Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்


அரசின் முக்கியமான திட்டங்களின் அமலாக்கம் குறித்து பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

  தங்கள் மாவட்டங்களின் செயல் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் தங்களின் அனுபவங்களை மாவட்ட ஆட்சியர்கள் பகிர்ந்து கொண்டனர். மாவட்டங்களில் வெற்றியைத் தருகின்ற முக்கியமான நடவடிக்கைகள் பற்றியும், இவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் பிரதமர் நேரடியாக கருத்துக்களைக் கேட்டறிந்தார். தங்களின் முந்தைய பணிகளிலிருந்து முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் செயல்படுவது எவ்வாறு  வேறுபட்டுள்ளது என்பது பற்றியும் அவர்களிடம் அவர் கேட்டார். இந்த வெற்றியின் பின்னால் உள்ள முக்கிய காரணம், பொது மக்கள் பங்கேற்பு என்பதை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். தங்கள் குழுவின் ஊக்குவித்தலால் மக்கள் எவ்வாறு தினசரி பணியாற்றுகிறார்கள் என்பது பற்றி அவர்கள் பேசினர். அவர்கள் வேலை செய்யவில்லை, மாறாக சேவை செய்கிறார்கள் என்ற உணர்வாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்யப்படுவதாக அவர்கள் கூறினர். துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு அதிகரித்திருப்பது பற்றியும், புள்ளி விவரங்களால் இயக்கப்படும் நிர்வாகத்தின் பயன்கள் பற்றியும் அவர்கள் பேசினார்கள்.

 முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்ட அமலாக்கம் மற்றும் முன்னேற்றம் குறித்த கண்ணோட்டத்தை நித்தி ஆயோகின் தலைமை நிர்வாக அதிகாரி எடுத்துரைத்தார். இந்திய அணி உணர்வால் உந்தப்பட்டு இந்தத் திட்டம் எவ்வாறு போட்டித் தன்மையையும், ஒத்துழைப்பு தன்மையையும் மேம்படுத்தியுள்ளது என்பது பற்றி அவர் குறிப்பிட்டார்.  இந்த முயற்சிகளின் விளைவாக ஒவ்வொரு அம்சத்திலும் இந்த மாவட்டங்களின் செயல்பாடு குறிப்பிடத்தக்கவைகையில் சிறப்பாக உள்ளது. இது தனிப்பட்டமுறையில் மட்டுமின்றி உலகளாவிய நிபுணர்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பீகாரைச் சேர்ந்த பங்க்காவில் நவீன வசதிகளுடன் வகுப்பறைகள் திட்டம், ஒடிசாவின் கோராப்புட்டில் குழந்தைகள் திருமணத்தை தடுப்பதற்கான அபராஜிதா இயக்கம் போன்ற சிறந்த நடைமுறைகள் மற்ற மாவட்டங்களிலும் பிரதிபலித்துள்ளன. மாவட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுகள் மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளாலும் முன்வைக்கப்பட்டன.

  முன்னேற விரும்பும் மாவட்டங்களில் கவனிக்கத்தக்க பணிகள்  குறித்தும் தெரிவு செய்யப்பட்ட 142 மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கான இயக்கம் குறித்தும் ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் எடுத்துரைத்தார். வளர்ச்சி குன்றிய பகுதிகளை சீர்செய்ய தெரிவு செய்யப்பட்ட இந்த மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு மத்திய, மாநில அரசுகள்  ஒருங்கிணைந்து பணியாற்றும் 15 அமைச்சகங்கள் மற்றும் துறைகளை சேர்ந்த 15 பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகளில் முக்கிய செயல்பாட்டுக் குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய செயல்பாட்டுக் குறியீடுகளை உறுதி செய்வதற்கான அரசின் நோக்கம் என்பது, தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்கள் அடுத்த ஓராண்டில் மாநில சராசரியை கடப்பதும், இரண்டு ஆண்டுகளில் தேசிய சராசரிக்கு இணையாக வருவதும் ஆகும். சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் அவற்றால் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களின் முக்கிய செயல்பாட்டுக்  குறியீடுகளைக் கண்டறிய உள்ளன. இவை அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த மாவட்டங்களில் பல்வேறு துறைகளின், பல்வேறு திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுவதை நோக்கமாக கொண்டவை. இந்த இலக்குகளை அடைவதற்கு  தங்கள் அமைச்சகங்கள் எவ்வாறு செயல் திட்டத்தை  வகுத்துள்ளன என்பதைப் பல்வேறு அமைச்சகங்களின், துறைகளின் செயலாளர்கள் எடுத்துரைத்தனர்.

 அதிகாரிகளிடையே உரையாற்றிய பிரதமர், மற்றவர்களின் விருப்பங்கள் உங்களின் விருப்பங்களாக மாறும் போதும், மற்றவர்களின் கனவுகள் நிறைவேறுவது உங்கள் வெற்றியின் அளவுகோலாக மாறும் போதும் கடமையின் பாதை வரலாற்றை உருவாக்குகிறதுநாட்டில் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் இந்த வரலாற்றை உருவாக்கியிருப்பதை இன்று நாம் காண்கிறோம்.

 முன்னேற விரும்பும் மாவட்டங்கள் கடந்த காலத்தில்  பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பின்தங்கியிருப்பதற்கு வழிவகுத்து விட்டது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒட்டுமொத்த வளர்ச்சியை பெறுவதற்காக சிறந்த உதவி முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டின் முன்னேற்றத்தில் தடைகளாக இருந்தவற்றை முன்னேற விரும்பும் மாவட்டங்கள் அகற்றி விட்டன. முன்னேற விரும்பும் மாவட்டங்கள் தடைகள் என்பதற்கு பதிலாக வேகத்தை அதிகப்படுத்துபவையாக மாறியிருக்கின்றன. முன்னேற விரும்பும் மாவட்டங்களின் இயக்கங்கள் காரணமாக விரிவாக்கமும், வடிவ மாற்றமும் ஏற்பட்டிருப்பதைப் பிரதமர் கோடிட்டு காட்டினார். கூட்டாட்சி உணர்வு, மத்திய, மாநில, உள்ளாட்சி நிர்வாக கூட்டுப்பணி அடிப்படையிலான அரசியல் சட்டத்தின் கலாச்சாரம் ஆகியவற்றின் வலுவான வடிவத்தை இது வழங்கியிருப்பதாக பிரதமர் கூறினார்.

 முன்னேற விரும்பும் மாவட்டங்களின் மேம்பாட்டிற்கு நிர்வாகத்திற்கும், பொது மக்களுக்குமிடையே நேரடியான, உணர்வுப்பூர்வமான தொடர்பு இருப்பது மிகவும் முக்கியமானது என்று பிரதமர் வலியுறுத்தினார்.  நிர்வாகத்தின் ஓட்டத்தில் மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்பது ஒருவகையாகும். இந்த இயக்கத்தின் முக்கியமான அம்சம் தொழில்நுட்பமும். புதிய கண்டுபிடிப்பும் என்று அவர் கூறினார். ஊட்டச்சத்து குறைபாடு, தூய்மையான குடிநீர், தடுப்பூசி போன்ற பிரிவுகளில் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பின் பயன்பாடு இந்த மாவட்டங்களில் சிறந்த பயன்களை தந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

 முன்னேற விரும்பும் மாவட்டங்களில் நாட்டின்  வெற்றிக்கான முக்கிய காரணம் ஒருங்கிணைப்பு என்று பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து ஆதாரங்களும் ஒன்றே, அரசு நிர்வாகம் ஒன்றே, அலுவலர்கள் ஒன்றே ஆனால் விளைவுகள் வேறுபட்டவை.

 முன்னேற விரும்பும் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஜன்தன் கணக்குகள் 4-5 மடங்கு அதிகரித்திருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஏறத்தாழ எல்லா குடும்பத்திலும்  ஒரு கழிப்பறை இருக்கிறது. அனைத்து கிராமத்தையும் மின்சாரம் சென்றடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கையில் புதிய சக்தி ஊட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். சிரமமான வாழ்க்கை காரணமாக  முன்னேற விரும்பும் மாவட்டங்களில் மக்கள் கடின உழைப்பாளிகளாக, துணிச்சல் உள்ளவர்களாக எந்த அபாயத்தையும் எதிர்கொள்ள முடிந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த பலம்  அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

 ஆதார வளங்களை அதிகபட்சம் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டதால் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் சாதித்திருப்பதாக பிரதமர் கூறினார். இந்த சீர்திருத்தம் ஏராளமான பயன்களை அளித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், குறைபாடுகள் நீக்கப்பட்டதால் 1+1 என்பது 2 என்று ஆகாமல் 1+1 என்பது 11 ஆகியுள்ளது. இதுதான் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் கூட்டு சக்தியாகும். முன்னேற விரும்பும் மாவட்டங்களின் நிர்வாக அணுகுமுறை பற்றி விரிவாக எடுத்துரைத்த பிரதமர் முதலில் மக்கள் தங்களின் பிரச்சனைகளை அடையாளம் காண கலந்தாலோசிக் கப்பட்டுள்ளனர். இரண்டாவதாக அனுபவங்களின் அடிப்படையில்  பணி செய்யும் முறை மேம்படுத்தப்படுவது, நிகழ்நேர கண்காணிப்பில்  முன்னேற்றம், மாவட்டங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி, நல்ல நடைமுறைகளின் பிரதிபலிப்பை ஊக்கப்படுத்துவது.மூன்றாவதாக  அதிகாரிகளின் பதவிக்காலம் நிலையாக இருப்பது, பயன்தரும் குழுக்கள் உருவாக்கத்தை ஊக்கப்படுத்துவது போன்ற சீர்திருத்தங்கள். குறைந்தபட்ச ஆதார வளங்கள் இருந்தாலும் கூட விளைவுகள் பெரிதாக இருப்பதற்கு  இவை உதவி செய்தன. களப்பயணகள், ஆய்வுகள், முறையான அமலாக்கம் மற்றும் கண்காணிப்புக்காக இரவு நேர தங்கல்கள் ஆகியவற்றுக்கு விரிவான விதிமுறைகளை உருவாக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.

 புதிய இந்தியாவின் மாறுபட்ட மனநிலை குறித்து அதிகாரிகளின் கவனத்தைப் பிரதமர் ஈர்த்தார். சுதந்திரத்தின் 75-வது ஆண்டு காலத்தில் சேவைகள் மற்றும் வசதிகளை நூறு சதவீதம் நிறைவேற்றுவது என்ற நாட்டின் இலக்கை அவர் வலியுறுத்தினார். இதுவரை சாதித்த சாதனைகளோடு ஒப்பிடும் போது மேலும் பெரிய அளவு சாதிப்பதற்கு நீண்ட தூரம் நாம் செல்லவேண்டியிருக்கிறது. இந்த மாவட்டங்களின் அனைத்து கிராமங்களுக்கும் சாலைகள், ஒவ்வொருவருக்கும் ஆயுஷ்மான் அட்டைகள், வங்கி கணக்கு, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு, காப்பீடு, ஓய்வூதியம், ஒவ்வொருவருக்கும் வீட்டுவசதி  ஆகியவற்றை கால வரம்பிற்கு உட்பட்ட இலக்குகளாக நிர்ணயிக்க அவர் வலியுறுத்தினார்.  ஒவ்வொரு மாவட்டத்திற்கும்  2 ஆண்டு கால தொலைநோக்கு திட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். சாமான்ய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு அடுத்த 3 மாதங்களில் நிறைவு செய்யும் பத்து பணிகளை ஒவ்வொரு மாவட்டமும் கண்டறிய வேண்டும் என்று  அவர் யோசனை தெரிவித்தார். அதே போல் வரலாற்று சிறப்புமிக்க இந்த சகாப்தத்தில், வரலாற்று  சிறப்புமிக்க வெற்றிகளை  எட்டுவதற்கு சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவுடன் இணைந்த ஐந்து பணிகளையும் மேற்கொள்ளலாம் என்றார்.

 டிஜிட்டல் இந்தியா வடிவத்தில் அமைதிப்புரட்சியை நாடு கண்டு வருவதாக பிரதமர் கூறினார். இதில் எந்த மாவட்டமும் பின்தங்கிவிடக்கூடாது என்றும் அனைத்து கிராமங்களையும் டிஜிட்டல் கட்டமைப்பு சென்றடைவது முக்கியம் என்றும் அவர் கூறினார். இதன் பொருள் சேவைகளும், வசதிகளும் ஒவ்வொரு  வீட்டுக்கும் செல்லும் என்பதாகும். மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கு ஒரு வழிமுறையை  உருவாக்குமாறு நித்தி ஆயோகை அவர் கேட்டுக் கொண்டார்.  இந்த மாவட்டங்களின் சவால்களை ஆவணப் படுத்துமாறு  மத்திய அமைச்சகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

  வளர்ச்சியில் அவ்வளவாக பின்தங்கி இல்லாத ஆனால் ஒன்று அல்லது இரண்டு அம்சங்களின் பலவீனமாக உள்ள 142 மாவட்டங்களின் பட்டியலை தயாரிக்குமாறு அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம்  பிரதமர் கூறினார். முன்னேற விரும்பும் மாவட்டங்கள் விஷயத்தில் செய்த அதே போன்ற கூட்டு அணுகுமுறையுடன் பணியாற்றுவது அவசியம் என்று பிரதமர் குறிப்பிட்டார். “அனைத்து அரசுகளுக்கும்- மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், அரசு எந்திரம்- என அனைவருக்கும் இது புதிய சவால் ஆகும். நாம் ஒருங்கிணைந்து இந்த சவாலை சமாளிக்க வேண்டியுள்ளது” என்று தி்ரு மோடி கூறினார்.

 குடிமைப் பணியாளர்கள் தங்கள் சேவையின் முதலாவது நாளையும், ஆர்வத்தையும் நினைவுப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்திய பிரதமர், நாட்டுக்கு சேவை செய்ய வற்புறுத்தினார். அதே உணர்வுடன் முன்னேறிச் செல்லுமாறு பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டார்.

***************