக்கும்போது, உங்கள் மனதில் ஒரு கேள்வி எழுகிறது: நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வி மிகவும் இயல்பானது.

நண்பர்களே,

எந்தவொரு பொருளாதாரமும் முன்னேற, நாட்டின் ஒவ்வொரு துறையும் வளர்ச்சியடைய வேண்டியது அவசியம். உணவுத் துறை முதல் மருந்துத் துறை வரை, விண்வெளி முதல் ஸ்டார்ட் அப் வரை, ஒவ்வொரு துறையும் முன்னேறும்போது, பொருளாதாரமும் முன்னேறும். மருந்துத் துறையை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். தொற்றுநோய்களின் போது இந்தியாவின் மருந்துத் தொழில் பெரிதும் பாராட்டப்பட்டது. இன்று இந்தத் தொழில் மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மருந்துத் துறை வளர்ச்சி சுமார் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த மருந்துத் தொழில் முன்னேறும்போது, அதன் அர்த்தம் என்ன? அதாவது இந்த தசாப்தத்தில் மருந்துத் துறைக்கு இப்போது இருப்பதைவிட பல மடங்கு அதிகமான இளைஞர்கள் தேவைப்படுவார்கள். பலப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

நண்பர்களே,

இன்று, நாட்டில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தொழில்களும் விரைவான வளர்ச்சியைக் காண்கின்றன. தற்போது, இந்த இரண்டு தொழில்களின் மதிப்பு, 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியை சமாளிக்க, ஆட்டோமொபைல் துறைக்கு அதிக எண்ணிக்கையிலான புதிய இளைஞர்கள் தேவைப்படுவார்கள். புதிய தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள், எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த நாட்களில் உணவு பதப்படுத்தும் தொழிலின் முக்கியத்துவம் குறித்து நிறைய விவாதங்கள் நடைபெறுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் சந்தையின் மதிப்பு கடந்த ஆண்டு சுமார் ரூ.26 லட்சம் கோடியாக இருந்தது. அடுத்த 3-3.5 ஆண்டுகளில் இத்துறையின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் கோடியாக இருக்கும். அதாவது, அது எந்த அளவுக்கு விரிவடைகிறதோ, அந்த அளவுக்கு இளைஞர்கள் தேவைப்படுவார்கள், அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இன்று இந்தியாவில் உள்கட்டமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு உள்கட்டமைப்பில் ரூ.30 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. இது நாடு முழுவதும் இணைப்பை விரிவுபடுத்துகிறது; இது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் புதிய சாத்தியங்களுக்கு வழிவகுத்துள்ளது. புதிய சாத்தியக்கூறுகள் என்பது மேலும் மேலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது.

நண்பர்களே,

வரும், 2030ல், நம் பொருளாதாரத்தில், சுற்றுலாத் துறையின் பங்களிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழிலில் இருந்து மட்டும் 13 முதல் 14 கோடி பேர் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்திலிருந்தும், இந்தியாவின் வளர்ச்சி என்பது  இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இது வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை அதிகரிப்பதை உறுதி செய்கிறது. அமோக விளைச்சல் ஏற்பட்டு, விளை பொருட்களுக்கு  நல்ல விலை கிடைத்தால், வீடு மகிழ்ச்சியில் திளைப்பதையும் விவசாயிகள் குடும்பத்தில் பார்க்கிறோம். புதிய ஆடைகள் வாங்குவர்; அவர்கள் வெளியே சென்று புதிய பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குடும்பத்தின் வருமானம் அதிகரித்தால், குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையிலும் சாதகமான மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பது போலவே, நாட்டிலும் அப்படித்தான். நாட்டின் வருமானம் அதிகரிக்கும்போது, நாட்டின் சக்தி அதிகரிக்கிறது, செல்வம் அதிகரிக்கிறது; நாட்டின் குடிமக்களும் செழிப்படையத் தொடங்குவார்கள்.

நண்பர்களே,

கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட முயற்சியால், மாற்றத்தின் மற்றொரு புதிய கட்டம் தோன்றத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா சாதனை ஏற்றுமதி செய்தது. உலகச் சந்தைகளில் இந்தியப் பொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதற்கான அறிகுறி இது. இதன் பொருள் நமது உற்பத்தி அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் உற்பத்தி செயல்பாட்டில் புதிய இளைஞர்களின் தேவை காரணமாக வேலைவாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இயற்கையாகவே, குடும்பத்தின் வருமானமும் அதிகரித்து வருகிறது. இன்று இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உள்ளது. நாட்டில் மொபைல் போன்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசின் முயற்சியால் மொபைல் உற்பத்தியும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது நாடு மொபைல்களைத் தாண்டி மற்ற மின்னணு சாதனங்களிலும் கவனம் செலுத்துகிறது.

தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தித் துறையில், மொபைல் துறையில் நாம் அடைந்த அதே வெற்றியை மீண்டும் செய்யப் போகிறோம். இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறந்த தரமான மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் தனிப்பட்ட கணினிகள் மொபைல்களைப் போலவே உலகெங்கிலும் நமது பெருமையை அதிகரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. வோக்கல் ஃபார் லோக்கல் என்ற மந்திரத்தைப் பின்பற்றி, மேட் இன் இந்தியா லேப்டாப்கள் மற்றும் கணினிகள் போன்ற பல தயாரிப்புகளை வாங்க இந்திய அரசும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் விளைவாக, உற்பத்தி அதிகரித்துள்ளது மற்றும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன. அதனால்தான் நான் மீண்டும் சொல்கிறேன், உங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது, அது பொருளாதாரத்தின் இந்த முழு சுழற்சியையும் கையாள்வதும் பாதுகாப்பதும் ஆகும். நீங்கள் அனைவரும் பாதுகாப்பு ஊழியர்களாகத் தொடங்கும்போது, உங்களிடம் என்ன மாதிரியான பொறுப்பு உள்ளது என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.

என் குடும்ப உறுப்பினர்களே,

பிரதம மந்திரி ஜன் தன் திட்டம் 9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தொடங்கப்பட்டது. கிராமங்கள் மற்றும் ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் ஏராளமானோருக்கு வங்கிக் கணக்கு கூட இல்லை. ஆனால், ஜன்தன் திட்டத்தின் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் 50 கோடிக்கும் அதிகமான புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்குவது மட்டுமல்லாமல், பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு, சுயதொழில் போன்றவற்றில் பெரும் பலத்தை அளித்துள்ளது.

ஒவ்வொரு கிராமத்திலும் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டபோது, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வங்கி நிருபர்களாகவும், வங்கி மித்ராக்களாகவும் வேலைவாய்ப்புகள் கிடைத்தன. எங்கள் ஆயிரக்கணக்கான மகன்கள் மற்றும் மகள்கள் வங்கி மித்ரா, பேங்க் சகி வடிவத்தில் வேலை பெற்றனர். இன்று, 21 லட்சத்துக்கும் மேற்பட்ட இளம் நண்பர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி நிருபர்களாக அல்லது வங்கி மித்ரா அல்லது வங்கி சகியாக சேவை செய்கிறார்கள். ஏராளமான டிஜிட்டல் சகிகள் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களை வங்கி சேவைகளுடன் இணைக்கின்றன.

இதேபோல், ஜன்தன் திட்டம் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பிற்கான மற்றொரு பெரிய பிரச்சாரத்திற்கு உத்வேகம் அளித்தது, அது முத்ரா திட்டம் ஆகும். இதனால், பெண்கள் உள்ளிட்ட பிரிவினர், சிறு தொழில்களுக்கு கடன் பெறுவது எளிதாகி விட்டது. இவர்களுக்கு வங்கிகளுக்கு கொடுக்க எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த நிலையில், அவர்கள் சார்பில் அரசே உத்தரவாதம் அளித்தது. முத்ரா  திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.24 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகளில் சுமார் 8 கோடி பேர் முதல் முறையாக தொழில் தொடங்கியுள்ளனர். பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், சுமார் 43 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு முதல் முறையாக வங்கிகளிடமிருந்து எந்த உத்தரவாதமும் இல்லாமல் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் முத்ரா மற்றும் ஸ்வநிதியின் பயனாளிகளில் அடங்குவர்.

கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தவும் ஜன்தன் கணக்குகள் பெரிதும் உதவியுள்ளன. இப்போதெல்லாம், நான் கிராமத்திற்குச் செல்லும்போது, மகளிர் சுய உதவிக் குழுக்களின் சகோதரிகளைச் சந்திக்கும் போது, அவர்களில் பலர் வந்து ‘நான் ஒரு லட்சாதிபதி சகோதரி‘ என்று கூறுகிறார்கள். இதனால் எல்லாம் சாத்தியமாகி விட்டது. அரசு வழங்கும் நிதி உதவி, மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துவதில் ஜன்தன் திட்டத்தின்  பங்கு உண்மையில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சிக்குரிய விஷயமாகும்.

நண்பர்களே,

இதுவரை வேலைவாய்ப்பு  மேளாவின் பல்வேறு நிகழ்வுகளில் லட்சக்கணக்கான இளைஞர்களிடையே உரையாற்றியுள்ளேன். அந்த இளைஞர்களுக்கு பொது சேவை அல்லது பிற துறைகளில் வேலை கிடைத்துள்ளது. அரசாங்கத்திலும் ஆட்சியிலும் மாற்றத்தைக் கொண்டு வரும் பணியில் இளம் நண்பர்களாகிய நீங்கள் அனைவரும் எனது மிகப்பெரிய பலமாக இருக்கிறீர்கள். எல்லாம் ஒரு கிளிக் தூரத்தில் இருக்கும் ந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் அனைவரும். எனவே, மக்கள் ஒவ்வொரு சேவையையும் விரைவாக வழங்க விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். இன்றைய தலைமுறையினர் பிரச்சினைகளுக்குத் தீர்வை விரும்புவதில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். நிரந்தரத் தீர்வையே அவர்கள் விரும்புகின்றனர். எனவே, அரசு ஊழியர்களாகிய நீங்கள், இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டும், அத்தகைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும், நீண்ட காலத்திற்கு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒவ்வொரு கணமும் தயாராக இருக்க வேண்டும்.

நீங்கள் சார்ந்துள்ள தலைமுறை வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இந்த தலைமுறை யாருடைய தயவையும் விரும்பவில்லை. அது ஒன்றை மட்டுமே விரும்புகிறது, அதாவது, அவர்களின் வழியில் யாரும் தடையாக இருக்கக்கூடாது. எனவே, மக்களுக்கு சேவை செய்வதற்கும், பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் அரசு எப்போதும் உள்ளது என்பதை அரசு ஊழியர்களாகிய நீங்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இதை மனதில் கொண்டு செயல்பட்டால், சட்டம் ஒழுங்கை பராமரிப்பது எளிதாக இருக்கும்.

நண்பர்களே,

துணை ராணுவப் படைகளில் உங்கள் முக்கியப் பொறுப்பை நிறைவேற்றும் போது, தொடர்ச்சியான கற்றல் மனப்பான்மையையும் நீங்கள் பராமரிக்க வேண்டும். உங்களைப் போன்ற கர்மயோகிகளுக்கு ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி போர்ட்டலில் 600 க்கும் மேற்பட்ட வெவ்வேறு படிப்புகள் உள்ளன. சான்றிதழ் படிப்புகள் உள்ளன. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். ஆன்லைனில் படித்து தேர்வு எழுதி வருகின்றனர்.

முதல் நாளிலிருந்தே இந்த இணையதளத்தில் இணைந்து உங்களால் முடிந்தவரை முயற்சி செய்து, முடிந்தவரை சான்றிதழ் படிப்புகளை முடித்து, முடிந்தவரை சான்றிதழ்களைப் பெற முடிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எதைக் கற்றுக்கொள்கிறீர்களோ, எதைப் புரிந்துகொள்கிறீர்களோ அது வெறும் தேர்வுகளோடு நின்றுவிடவில்லை. ஆனால் அது உங்கள் வாழ்க்கையில் உங்கள் கடமைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவதாகும். இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

உங்கள் துறை சீருடை உலகத்திற்கு சொந்தமானது. உங்கள் பணி ஒரு குறிப்பிட்ட கால வரையறையுடன் நின்றுவிடவில்லை என்பதால் உடல் தகுதியில் சமரசம் செய்து கொள்ள வேண்டாம் என்று நான் உங்கள்  அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். காலநிலையின் அனைத்து மாறுபாடுகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். உங்கள் துறையில் பணிபுரிபவர்களுக்கு உடல் தகுதி மிகவும் முக்கியம். பாதி வேலை உடற்தகுதியுடன் செய்யப்படுகிறது. நீங்கள் வலுவாக நின்றால், சட்டம் ஒழுங்கை பராமரிக்க நீங்கள் கூடுதலாக எதுவும் செய்ய வேண்டியதில்லை.

இரண்டாவதாக, உங்கள் கடமையின் போது சில மன அழுத்த தருணங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். சின்னச் சின்ன வியங்களுக்காக மன உளைச்சல் ஏற்படலாம். என் கருத்துப்படி, யோகா உங்கள் வாழ்க்கையில் ஒரு தினசரி பயிற்சியாக இருக்க வேண்டும். சீரான மனம் உங்கள் வேலையை பெரிதும் ஊக்குவிக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. ஆரோக்கியமான மனதுக்கும், சீரான மனதுக்கும், உங்களைப் போன்றவர்கள் பணியின் போது மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் இதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவது மிகவும் முக்கியம்.

நண்பர்களே,

2047-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் போது, நீங்கள் அரசாங்கத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருப்பீர்கள். நாட்டின் 25 ஆண்டுகளுக்கும் உங்கள் வாழ்க்கையின் இந்த 25 ஆண்டுகளுக்கும் ஒரு அற்புதமான தொடர்பு உள்ளது! எனவே, இந்த வாய்ப்பை நீங்கள் இப்போது தவறவிடக்கூடாது. உங்களால் முடிந்தவரை உங்கள் முழு ஆற்றலையும் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள், உங்களால் முடிந்தவரை உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். சாமானிய மக்களுக்காக உங்கள் வாழ்க்கையை எவ்வளவு அர்ப்பணிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு வாழ்க்கையில் திருப்தி அடைவீர்கள்; அது உங்களுக்கு அற்புதமான மகிழ்ச்சியைத் தரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி உங்களுக்கு ஒட்டுமொத்த திருப்தியைத் தரும்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பல வாழ்த்துக்கள்! மிக்க நன்றி.

***

(Release ID: 1952875)

ANU/AD/PKV/KRS