77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து இன்று, உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, 2014-ஆம் ஆண்டில் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது 2023-ஆம் ஆண்டில் 5-வது பெரிய பொருளாதாரமாக தனது உலகத் தரவரிசையை மேம்படுத்தியுள்ளது என்பதை நினைவு கூர்ந்தார். ஊழலை எதிர்த்துப் போராடுவது, அரசாங்க சலுகைகளை மாற்றுவதில் ஏற்படும் கசிவுகளைத் தடுப்பது மற்றும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவது மற்றும் ஏழைகளின் நலனுக்காக பொதுப் பணத்தைச் செலவழிப்பது ஆகியவற்றால் இந்த உயர்வு ஏற்பட்டது என்று பிரதமர் கூறினார். “இன்று, நான் நாட்டு மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், நாடு பொருளாதார ரீதியாக வளமாக இருக்கும்போது, அது கருவூலத்தை மட்டும் நிரப்பாது; குடிமக்கள் மற்றும் தேசத்தின் திறனையும் உருவாக்குகிறது. குடிமக்களின் நலனுக்காக இதை நேர்மையாக செலவிட உறுதிமொழி எடுக்கும் ஒரு அரசு இருந்தால் மட்டுமே, இதுபோன்ற அரிய முற்போக்கான விளைவுகளை அடைய முடியும்.”
மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கான நிதி மாற்றம், ரூ.30 லட்சம் கோடியில் இருந்து ரூ.100 லட்சம் கோடியாக அதிகரிப்பு
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விளக்கிய பிரதமர், இந்தப் புள்ளி விவரங்கள் மாற்றத்தின் அழுத்தமான கதையைச் சொல்கின்றன என்றார். இந்த மாற்றம் மிகப்பெரியது மற்றும் தேசத்தின் மகத்தான திறனுக்கு ஒரு சான்றாகும் என்று வலியுறுத்திய பிரதமர், 10 ஆண்டுகளுக்கு முன்பு, 30 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்குச் சென்றது என்று கூறினார். கடந்த 9 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 100 லட்சம் கோடியை எட்டியுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் கருவூலத்தில் இருந்து 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது, இன்று அது 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது.
ஏழைகளுக்கான வீட்டுவசதி 4 மடங்கு அதிகரிப்பு, விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி யூரியா மானியம்,
முன்னதாக, ஏழைகளின் வீடுகளைக் கட்ட 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக பிரதமர் நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்; இன்று அது 4 மடங்கு அதிகரித்துள்ளதுடன், ஏழைகளின் வீடுகளைக் கட்ட 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்படுகிறது. “சில உலகளாவிய சந்தைகளில் 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் யூரியா மூட்டைகளை, நமது விவசாயிகளுக்கு 300 ரூபாய்க்கு வழங்குகிறோம், எனவே அரசாங்கம் நம் விவசாயிகளுக்கு யூரியாவுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது.” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
முத்ரா திட்டம் சுமார் 10 கோடி குடிமக்களை வேலை உருவாக்குபவர்களாக மாற்ற வழிவகுத்துள்ளது.
முத்ரா திட்டம், கோடிக்கணக்கான குடிமக்களை தொழில் முனைவோராக மாற்றவும், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் வழிவகுத்துள்ளது என்று பிரதமர் விளக்கினார். “சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டைக் கொண்ட முத்ரா திட்டம், நம் நாட்டு இளைஞர்களுக்கு சுயதொழில், தொழில் மற்றும் தொழில்களுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சுமார் எட்டு கோடி பேர் புதிய தொழில்களைத் தொடங்கியுள்ளனர், எட்டு கோடி மக்கள் தங்கள் தொழில்களைத் தொடங்கியுள்ளது மட்டுமல்லாமல், ஒவ்வொரு தொழில்முனைவோரும் ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளனர். முத்ரா திட்டத்தின் மூலம் 8 முதல் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திறன் எட்டப்பட்டுள்ளது.” கொவிட் -19 பெருந்தொற்றின்போது வணிகங்களும் ஆதரிக்கப்பட்டன, இதில் எம்.எஸ்.எம்.இ.க்கள் கிட்டத்தட்ட 3.5 லட்சம் கோடி ரூபாயுடன் ஆதரிக்கப்பட்டன, இதன் மூலம் அவை மூழ்குவது தடுக்கப்பட்டதோடு, வலிமையும் சேர்க்கப்பட்டது என்று பிரதமர் கூறினார்.
“ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்” முன்முயற்சி இந்தியாவின் கருவூலத்திலிருந்து 70,000 கோடி ரூபாய் பலன்களை நமது வீரர்களுக்கு எவ்வாறு கொண்டு வந்தது என்பதையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்த பணம் கிடைத்துள்ளது என்றார்.
இவை ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களித்து, நாட்டின் பல்வேறு மூலைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் இன்னும் பல முன்முயற்சிகள் உள்ளன என்றும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நாட்டின் வரவுசெலவுத் திட்டம் அனைத்து பிரிவுகளிலும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் நாட்டிற்கு நினைவூட்டினார்.
“13.5 கோடி மக்கள் வறுமையின் சங்கிலிகளை உடைத்து புதிய நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைந்துள்ளனர்”
இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக, 13.5 கோடி ஏழை மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டு, புதிய நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைந்துள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார். வாழ்க்கையில் இதை விட பெரிய திருப்தி எதுவும் இருக்க முடியாது என்று அவர் கூறினார். வீட்டுவசதித் திட்டங்கள், ரூ .50,000 கோடி ஒதுக்கீட்டில் தெருவோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் இந்த 13.5 கோடி மக்கள், வறுமையின் கஷ்டங்களிலிருந்து மீள உதவியுள்ளன என்று பிரதமர் மேலும் கூறினார்.
—-
ANU/AP/BR/DL