Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அக்டோபர் 1-ம் தேதி தெலங்கானா செல்கிறார் பிரதமர்


பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 அக்டோபர் 1 ஆம் தேதி தெலங்கானாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2.15 மணியளவில், மகபூப்நகர் மாவட்டத்திற்கு வரும் பிரதமர், அங்கு சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உயர் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிகழ்ச்சியின் போது, காணொலி மூலம் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் நவீன சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குகப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்,  பல சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த நிகழ்ச்சியின் போது நடைபெறும். நாக்பூர் – விஜயவாடா பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியான முக்கிய சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை -163 ஜி இன் வாரங்கல் முதல் கம்மம் பிரிவு வரை 108 கி.மீ நீளமுள்ள ‘நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை’ மற்றும் என்.எச் -163 ஜி இன் கம்மம் முதல் விஜயவாடா பிரிவு வரை 90 கி.மீ நீளமுள்ள நான்கு வழி அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட கிரீன்ஃபீல்டு நெடுஞ்சாலை ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கும். சுமார் ரூ.6400 கோடி செலவில் இந்த சாலை திட்டங்கள் உருவாக்கப்படும். இந்த திட்டங்கள் வாரங்கல் மற்றும் கம்மம் இடையிலான பயண தூரத்தை சுமார் 14 கி.மீ குறைக்கும்; கம்மம் மற்றும் விஜயவாடா இடையே சுமார் 27 கி.மீ குறையும் .

தேசிய நெடுஞ்சாலை 365 பிபியின் 59 கி.மீ நீளமுள்ள சூர்யபேட்டை முதல் கம்மம் வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.  சுமார் 2,460 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஹைதராபாத் – விசாகப்பட்டினம் வழித்தடத்தின்  ஒரு பகுதியாகும். இது கம்மம் மாவட்டம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில்,  ’37 கி.மீ. நீளமுள்ள ஜக்லெய்ர் – கிருஷ்ணா புதிய ரயில் பாதையை’ பிரதமர் அர்ப்பணிப்பார். ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த புதிய ரயில் பாதை பிரிவு பின்தங்கிய மாவட்டமான நாராயண்பேட்டையின் பகுதிகளை முதல் முறையாக ரயில்வே வரைபடத்தில் கொண்டு வருகிறது. கிருஷ்ணா ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் (கச்சிகுடா) – ராய்ச்சூர் – ஹைதராபாத் (கச்சிகுடா) ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தெலங்கானாவின் ஹைதராபாத், ரங்காரெட்டி, மகபூப்நகர், நாராயண்பேட் ஆகிய மாவட்டங்களை கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை இருக்கும். இந்த சேவை பின்தங்கிய மாவட்டங்களான மகபூப்நகர் மற்றும் நாராயண்பேட்டையில் உள்ள பல புதிய பகுதிகளுக்கு முதல் முறையாக ரயில் இணைப்பை வழங்கும், இது மாணவர்கள், தினசரி பயணிகள், தொழிலாளர்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள உள்ளூர் கைத்தறி தொழில்துறையினருக்கு பயனளிக்கும்.

நாட்டில் தளவாட செயல்திறனை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்த் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்படும்.  ‘ஹாசன்-செர்லபள்ளி எல்பிஜி பைப்லைன் திட்டத்தை’ பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சுமார் ரூ.2170 கோடி செலவில் கட்டப்பட்ட எல்பிஜி குழாய் திட்டம், கர்நாடகாவின் ஹாசனில் இருந்து செர்லபள்ளி (ஹைதராபாத்தின் புறநகர்) வரை, இப்பகுதியில் எல்பிஜி போக்குவரத்து மற்றும் விநியோகத்தின் பாதுகாப்பான, செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையை வழங்குகிறது. கிருஷ்ணப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் (மல்காபூர்) வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (பிபிசிஎல்) மல்டி-ப்ராடக்ட் பெட்ரோலியம் பைப்லைனுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.1940 கோடி செலவில் 425 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதிக்கப்படும். இந்த பைப்லைன் பிராந்தியத்தில் பாதுகாப்பான, வேகமான, திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பெட்ரோலிய பொருட்களை வழங்கும்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் 5 புதிய கட்டிடங்களை பிரதமர் திறந்து வைக்கிறார். ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், கணிதம் மற்றும் புள்ளியியல் துறை; மேலாண்மை ஆய்வுகள் துறை; விரிவுரை அரங்க வளாகம் – III;  மற்றும் சரோஜினி நாயுடு கலை மற்றும் தொடர்பியல் துறை (இணைப்பு)  ஆகியவை இதில் அடங்கும். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மேம்பட்ட  வசதிகளை வழங்குவதற்கான ஒரு படியாகும். 

——

 

ANU/AD/PKV/KPG