Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசோசேம் அமைப்பின் நூற்றுண்டு தொடக்கவிழாவில் பிரதமர் ஆற்றிய உரை


அசோசேம் தலைவர் திரு. பாலகிருஷ்ணா கோயங்கா அவர்களே, பொதுச் செயலாளர் திரு. தீபக் சூடு அவர்களே, அசோசேம் அமைப்பின் லட்சக்கணக்கான உறுப்பினர்களே, இந்திய தொழில்துறை முன்னோடிகளே, முக்கியப் பிரமுகர்களே, சகோதார, சகோதரிகளே!!!

அசோசேம் அமைப்பு இன்று மிக முக்கிய காலகட்டத்தைக் கடந்துள்ளது. ஒரு தனிநபரோ அல்லது அமைப்போ 100 ஆண்டு அனுபவத்தைப் பெறுவது என்பது மிகவும் மதிக்கத்தக்க ஒன்றாகும்.

அசோசேம் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள்.

இந்த நிகழ்ச்சி, காணொலிக் காட்சி வாயிலாக ஏறத்தாழ 100 இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என என்னிடம் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொடர்புடைய நிர்வாகிகள் மற்றும் தொழில்முனைவோர், குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

நண்பர்களே,

2019 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ளது. வரவிருக்கும் 2020 புத்தாண்டும் அடுத்த பத்தாண்டுகளும் உங்களது லட்சியத்தை அடையும் வகையில், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியை அளிக்கட்டும். இந்த வாழ்த்துடன் எனது உரையைத் தொடங்குகிறேன்.

நண்பர்களே,

உங்களது நூற்றாண்டு கொண்டாட்டத்தின் மையக்கருத்து, இந்த நாடு மற்றும் நாட்டு மக்களின் இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டதாக மாற்றுவது என்பது சாதாரண வெளிப்பாடு அல்ல. கடந்த 5 ஆண்டுகளில் நாடு பெற்றுள்ள வலிமை, இதுபோன்ற இலக்குகளை நிர்ணயிக்கவும், சாதிக்கவும் வழிவகுக்கும். 5-6 ஆண்டுகளுக்கு முன், நமது பொருளாதாரம் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எங்களது அரசு இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமின்றி, பொருளாதாரத்தில் ஒழுங்கு நிலையையும் ஏற்படுத்த முயற்சித்தது.

நடைமுறைகளில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவந்து, அனைத்து முனைகளிலும் முக்கிய முடிவுகளை மேற்கொண்டதோடு, தொழில்துறையினரின் பல்லாண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம், இந்தியப் பொருளாதாரம் விதிகளின் அடிப்படையில் அதன் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதன் மூலம், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு வலுவான அடித்தளம் இடப்பட்டுள்ளது. முறைப்படுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் என்ற இரண்டு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தைக் கொண்டு சென்றுள்ளோம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிப்பது, ஜிஎஸ்டி, ஆதாருடன் இணைந்த பணப் பட்டுவாடா மற்றும் பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடிப் பட்டுவாடா போன்ற அம்சங்கள், இந்தியப் பொருளாதாரத்தை முறையான நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.

இதுதவிர, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நமது பொருளாதாரத்தை நவீனப்படுத்தி விரைவுபடுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளோம்.

இதற்கு முன்பு ஒரு தொழில் நிறுவனத்தைப் பதிவு செய்ய பல வாரங்கள் ஆன நிலையில், தற்போது சில மணிநேரங்களிலேயே அது முடிக்கப்படுகிறது. எல்லைதாண்டிய வர்த்தகத்திலும் தானியங்கி நடைமுறைகளைப் புகுத்தியதால், நேரம் குறைக்கப்பட்டுள்ளது; துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் கட்டமைப்பு வசதிகளை இணைத்ததன் மூலம் அங்கு ஏற்படும் கால விரயமும் குறைக்கப்பட்டுள்ளது. நவீனப் பொருளாதாரத்திற்கு இவை அனைத்தும் உதாரணங்களாகும்.

நண்பர்களே,

தற்போதுள்ள அரசு, தொழில் துறையினரின் கோரிக்கைகளை அறிந்து, அவர்களது யோசனைகளை முழுமையாக பரிசீலிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வரி விகிதம் இருப்பதால், வரி விகிதத்தை நாடுமுழுவதும் ஒரே சீரானதாக்க வேண்டும் என தொழில் துறையினர் விரும்பினர். எங்களது அரசு இரவு-பகலாகப் பணியாற்றி, அந்தக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. நாங்கள் ஜிஎஸ்டியை கொண்டுவந்துள்ளோம். அனைத்திற்கும் மேலாக தொழில்துறையினர் தெரிவிக்கும் கருத்துகளை அறிந்து, அதற்கேற்ப ஜிஎஸ்டியில் தொடர்ந்து மாற்றங்களை செய்து அதனை மேம்படுத்தி வருகிறோம்.

நண்பர்களே,

தொழில் நடைமுறைகள் எளிமையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்ற தொழில் துறையினரின் கோரிக்கையையும் ஏற்று எங்களது அரசு செயல்படுகிறது. இதன் காரணமாக தொழில் துவங்குவதற்கு உகந்த நாடாக மாற நடவடிக்கை மேற்கொண்ட பட்டியலில் இந்தியா உலகின் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது. 190 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், 142-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, 63-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அடிமட்ட அளவில் விதிமுறைகள் மாற்றப்பட்டதன் காரணமாகவும் கடின உழைப்பு காரணமாகவும், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மின் இணைப்பு வழங்குவது, கட்டுமான அனுமதி, ஏற்றுமதி-இறக்குமதி அனுமதி என எதுவாக இருந்தாலும், 100-க்கும் மேற்பட்ட நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, பல்வேறு தடைகள் அகற்றப்பட்டதன் காரணமாக, தரவரிசையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை மேலும் மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

நண்பர்களே,

கம்பெனி சட்டத்திலும், இதுபோன்ற 100-க்கும் மேற்பட்ட விதிமுறைகள் இருந்தன. அவற்றில் சிறு தவறுகளுக்குக் கூட குற்றவியல் நடவடிக்கை எடுக்க வகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், எங்களது அரசு தற்போது அவற்றை குற்றமற்ற தவறுகளாக மாற்றியுள்ளது. மேலும் பல விதிமுறைகளையும், இந்த குற்றவியல் நடவடிக்கை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

நாட்டின் மற்றொரு வரி விதிப்பு முறையிலும் கடந்த அக்டோபர் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். வரி செலுத்துவோருக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே ஆள் அறிமுகமற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். வெளிப்படையான, திறமையான பொறுப்புணர்வுமிக்க வரி நடைமுறையை உருவாக்கி இருக்கிறோம்.

நண்பர்களே,

பெரு நிறுவனங்களுக்கான வரியைக் குறைப்பதோடு, அந்த நடைமுறைகளையும் குறைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக இருந்து வந்த கோரிக்கை மீது இதுவரை அதிகாரத்தில் இருந்த யாரும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது அரசுதான், இதுவரை இல்லாத வகையில் பெரு நிறுவனங்களுக்கான வரியைக் குறைத்திருக்கிறது.

நண்பர்களே,

தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் குறித்தும் நாட்டில் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. தொழிலாளர்களுக்காக எதுவும் செய்யத் தேவையில்லை என சிலர் நம்பிக்கொண்டிருந்தனர். அதனால், இதுபற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் ஏற்கனவே இருந்த நிலையே தொடர அனுமதித்தனர். ஆனால் எங்களது அரசுக்கு அத்தகைய நம்பிக்கையில்லை.

அனைத்து வகையிலும் தொழிலாளர் பிரச்சினை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எங்களது நம்பிக்கை. அவர்களது வாழ்க்கை எளிமையாக்கப்பட வேண்டும். வருங்கால வைப்புநிதி மற்றும் சுகாதார சேவைகளின் பலன்கள் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும். அதற்காக அரசு பாடுபட்டு வருகிறது.

நண்பர்களே,

அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தற்போது 13 வங்கிகள் லாபம் ஈட்டத்தொடங்கியுள்ளன. ஆறு வங்கிகள் மோசமான வங்கிகள் என்ற நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளன. வங்கிகள் இணைப்பையும் விரைவுபடுத்தியிருக்கிறோம். தற்போது வங்கிக் கட்டமைப்பு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருவதோடு, வங்கிகள் வர்த்தக ரீதியாக முடிவு மேற்கொள்வதில் தலையீடுகளைத் தவிர்த்திருக்கிறோம்.

நண்பர்களே,

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்டம், பல்வேறு காரணங்களால் நலித்த நிலைக்குச் சென்ற தொழில் நிறுவனங்களுக்கு உதவிகரமாக உள்ளது.

நண்பர்களே,

மேற்குறிப்பிட்ட அனைத்து முடிவுகளும், தொழில் நிறுவனங்களையும், அவற்றின் முதலீடுகளையும் பாதுகாக்க பேருதவியாக இருக்கும்.

தற்போது அசோசேம் மேடையிலிருந்து நான் கூறவிரும்புவது யாதெனில், வங்கித் துறையுடன் தொடர்புடையவர்கள், தொழில்துறையினர், பழைய பலவீனங்களிலிருந்து மீண்டு வருவீர்கள் என உறுதியளிக்க விரும்புகிறேன். எனவே முடிவுகளை வெளிப்படையாக மேற்கொள்வதோடு, தடையின்றி முதலீடு செய்வதோடு, சுதந்திரமாக செலவு செய்யுங்கள். சரியான முடிவுகள் அல்லது நியாயமான வர்த்தக ரீதியான முடிவுகளுக்காக, நியாயமற்ற நடவடிக்கை எதையும் எடுக்க மாட்டோம் எனவும் உறுதியளிக்கிறேன்.

நண்பர்களே,

அனைத்து வகையிலும் இந்த அரசு இந்திய தொழில்துறையினருக்கு பக்கபலமாக இருக்கும். இதன்மூலமே உங்களது உணர்வுகள் முன்பைவிட மேம்பட்டதாக இருப்பதோடு, வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தியை அதிகரிக்கச் செய்து சொத்து மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும். உங்களுக்கு திறமையிருக்கிறது! முன்னோக்கிச் செல்லுங்கள் என்று இந்த மேடையிலிருந்து தொழில்முனைவோரை கேட்டுக் கொள்கிறேன். உலகச்சந்தை நம்முன்னால் நிற்கிறது. இந்த உலகுடன் போட்டி போடுவதற்கான மனஉறுதி நம்மிடம் உள்ளது. உங்களது உறுதிப்பாடும், வலிமையும், இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

உங்களது நீண்ட நெடிய பாரம்பரியம் விரிவடைவதோடு, 21 ஆம் நூற்றாண்டு, புதிய இந்தியாவை வலிமையுடையதாக்கும். நீங்கள் அனைவரும் உங்களது முயற்சிகளில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள்.

நன்றி!!!

*****