பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். 30ம் தேதி காலை, 10:30 மணிக்கு, அம்பாஜி கோவிலில் பூஜை மற்றும் வழிபாடு செய்கிறார். பின்னர் நண்பகல் 12 மணியளவில் மெஹ்சானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி, காலை 8 மணியளவில், அவர் கெவாடியாவுக்குச் செல்கிறார், அங்கு அவர் ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்கள் நடைபெறும். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,, நிறைவடைந்த புதிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், காலை, 11:15 மணிக்கு, ஆரம்ப் 5.0-ல், 98-வது பொது அடித்தளப் பாடத்திட்டப் பிரிவில் பயிற்சி பெற்ற பயிற்சி அதிகாரிகளிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.
மெஹ்சானாவில் பிரதமர்
ரயில், சாலை, குடிநீர் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற பல துறைகளில் சுமார் 5800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தொடங்கி வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் திட்டங்களில் மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் (டபிள்யூ.டி.எஃப்.சி) புதிய பாண்டு–நியூ சனந்த் (என்) பிரிவு அடங்கும். விராம்காம் – சமகியாலி இரட்டை ரயில் பாதை, கடோசன் சாலை – பெச்ராஜி – மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் (எம்.எஸ்.ஐ.எல் சைடிங்) ரயில் திட்டம், மெஹ்சானா மற்றும் காந்திநகர் மாவட்டத்தின் விஜாபூர் தாலுகா மற்றும் மான்சா தாலுகாவின் பல்வேறு கிராம ஏரிகளை செறிவூட்டுவதற்கான திட்டம், மெஹ்சானா மாவட்டத்தில் சபர்மதி ஆற்றின் மீது வலசானா தடுப்பணை, பாலன்பூர், பனஸ்கந்தாவில் குடிநீர் வழங்குவதற்கான இரண்டு திட்டங்கள், தாரோய் அணையை அடிப்படையாகக் கொண்ட பாலன்பூர் லைஃப்லைன் திட்டம் (எச்.டபிள்யூ), 80 எம்.எல்.டி திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமரால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களில் மஹிசாகர் மாவட்டத்தின் சாந்த்ராம்பூர் தாலுகாவில் நீர்ப்பாசன வசதிகளை வழங்கும் திட்டமும் அடங்கும். நரோடா – தெஹ்காம் – ஹர்சோல் – தன்சுரா சாலை, சபர்கந்தாவை அகலப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல், காந்திநகர் மாவட்டத்தில் கலோல் நகர்பாலிகா கழிவுநீர் மேலாண்மைக்கான திட்டம், மற்றும் சித்பூர் (பதான்), பாலன்பூர் (பனஸ்கந்தா), பயாட் (ஆரவல்லி) மற்றும் வத்நகர் (மெஹ்சானா) ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான திட்டங்கள் ஆகியவற்றுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
கெவாடியாவில் பிரதமர்
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு உணர்வை மேலும் அதிகரிக்கும் நோக்கில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாகக் (ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்) கொண்டாட பிரதமர் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது.
அக்டோபர் 31-ம் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பையும் அவர் பார்வையிடுகிறார், இதில் எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்) மற்றும் பல்வேறு மாநில காவல்துறையின் அணிவகுப்பு பிரிவுகள் பங்கேற்கும். பெண் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த பெண்களின் இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சி, பி.எஸ்.எஃப்–ன் பெண்கள் பங்கேற்கும் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி, குஜராத் பெண் காவல்துறையினரின் நடன நிகழ்ச்சி, சிறப்பு என்.சி.சி நிகழ்ச்சி, பள்ளி இசைக்குழுக்களின் நிகழ்ச்சி, இந்திய விமானப்படையின் நிகழ்ச்சி, துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சியைக் காட்சிப்படுத்துதல் ஆகியவை சிறப்பு இதில் இடம்பெறும் சிறப்பு அம்சங்களாகும்.
கெவாடியாவில் ரூ.160 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஏக்தா நகரில் இருந்து அகமதாபாத் வரையிலான பாரம்பரிய ரயில் சேவை தொடர்பான திட்டமும் இதில் அடங்கும். நர்மதா ஆரத்திக்கான திட்டம், கமலம் பூங்கா, ஒற்றுமை சிலைக்குள் நடைபாதை, 30 புதிய மின் பேருந்துகள், 210 மின்–சைக்கிள்கள் மற்றும் பல கோல்ஃப் வண்டிகள், ஏக்தா நகரில் நகர எரிவாயு விநியோக கட்டமைப்பு மற்றும் குஜராத் மாநில கூட்டுறவு வங்கியின் ‘சகர் பவன்‘ ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும், கெவாடியாவில் அவசர சிகிச்சை மையத்துடன் கூடிய துணை மாவட்ட மருத்துவமனை மற்றும் சூரிய மின் சக்தித் திட்டத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
ஆரம்ப் 5.0-ன் நிறைவு விழாவில், 98 வது பொது அடித்தளப் பாடத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பயிற்சி அலுவலர்களிடையே பிரதமர் உரையாற்றுகிறார். ‘தடைகளைத் தகர்த்தல்‘ என்ற கருப்பொருளில் ஆரம்ப்–ன் 5 வது பதிப்பு நடைபெறுகிறது. நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தொடர்ந்து மறுவடிவமைத்து, தடைகளைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாக இது நடத்தப்படுகிறது. மேலும் நிர்வாகத் துறையில் தடைகளை எதிர்கொள்வதற்கான வழிகளை வரையறுக்கும் முயற்சியாக இது நடைபெறுகிறது. “நான் அல்ல நாங்கள்” என்ற கருப்பொருளில் 98 வது பொது அடித்தளப் பாடப் பிரிவில் இந்தியாவின் 16 குடிமைப் பணிப் பிரிவுகள் மற்றும் பூட்டானின் 3 குடிமைப் பணிப் பிரிவுகளைச் சேர்ந்த 560 பயிற்சி அதிகாரிகள் உள்ளனர்.
***********
Release ID: 1972788
PKV/PLM/KRS