பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான அறிவிக்கப்பட்ட மத்திய பட்டியலில் சேர்த்தல்/திருத்தம் செய்து அறிவிக்கை செய்வதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது, அசாம், பீகார், இமாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் பரிந்துரையின்படி, 25 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மத்திய பட்டியலில், துணை சாதிகள், அதன் பொருள் உள்ளிட்ட அம்சங்களுக்கு ஒட்டுமொத்தமாக 2,479 பதிவுகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. கடைசியாக செப்டம்பர் 2016 வரை இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், அசாம், பீகார், இமாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் சாதிகள்/இனங்களை சேர்க்கவும், ஏற்கனவே உள்ள பட்டியலில் திருத்தங்களை செய்யவும் தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்திடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட்டன. இதன்படி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் பரிந்துரையின்படி, 28 மாற்றங்கள் செய்ய (15 புதிய பதிவுகள், 9 பொருள்/துணை சாதி மற்றும் 4 திருத்தங்கள்) அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
இந்த மாற்றங்களை செய்வதன் மூலம், இந்த வகுப்பு/இனங்களைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில், அரசு பணிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவார்கள். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தற்போது மத்திய அரசு வழங்கும் பல்வேறு நலத் திட்டங்கள், ஊக்கத் தொகை (ஸ்காலர்ஷிப்) ஆகியவற்றை பெறுவதற்கு இவர்களும் தகுதிபெறுவார்கள்.
பின்னணி
இந்திரா சாஹ்னி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையச் சட்டம் 1993-ன் கீழ், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணைய சட்டம் 1993-ன் 9ம் பிரிவில் (ஆணையத்தின் செயல்பாடுகள்) கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
1. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் சேர்க்குமாறு எந்த வகுப்பைச் சேர்ந்த குடிமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் குறித்தும் ஆணையம் ஆய்வுசெய்யலாம். இந்தப் பட்டியலில் வேறு எதாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்த்துள்ளது அல்லது சேர்க்கப்படாதது குறித்த புகார்களைப் பெறலாம். அதனடிப்படையில், சரியானது என்ற அடிப்படையில் செய்ய வேண்டிய திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கலாம்.
2. பொதுவாக, ஆணையத்தின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.