Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அம்மாவின் 70-வது பிறந்ததினத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியின் தமிழாக்கம்

அம்மாவின் 70-வது பிறந்ததினத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியின் தமிழாக்கம்


சேவைக்கும், ஆன்மீகத்திற்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் அம்மா, மாதா அமிர்தானந்தமயி அவர்களுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மாவின் எழுபதாவது பிறந்த தினத்தையொட்டி, அம்மா நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். உலகம் முழுவதும் அன்பையும், இரக்கத்தையும், பரப்பும் அவரது பணி தொடர்ந்து வளர பிரார்த்திக்கிறேன். அம்மாவின் ஆதரவாளர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் இங்கு கூடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாவுடன் நேரடி தொடர்பில் இருக்கிறேன். கட்ச்சில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு அம்மாவுடன் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் எனக்கு கிடைத்தது. அமிர்தபுரியில் அம்மாவின் 60-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இன்றைய நிகழ்வில் நான் நேரடியாக இருந்திருந்தால், நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன், நன்றாக உணர்ந்திருப்பேன். இன்றும் அம்மாவின் சிரித்த முகத்தின் அரவணைப்பும், பாச குணமும் முன்பு போலவே இருக்கிறது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் அம்மாவின் பணிகளும், அவரது தாக்கமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் அமிர்தா மருத்துவமனையைத் திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அம்மாவின் இருப்பையும், அவரது ஆசீர்வாதத்தையும் வார்த்தைகளால் விவரிப்பது கடினம்; நாம் அதை உணர மட்டுமே முடியும். அந்த நேரத்தில் அம்மாவுக்காக நான் என்ன சொன்னேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது, இன்று அதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். அதாவது அன்பு, இரக்கம், சேவை, துறவு ஆகியவற்றின் வடிவம் அம்மா. பாரதத்தின் ஆன்மீக மரபை சுமப்பவர்.

நண்பர்களே,

அம்மாவின் பணியின் ஒரு அம்சம் என்னவென்றால், அவர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறுவனங்களை நிறுவி அவற்றை மேலும் ஊக்குவித்தார். சுகாதாரத் துறையாக இருந்தாலும் சரி, கல்வித் துறையாக இருந்தாலும் சரி, அம்மாவின் வழிகாட்டுதலின் கீழ் ஒவ்வொரு நிறுவனமும் மனித சேவையிலும், சமூக நலனிலும் புதிய உயரங்களை அடைந்துள்ளன. நாடு தூய்மைப் பணியைத் தொடங்கியபோது, அதை வெற்றிகரமாக்க முன்வந்த முதல் ஆளுமைகளில் அம்மாவும் ஒருவர். கங்கைக் கரையில் கழிவறைகள் கட்ட ரூ.100 கோடியை நன்கொடையாக வழங்கினார்.
நண்பர்களே,

தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில், வளர்ச்சிக்கான இந்தியாவின் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறை இன்று அங்கீகரிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், அம்மா போன்ற ஆளுமைகள் பாரதத்தின் மனிதநேய அணுகுமுறையைப் பிரதிபலிக்கின்றன. சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை அளித்து, வசதி குறைந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மனிதாபிமான முயற்சியை அம்மா எப்போதும் மேற்கொண்டுள்ளார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற உறுதியுடன் முன்னேறி வரும் பாரதம், அம்மாவைப் போன்ற உத்வேகமூட்டும் ஆளுமையைக் கொண்டுள்ளது. உலகில் அமைதியையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த அம்மாவின் தொண்டர்கள் தொடர்ந்து இதுபோன்ற பணிகளைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை அம்மாவுக்கு எனது எழுபதாவது பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட காலம் வாழட்டும்; அவர் ஆரோக்கியமாக இருக்கட்டும்; அவர் தொடர்ந்து மனிதகுலத்திற்கு சேவை செய்யட்டும். உங்கள் அன்பை எங்கள் அனைவர் மீதும் தொடர்ந்து பொழிய வேண்டும் என்ற விருப்பத்துடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். மீண்டும் ஒருமுறை அம்மாவுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

***

AD/ANU/IR/RS/KPG