Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர்

அடிப்படை  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர்

அடிப்படை  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர்

அடிப்படை  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2019) கேரள மாநிலம் கொல்லம் சென்றார். தேசிய நெடுஞ்சாலை 66-ல் 13 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள, இருவழி கொல்லம் புறவழிச்சாலையை நாட்டிற்கு அவர் அர்ப்பணித்தார். கேரள மாநில ஆளுநர் நீதிபதி பி சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கே ஜே அல்போன்ஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொல்லம் ஆசிரமம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே தமது அரசின் தலையாய பணி என்றார். கொல்லம் புறவழிச்சாலை இதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்திற்கு 2015 ஜனவரியிலேயே இறுதி ஒப்புதல் வழங்கப்பட்ட போதிலும், இப்போதுதான் அதற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது என்றார். சாமானிய மனிதனின் வாழ்க்கை முறையை எளிதாக்க, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கொள்கையில், தமது அரசு நம்பிக்கைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் கேரள அரசின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டினார்.

கொல்லம் புறவழிச்சாலை, ஆலப்புழா – திருவனந்தபுரம் இடையிலான பயண நேரத்தையும், கொல்லம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், குறைக்கும்.
கேரளாவில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பாரத்மாலா திட்டத்தின்கீழ், மும்பை – கன்னியாகுமரி வழித்தடத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அனைத்துத் திட்டப்பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றி முடிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பிரகதி திட்டத்தின்கீழ், ரூ.12 லட்சம் கோடி மதிப்பீட்டிலான, 250க்கும் மேற்பட்ட திட்டப் பணிகளை தாம் இதுவரை ஆய்வு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

சாலை இணைப்பு வசதிகளை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடுகையில், தேசிய நெடுஞ்சாலைகள், கிராமச்சாலைகள் கட்டுமானப்பணி, இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் 56% கிராமப்புற குடியிருப்புகளுக்கே சாலை வசதி ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இது 90% அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கிராமப்புறங்களுக்கு 100% சாலை வசதி ஏற்படுத்துவது என்ற இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை தமது அரசுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மண்டல அளவிலான விமானப் போக்குவரத்து மற்றும் ரயில்வேபாதை விரிவாக்கப் பணிகளால் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார். “ நாம் சாலை மற்றும் பாலங்களை ஏற்படுத்துவதன் மூலம், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை இணைப்பதோடு மட்டுமின்றி, மக்களின் விருப்பங்களை சாதனைகளாக மாற்றுவதுடன், நம்பிக்கையை வாய்ப்புகளாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்ற முடியும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் பற்றி குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தின்கீழ் இதுவரை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளதுடன், இத்திட்டத்திற்காக இதுவரை 1,100 கோடி ரூபாய்க்கு மேல் விடுவிக்கப்பட்டிப்பதாகவும் கூறினார். கேரளாவில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் நடைமுறைப்படுத்துவதை விரைவுப்படுத்துமாறு அம்மாநில அரசை கேட்டுக் கொண்ட அவர், இதன் மூலம் கேரள மக்களும், பயனடைய முடியும் என்றார்.

கேரளாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா முக்கிய காரணியாக திகழ்வதை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் இது முக்கியப் பங்களிப்பை அளித்து வருவதாக கூறினார். கேரளாவின் சுற்றுலா வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த ஏதுவாக, சுதேசி தர்ஷன் மற்றும் பிரசாத் திட்டங்களின்கீழ், இம்மாநிலத்தில் ரூ.550 கோடி மதிப்பிலான 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். சுற்றுலாத்துறையில், உலக அளவில் சராசரியாக 7% அளவிற்கே வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா 2016ஆம் ஆண்டைவிட 14%-க்கு மேல் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். உலக பயண & சுற்றுலா கவுன்சிலின் 2018ஆம் ஆண்டின் அறிக்கைப்படி இந்தியா, சுற்றுலாத்துறையில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது என்றும் தெரிவித்தார். இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் 42% அதிகரித்து, 2013ஆம் ஆண்டில் 70 லட்சமாக இருந்த வெளிநாட்டு சுற்றலாப்பயணிகளின் வருகை, 2017-ல் ஒரு கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார். சுற்றுலா மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணி வருவாயும், 2013-ல் 18 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2017-ல் 27 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஈ-விசா திட்டம் அறிமுகத்தால், இந்தியா சுற்றுலாத்துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த வசதி தற்போது 166 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளுக்கு கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

***

விகீ/எம்எம்/கீதா