புதிதாக கட்டப்பட்ட அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30-12-2023) திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயரை சூட்டியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். வால்மீகி மகரிஷியின் ராமாயணம் நம்மை ஸ்ரீராமருடன் இணைக்கும் ஞான மார்க்கம் என்றார். மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் பிரமாண்டமான புதிய தெய்வீக ராமர் கோயிலுடன் நம்மை இணைக்கும் என்று அவர் தெரிவித்தார். முதல் கட்டமாக இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் என்றும் இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரூ.1450 கோடி செலவில் அதிநவீன விமான நிலையத்தின் முதல் கட்டத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முனையக் கட்டிடம் 6500 சதுர மீட்டர் பரப்பளவில், ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முனையக் கட்டடத்தின் முகப்பு அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலின் கோயில் கட்டடக்கலையை சித்தரிக்கிறது. முனையக் கட்டடத்தின் உட்புறங்கள் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் உள்ளூர் கலை, ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அயோத்தி விமான நிலையத்தின் முனையக் கட்டடத்தில் இன்சுலேட்டட் கூரை அமைப்பு, எல்இடி விளக்குகள், மழை நீர் சேகரிப்பு, நீரூற்றுகளுடன் கூடிய நிலத்தோற்றம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின் நிலையம் போன்ற பல்வேறு நிலைத்தன்மை அம்சங்கள் உள்ளன. இந்த விமான நிலையம் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும். இது சுற்றுலா, வணிக நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும்.
Release ID: 1991757
***
AD/PLM/KRS
PM @narendramodi inaugurated Maharishi Valmiki International Airport at Ayodhya Dham. The airport will improve connectivity, boost tourism and further socio-economic development of the region. pic.twitter.com/YTiJ8FLH3A
— PMO India (@PMOIndia) December 30, 2023