ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் 2024 ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 58-வது அகில இந்திய காவல்துறைத் தலைமை இயக்குநர்கள்/ காவல்துறைத் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவது குறித்து விவாதித்த பிரதமர், இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டது, குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு முன்னுதாரண மாற்றமாகும் என்றார். புதிய குற்றவியல் சட்டங்கள் ‘குடிமகன், கண்ணியம் மற்றும் நீதிக்கு முன்னுரிமை’ என்ற உணர்வோடு உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ‘தண்டா’வுடன் (லத்தி) பணியாற்றுவதற்குப் பதிலாக, காவல்துறை இப்போது ‘டேட்டா’வுடன் (தரவு)பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தினார். எந்த நேரத்திலும் பெண்கள் அச்சமின்றி வேலை செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதன் மூலம் பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு அவர் காவல்துறையை வலியுறுத்தினார்.
குடிமக்கள் மத்தியில் காவல்துறையின் நேர்மறையான பிம்பத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். குடிமக்களின் நலனுக்காக நேர்மறையான தகவல்களையும், செய்திகளையும் பரப்புவதற்கு காவல் நிலைய அளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார். இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் குறித்த முன்கூட்டிய தகவல்களை பரப்புவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். குடிமக்கள்-காவல்துறை இணைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய அவர் பரிந்துரைத்தார். எல்லை கிராமங்கள் இந்தியாவின் ‘முதல் கிராமங்கள்’ என்பதால் உள்ளூர் மக்களுடன் சிறந்த ‘இணைப்பை’ ஏற்படுத்த அரசு அதிகாரிகள் எல்லை கிராமங்களில் தங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சூரியனுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் விண்வெளி திட்டமான ஆதித்யா-எல் 1 இன் வெற்றியையும், அரபிக் கடலில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்து 21 பணியாளர்களை இந்திய கடற்படை விரைவாக மீட்டதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், இதுபோன்ற சாதனைகள் இந்தியா, உலகின் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து வருவதைக் காட்டுகிறது என்றார். ஆதித்யா-எல் 1 வெற்றி, சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றியைப் போன்றது என்று அவர் கூறினார். இந்திய கடற்படையின் வெற்றிகரமான நடவடிக்கைக்கு அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்திய காவல்துறை, 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நவீன மற்றும் உலகத்தரம் வாய்ந்த காவல்துறையாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
சிறப்பு சேவைகளுக்கான காவல்துறை பதக்கத்தையும் பிரதமர் வழங்கினார். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை இணை அமைச்சர்கள், மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் டி.ஜி.எஸ்.பி / ஐ.ஜி.எஸ்.பி மற்றும் மத்திய காவல் அமைப்புகள் / மத்திய ஆயுத காவல் படைகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டுகளைப் போலவே, நேரடியாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெவ்வேறு நிலைகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிதாக இயற்றப்பட்ட முக்கிய குற்றவியல் சட்டங்கள், பயங்கரவாத எதிர்ப்பு உத்திகள், இடதுசாரி தீவிரவாதம், வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல்கள், உலகளாவிய தீவிரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பின் முக்கிய கூறுகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
***
(Release ID: 1994017)
ANU/SM/BR/RR
Over the last two days, took part in the DGP/IGP conference. We had extensive deliberations on ways to make policing more modern and data oriented. We also discussed ways on furthering public safety and increasing connect with the people, especially in remote areas.… pic.twitter.com/kwj3WAaMCK
— Narendra Modi (@narendramodi) January 7, 2024