Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை


மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர். என். ரவி அவர்களே, தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களே, மத்திய அமைச்சர் திரு எல். முருகன் அவர்களே, இதர அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆர். வேல்ராஜ் அவர்களே, இளம் நண்பர்களே, அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களே!

அனைவருக்கும் வணக்கம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் முதலில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எதிர்காலம் பற்றி ஏற்கனவே நீங்கள் முடிவு செய்திருப்பீர்கள். எனவே, இன்று, வெற்றியின் தினம் மட்டுமல்ல, விருப்பங்களின் நாளும் கூட. நம் இளைஞர்களின் கனவுகள் அனைத்தும் நிறைவேற விழைகிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கும், இதர பணியாளர்களுக்கும் இது ஓர் சிறப்பான தினம். நீங்கள் தான் நாளைய தலைவர்களை உருவாக்கும் தேச கட்டமைப்பாளர்கள். ஏராளமான பிரிவு மாணவர்கள் கல்வி பயின்று, வெளியேறியிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். எனினும் ஒவ்வொரு பிரிவினரும் தனித்துவம் வாய்ந்தவர்களே. தங்களுக்கு உரித்தான நினைவுகளை அவர்கள் விட்டுச் செல்கின்றனர். குறிப்பாக, இன்று பட்டம் பெறும் மாணவர்களின் பெற்றோருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். உங்கள் குழந்தையின் வெற்றியில் உங்கள் தியாகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நமது இளைஞர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக சென்னை என்ற துடிப்பான நகரில் இன்று  நாம் குழுமியுள்ளோம்.

125 ஆண்டுகளுக்கு முன்பு, பிப்ரவரி 1897 இல் மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையிடம் சுவாமி விவேகானந்தர் பேசினார். எதிர்கால இந்தியாவிற்கு அவரது திட்டங்கள் பற்றி  கேட்கப்பட்டது. “எனது நம்பிக்கை, இளைய சமுதாயத்தினரிடம், நவீன சமுதாயத்தினரிடம் உள்ளது. அவர்களிலிருந்து என் பணியாளர்கள் உருவாவார்கள். சிங்கங்களைப் போல, ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் அவர்கள் தீர்வு காண்பார்கள்”, என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் இன்றும் பொருத்தமாகவே உள்ளன. ஆனால் இந்த முறை, தனது இளைஞர்களின் மீது  இந்தியா மட்டுமே நம்பிக்கை கொள்ளவில்லை. உலக நாடுகள் முழுவதும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையுடன் நோக்குகின்றன. ஏனென்றால் நீங்கள் தான் நாட்டின் வளர்ச்சி சக்திகள், இந்தியா தான் உலகின் வளர்ச்சி இயந்திரம்.

இது மிகப்பெரிய கௌரவம். இது மாபெரும் பொறுப்பும் கூட. இதில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

நண்பர்களே,

நம் இளைஞர்களிடையே நம்பிக்கை பற்றி பேசும்போது முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களை நாம் எவ்வாறு மறக்க முடியும். அண்ணா பல்கலைக்கழகத்துடன் டாக்டர் கலாம் மிக நெருக்கமாக இருந்தார் என்பது, இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பெருமிதம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன். அவர் தங்கியிருந்த அறை, நினைவகமாக மாறியிருப்பதாக அறிகிறேன் . அவரின் சிந்தனைகளும், மாண்புகளும் நம் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டட்டும்.

நண்பர்களே,

பிரத்தியேகமான தருணத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள். உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் காலம் என்றும் சிலர் இதை அழைக்கக்கூடும். ஆனால் மிகப்பெரிய வாய்ப்பின் தருணமாகவே நான் இதைக் காண்கிறேன். கொவிட்- 19 பெருந்தொற்று, முன் எப்போதும் இல்லாத, எதிர்பாராத நிகழ்வு. ஒருவரும் அறிந்திராத, நூற்றாண்டில் ஒரு முறை ஏற்படக்கூடிய நெருக்கடியாக அது இருந்தது. ஒவ்வொரு நாடும் இந்த சவாலை எதிர்கொண்டது. நமது ஆற்றலை நெருக்கடிகள் தான் வெளிக்கொணருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சாமானிய மக்களால், நம்பிக்கையுடன் இந்தியா இந்த நிலையை எதிர்கொண்டது.  அதன் விளைவாக இன்று இந்தியாவில் உள்ள அனைத்து துறையும் புத்துணர்ச்சியுடன் வளர்ந்து வருகின்றன.

தொழில்துறையாக இருந்தாலும், புதுமை கண்டுபிடிப்பாக இருந்தாலும், முதலீடாக இருந்தாலும் அல்லது சர்வதேச வர்த்தகமாக இருந்தாலும் இந்தியா தான் முன்னணியில் உள்ளது.  நமது தொழில்துறை புத்தெழுச்சி பெற்றுள்ளது.  உதாரணமாக, மின்னணு பொருட்கள் உற்பத்தியை குறிப்பிடலாம். கடந்த ஆண்டு உலகின் இரண்டாவது பெரிய செல்போன் உற்பத்தியாளராக இந்தியா இருந்தது.  புதுமை கண்டுபிடிப்பு நமது வாழ்க்கை முறையின் ஒருபகுதியாக மாறியுள்ளது.  கடந்த ஆறே ஆண்டுகளில், அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளது. ஆமாம், நீங்கள் கேள்விப்பட்டது சரிதான், 15 ஆயிரம் சதவீதம்தான்.  2016-ல் வெறும் 470 ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 73,000 ஆக உயர்ந்துள்ளது! தொழில்துறையும் புதுமை கண்டுபிடிப்புகளும் சிறப்பாக செயல்பட்டால் முதலீடுகள் குவியும்.  கடந்த ஆண்டு இந்தியா சாதனை அளவாக 83 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை பெற்றுள்ளது.  பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு நமது ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பெருமளவு நிதியைப் பெற்றுள்ளன.  இவை அனைத்திற்கும் மேலாக சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவாக பொருட்கள் ஏற்றுமதி மற்றும் சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் நெருக்கடியான தருணத்தில் இருந்தபோது, நாம் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்திருக்கிறோம். மேற்கே ஐக்கிய அரபு அமீரகத்துடனும், கிழக்கே ஆஸ்திரேலியாவுடனும் அண்மையில் வர்த்தக ஒப்பந்தங்களில் நாம் கையெழுத்திட்டுள்ளோம்.  சர்வதேச விநியோக சங்கிலியில் வலுவான ஒரு இணைப்பாக இந்தியா மாறியுள்ளது. இந்தியா தற்போது தடைகளை வாய்ப்புகளாக மாற்றி வரும் சூழலை பயன்படுத்தி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

நண்பர்களே,

     உங்களில் பெரும்பாலானோர் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் தொடர்பான பாடப்பிரிவுகளை படித்தவர்களாவீர். இந்த தொழில்நுட்பம் சார்ந்த இடையூறுகள் மிகுந்த இந்த யுகத்தில், மூன்று முக்கிய அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன.  முதல் அம்சம், தொழில்நுட்ப தாகமாகும். தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் சொகுசாக இருக்கலாம் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது.  பரம ஏழைகளும் கூட இதற்கு ஏற்ப மாறிவிட்டனர்.  விவசாயிகள் தங்களுக்கு தேவையான சந்தை விவரங்கள், தட்பவெப்பநிலை மற்றும் விலைவாசி பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள செல்போன் செயலிகளை பயன்படுத்துகின்றனர்.  வீட்டுவேலைகளை கவனிப்போரும் தங்களது வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளும் விதமாக தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். குழந்தைகளும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி பயில்கின்றனர். சிறு வணிகர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். நீங்கள் அவர்களிடம் ரொக்கமாக கொடுத்தால், அவர்களில் சிலர், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தக் கூறுகின்றனர். டிஜிட்டல் பணப்பட்டுவாடா மற்றும் நிதித் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உள்ளது.  உங்களது வித்தைகளை காட்டுவதற்கு புதுமை தொழில்நுட்பங்களுக்கு பெருமளவு சந்தை வாய்ப்பு காத்திருக்கிறது. 

இரண்டாவது அம்சம், சிரத்தை எடுத்து செய்வோர் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது.  முன்பு, சமூக நிகழ்வுகளின் போது, ஒரு இளைஞர் தாம் ஒரு தொழில்முனைவோர் என்று சொல்வது சிரமமானதாகும்.  மக்கள் அத்தகையோரிடம், வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறும் வகையில் நிலைத்தன்மை பெற்றுவிடு, அதாவது சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பை பெற்றுவிடு என்று கூறுவது வழக்கமாக இருந்தது.  தற்போது, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.  உனது சொந்த முயற்சியில் ஏதாவது தொழில் தொடங்க முயற்சித்தாயா என்று கேட்கின்றனர்! ஒருவர், ஒரு வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஸ்டார்ட்அப்களை தொடங்குவது எளிதானதாகத் தெரிகிறது.  சிரத்தை எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால், அதற்கு காரணம் இரண்டு அம்சங்கள் உள்ளன.  ஒன்று நீங்களாக சிரத்தை எடுப்பது.  அல்லது மற்றவர்கள் உருவாக்கிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதாகும்.

மூன்றாவது அம்சம், சீர்திருத்தங்களுக்கான மனோபாவமாகும். இதற்கு முன்பு, வலுவான அரசாங்கம் என்றால், அனைத்தையும் மற்றும் அனைவரையும் கட்டுப்படுத்துவது என்பதே பொருளாக இருந்தது.  ஆனால், நாம் இதனை மாற்றியுள்ளோம். வலுவான அரசாங்கம் என்றால், அனைத்தையும் அல்லது அனைவரையும் கட்டுப்படுத்துவதல்ல, குறுக்கிடத் தூண்டும் அமைப்பு முறையை கட்டுப்படுத்துகிறது. வலுவான அரசாங்கம் என்பது கட்டுப்படுத்துவதல்ல, மாறாக பொறுப்பாக செயல்படுவதாகும்.  வலுவான அரசாங்கம் என்பது அனைத்து அம்சங்களிலும் தலையிடுவதாகாது.  அது தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு மக்களின் திறமைகளுக்கு வாய்ப்பை அளிக்கிறது. வலுவான அரசாங்கத்தின் வலிமை, தான் அறியாததை ஏற்றுக்கொள்ளும் எளிமை அல்லது அனைத்தையும் மேற்கொள்வதில்தான் உள்ளது.  எனவேதான், மக்கள் மற்றும் அவர்களது சுதந்திரத்திற்கு அதிக இடம் அளிக்கும் சீர்திருத்தங்கள் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படுவதை நீங்கள் காணமுடிகிறது.  

புதிய தேசிய கல்விக் கொள்கை, வளர்ந்து வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்க இளைஞர்களுக்கு அதிக சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஏறக்குறைய 25,000-க்கும் மேற்பட்ட பழங்கால நடைமுறைகளை  ஒழித்தது வாழ்க்கையை எளிதாக்குவதை ஊக்குவிக்கிறது.

பங்குகள் வழியிலான மூலதன வரி நீக்கம், / முன் தேதியிட்ட வரி  நீக்கம் கார்ப்பரேட் வரி குறைப்பு ஆகியவை முதலீடுகள் மற்றும் தொழில்களுக்கு ஊக்கமளிக்கின்றன.

ட்ரோன்கள், விண்வெளி மற்றும் புவியியல் துறைகளில் ஏற்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள் இந்த துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

பிரதமரின் விரைவு சக்தி என் பெரும் திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்புத் துறையில் ஏற்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை அதி வேகத்திலும் அதிக அளவிலும் உருவாக்குகின்றன.

தொழில்நுட்பத்தின் மீது ரசனை, துணிவுமிக்க மீது நம்பிக்கை மற்றும் சீர்திருத்தத்திற்கான மனோபாவம் இப்போது உள்ளது. இந்த காரணிகள் அனைத்தும் உங்களுக்காக ஒரு தளத்தை உருவாக்குகின்றன, அங்கு வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன, அந்த வாய்ப்புகள் நிலையானவையாக இருக்கின்றன, அந்த வாய்ப்புகள் இன்று பெருகி வருகின்றன.

நண்பர்களே,

அடுத்த 25 ஆண்டுகள் உங்களுக்கும் இந்தியாவுக்கும் மிகவும் முக்கியமானவை. இது சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கிய அமிர்த காலமாகும்.

உங்களைப் போன்ற பல இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தையும் இந்தியாவின் எதிர்காலத்தையும் உருவாக்குவது நமக்கு கிடைத்த  அதிர்ஷ்டம். எனவே, உங்கள் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. உங்கள் கற்றல் இந்தியாவின் கற்றல். உங்கள் வெற்றி இந்தியாவின் வெற்றி. எனவே, உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் நீங்கள்  திட்டங்களைத் தீட்டும்போது… இந்தியாவிற்கும் நீங்கள் தானாகவே திட்டங்களைத் தீட்டுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உங்கள் தலைமுறைக்கு மட்டுமே கிடைத்த ஒரு வரலாற்று வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக செயல் படுங்கள்!

உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

**********

(Release ID: 1846086)