Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்


லக்னோ நகரில் அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் கல்வெட்டு ஒன்றை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல், முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் மற்றும் முக்கிய நபர்கள் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர், நல்ல நிர்வாகத்துக்கான நாளாகவும் அந்த நாள் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். உத்தரப்பிரதேச அரசு செயல்படும் கட்டடத்தில் அடல் பிகாரி வாஜ்யபாய் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. லோக்பவனில் பணியாற்றுபவர்கள் மத்தியில் நல்ல நிர்வாகம் மற்றும் மக்கள் சேவை உணர்வுகளை உருவாக்குவதாக இந்த பிரமாண்டமான சிலை இருக்கும் என்று பிரதமர் கூறினார்.
லக்னோ தொகுதி நீண்ட காலமாக வாஜ்பாய் அவர்களின் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்ததால், லக்னோவில் அவருடைய பெயரில் மருத்துவக் கல்வி தொடர்பான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுவது தனக்கு கிடைத்த பெருமை என்று அவர் தெரிவித்தார். வாழ்க்கையை சிறிய சிறிய பகுதிகளாகப் பார்க்காமல், ஒட்டுமொத்தமாக சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று வாஜ்பாய் கூறுவது வழக்கம் என்பதை பிரதமர் நினைவுபடுத்தினார். அரசுக்கும், நல்ல நிர்வாகத்துக்கும் அது பொருந்தும் என்றார் அவர். பிரச்சினைகள் பற்றி ஒட்டுமொத்தமாக நாம் சிந்திக்காவிட்டால், நல்ல நிர்வாகம் கிடைப்பது சாத்தியமற்றது என்று அவர் கூறினார்.

சுகாதார சேவைத் துறையில் தமது அரசின் பயண திட்டம் குறித்து பிரதமர் பட்டியலிட்டார். நோய்த் தடுப்பு வசதிகள், எல்லோருக்கும் குறைந்த செலவில் சுகாதார சேவைகள் கிடைக்கச் செய்வது, மருத்துவப் பொருட்கள் கிடைக்கச் செய்வதற்கான அரசின் தலையீடுகள், இலக்கு நிர்ணயித்துக் கொண்டு முன்னேற்றத்துக்காக செயல்படுவது போன்ற திட்டங்களை அவர் கூறினார்.

தூய்மையான பாரதம் முதல் யோகா வரையில், உஜ்வாலா முதல் ஆரோக்கியமானவர்களைக் கொண்ட இந்தியா இயக்கம் வரை, ஆயுர்வேதா முறையை ஊக்குவித்தது வரையில் எல்லாமே, இதுபோன்ற முயற்சிகள் அனைத்தும் நோய்களைத் தடுக்கும் முயற்சிகளில் முக்கியமான பங்களிப்புகளாக உள்ளன என்று அவர் கூறினார். நாடு முழுக்க கிராமப் பகுதிகளில் 1.25 லட்சத்துக்கும் அதிகமான ஆரோக்கிய மையங்களைக் கட்டியது, நோய்த் தடுப்பு சுகாதார சேவையில் முக்கியமான செயல்பாடு என்று அவர் குறிப்பிட்டார். நோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே இந்த மையங்கள் கண்டறிவதால், தொடக்க நிலையிலேயே சிகிச்சை தருவதற்கு உதவிகரமாக இருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் நாட்டில் 70 லட்சம் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை கிடைத்துள்ளது, அதில் 11 லட்சம் பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.
அனைத்து கிராமங்களிலும் கழிவறை வசதிகளும், சுகாதார சேவைகளும் கிடைக்கச் செய்வதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகள், உத்தரப்பிரதேச மக்களின் வாழ்வை எளிதாக்குவதற்கான பெரிய முயற்சி என்றும் அவர் கூறினார். தமது அரசில் நல்ல நிர்வாகம் என்பது – அனைவரின் கருத்துகளையும் கேட்பது, எல்லா குடிமக்களுக்கும் அரசின் சேவைகள் கிடைப்பது, இந்தியர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது, எல்லா குடிமக்களும் பாதுகாப்பாக உணர்வது ஆகியவற்றுக்கான முயற்சி என்றும் அவர் தெரிவித்தார். அரசின் ஒவ்வொரு நிர்வாகத் துறையிலும் மக்கள் எளிதில் அணுகும் வகையில் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இதில் அடங்கும் என்றார் அவர். சுதந்திரம் பெற்ற பிறகு, உரிமைகள் கிடைக்கச் செய்வதற்கு இந்த அரசு உயர் முன்னுரிமை கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார். நமது கடமைகள் மற்றும் நன்றிக்கடன் தெரிவித்தலுக்கு சம அளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்று உத்தரப்பிரதேச மக்களை அவர் கேட்டுக் கொண்டார். உரிமையும், நன்றியும் எப்போதும் இணைந்தே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். நல்ல கல்வி குறித்து கூறிய அவர், கல்வி வசதி பெறுவது நமது உரிமை என்று குறிப்பிட்டார். ஆனால் கல்வி நிலையங்களின் பாதுகாப்பு, ஆசிரியர்களுக்கான மரியாதை ஆகிய விஷயங்களில் நாம் நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்றார் அவர். நமது பொறுப்புகளை நிறைவேற்றி, நமது இலக்குகளை அடைய வேண்டும், அதுதான் நல்ல நிர்வாகத்துக்கான நாளில் நாம் எடுக்கும் உறுதிமொழியாக இருக்க வேண்டும், இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் உணர்வும் இதுதான் என்று பிரதமர் கூறினார்.

*****