பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசின் கொள்முதலில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் இரும்பு மற்றும் உருக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாட்டை கட்டமைத்தல் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட, பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம் என்ற தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரசின் கொள்முதலில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரும்பு மற்றும் உருக்கு பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதை (DM1&SP) இந்த கொள்கை கட்டாயமாக்குகிறது. இன்னும் விலைப்புள்ளிகள் திறக்கப்படாத அனைத்து அரசு டெண்டர்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரும்பு மற்றும் உருக்கு பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையானது, முன்னுரிமை கொள்முதலில் இடம்பெற்றுள்ள அறிவிக்கப்பட்ட உருக்கு பொருட்களுக்கு குறைந்தபட்சம் 15% அளவுக்கு மதிப்பை கூட்டுகிறது. குறிப்பிடப்படும் உருக்கு பொருட்கள் பட்டியல் மற்றும் அதற்கு மதிப்புக் கூடுதல் அளவு குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்க மத்திய உருக்கு அமைச்சகம் மறுஆய்வு செய்யும்.
இந்தக் கொள்கையை செயல்படுத்தும்போது, அதனை பின்பற்றுபவர்களுக்கு ஒவ்வொரு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. எனவே, கொள்முதல் செய்யும் அரசு அமைப்புகளிடம் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் சுய சான்றிதழ் அளிக்க வேண்டும். அதில், உள்நாட்டு மதிப்புக் கூடுதல் வரையறையின்கீழ், இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்று உறுதியளிக்க வேண்டும். இந்த உறுதிமொழியை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு கொள்முதல் செய்யும் அமைப்புகளுக்கு கிடையாது. சில சமயங்களில், உறுதிமொழியின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டால், அதனை ஏலத்துக்கு விண்ணப்பிப்பவர் உறுதிப்படுத்த வேண்டும்.
ஏதாவது உற்பத்தியாளருக்கு குறைகள் இருந்தால், அதனை சரிசெய்வதற்காக உருக்கு அமைச்சகத்தின் கீழ், குறைதீர் குழு அமைக்கப்படும். இந்தக் குழு, புகார்களை குறிப்பிட்ட காலத்துக்குள், அதாவது 4 வாரத்துக்குள் தீர்க்க வேண்டும்.
நாட்டில் தேவையான தரத்தில் உருக்கு உற்பத்தி செய்யப்படவில்லை என்றாலோ, அல்லது திட்டத்துக்கு ஏற்றாற்போல, உள்நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்றாலோ, இதுபோன்ற அனைத்து கொள்முதல்களையும் ரத்துசெய்ய கொள்கையில் வழிமுறைகள் உள்ளன.
உள்நாட்டு உருக்குத் தொழிலை மேம்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்தக் கொள்கை வகுக்கப்படுகிறது. மேலும், அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு குறைந்த தரத்திலான மற்றும் குறைந்த விலையிலான இறக்குமதி செய்யப்பட்ட உருக்கு பொருட்களை பயன்படுத்துவதைக் குறைக்கவும் வகுக்கப்படுகிறது. இந்தக் கொள்கையை செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு அரசு அமைப்புகளின் பொறுப்பு ஆகும்.
****