வாஷிங்டன் டிசி-யில் இன்று நடைபெற்ற வட்டமேஜை கூட்டத்தில், அமெரிக்காவில் உள்ள முன்னணி 20 நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார்.
தலைமை செயல் அலுவலர்களை வரவேற்ற பிரதமர், இந்தியப் பொருளாதாரத்தின் மீது உலகம் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். இந்தியப் பொருளாதாரத்தின் மீது உலக நாடுகள் கவனம் செலுத்துவதற்கு, இளைஞர்கள் மற்றும் அதிகரித்து வரும் நடுத்தர வகுப்பினர் உள்ளிட்டவை காரணமாகும் என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக, உற்பத்தி, தொழில் மற்றும் வர்த்தகம், மக்களுக்கு இடையேயான தொடர்பு ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவதாக பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளாக, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்று பிரதமர் வலியுறுத்தினார். குறைந்த அரசு, அதிகபட்ச ஆளுமை என்ற கொள்கையின் அடிப்படையில், இந்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மத்திய அரசு மட்டுமே 7,000 சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளதாக கூறினார். உலகத் தரவரிசையில் இடம்பெற வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை இது வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். சிறப்பான செயல் திறன், வெளிப்படைத்தன்மை, வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் பலன் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி குறித்து பேசிய பிரதமர், பல ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு, இது நடைமுறை சாத்தியமானதாக தெரிவித்தார். இதனை செயல்படுத்துவது மிகவும் சவாலானது என்றும், எதிர்காலத்தில் இதனை ஆய்வுக்கான பாடமாக கூட எடுக்கலாம் என்றும் பிரதமர் கூறினார். இது இந்தியாவால் மிகப்பெரிய முடிவுகளை எடுத்து, விரைவில் அமல்படுத்த முடியும் என்பதை வெளிக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, அவரது கொள்கை முடிவுகள் மற்றும் எளிதில் தொழில் செய்வதற்காக அண்மையில் மேற்கொண்ட பணிகளுக்காக தலைமை செயல் அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர். டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம், திறன் மேம்பாடு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் பணிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு பல்வேறு தலைமை செயல் அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்தனர். திறன் மேம்பாடு மற்றும் கல்வித் துறை நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட பல்வேறு தலைமை செயல் அலுவலர்கள் விருப்பம் தெரிவித்தனர். இந்தியாவில் தங்களது நிறுவனங்கள் மேற்கொண்டுவரும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர். அதாவது, பெண்கள் மேம்பாடு, டிஜிட்டல் தொழில்நுட்பம், கல்வி மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்றவற்றில் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை குறிப்பிட்டனர். ஆலோசனையின்போது, கட்டமைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட கருத்துருக்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இறுதியாக, தலைமை செயல் அலுவலர்களின் கண்ணோட்டத்தை பிரதமர் பாராட்டினார். அதிபர் டிரம்ப்-பை நாளை சந்தித்துப் பேச உள்ளதை ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர், இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே மாதிரியானவை என்று குறிப்பிட்டார். அமெரிக்கா வலுவானதாக மாறும்போது, இயற்கையாகவே இந்தியா பயனடையும் என்று பிரதமர் தெரிவித்தார். வலுவான அமெரிக்கா அமைவது, உலகுக்கே நல்லது என்று இந்தியா நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார். பெண்கள் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இந்தியாவில் தொடங்குவோம் மற்றும் புத்தாக்க முயற்சிகள் போன்ற துறைகளில் தங்களது ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை செயல் அலுவலர்களை கேட்டுக் கொண்டார். பள்ளி செல்லும் குழந்தைகளின் தேவைகளுடன் சுகாதார நடவடிக்கைகள், பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இணைக்குமாறு அவர் பரிந்துரை செய்தார். மேலும், இந்தியாவின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலேயே தான் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.
PM @narendramodi interacted with top Indian and American CEOs in Washington DC. pic.twitter.com/oK908BmZJC
— PMO India (@PMOIndia) June 25, 2017
Interacted with top CEOs. We held extensive discussions on opportunities in India. pic.twitter.com/BwjdFM1DaZ
— Narendra Modi (@narendramodi) June 25, 2017