Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில்  பிரதமர் ஆற்றிய  உரையின் தமிழாக்கம்


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள  மத்திய அமைச்சரவை நண்பர்கள் திரு ஜகத் பிரகாஷ் நத்தா, திரு மன்சுக் மாண்டவியா, திரு பிரதாப்ராவ் ஜாதவ், திருமதி அனுப்ரியா படேல் மற்றும் திருமதி ஷோபா கரந்த்லாஜே  அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராம்வீர் சிங் பிதுரி அவர்களே, மாநில ஆளுநர்களே, முதலமைச்சர்களேசட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மருத்துவர்களே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்களுடன் தொடர்புடைய ஆயுஷ் மற்றும் சுகாதார வல்லுநர்களே, சுகாதார அமைப்பில் ஈடுபட்டுள்ள சகோதர சகோதரிகளே!

இன்று, ஒட்டுமொத்த தேசமும் பகவான் தன்வந்திரியின் பிறந்தநாள் மற்றும் தன்தேராஸ் தினத்தைக் கொண்டாடுகிறது. உங்கள் அனைவருக்கும் தன்தேராஸ் மற்றும் தன்வந்திரி ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில், நவீன மருத்துவத்துடன் ஆயுர்வேத அறிவை ஒருங்கிணைத்து, சுகாதாரத் துறையில் புதிய அத்தியாயத்தை நாடு சேர்த்துள்ளது. அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், இதற்கான முக்கிய மையமாக மாறியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், இந்த நிறுவனத்தின் முதல் கட்டத்தை அர்ப்பணிக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. தன்வந்திரி ஜெயந்தியான இன்று, அதன் இரண்டாம் கட்டத்தை துவக்கி வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. பஞ்சகர்மா போன்ற பழங்கால நடைமுறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்திருப்பதை இங்கு காண்போம். ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ அறிவியல் துறைகளிலும் மேம்பட்ட ஆய்வுகள் நடைபெறும்.

நண்பர்களே,

ஒரு நாட்டின் குடிமக்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், அதன் முன்னேற்றம் வேகமாக இருக்கும். இதை மனதில் வைத்து, சுகாதாரக் கொள்கையின் ஐந்து தூண்களை வரையறுத்து மத்திய அரசு தனது குடிமக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது. முதலாவது  நோய்த் தடுப்புக்கான சுகாதாரப் பராமரிப்பு. இரண்டாவது, சரியான நேரத்தில் நோய்களைக் கண்டறிதல். மூன்றாவது, இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சைகளையும் மருந்துகளையும் வழங்குதல். நான்காவது, சிறிய நகரங்களில் நல்ல சிகிச்சைகளை வழங்கி, மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல். ஐந்தாவது, சுகாதார சேவைகளில் தொழில்நுட்பத்தின் விரிவாக்கம். இங்கு, ஏறத்தாழ 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.நாட்டில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணற்ற முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நண்பர்களே,

ஏழையாக இருந்தாலும் சரி, நடுத்தர வகுப்பினராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சிகிச்சை செலவைக் குறைப்பது எங்கள் அரசின் முன்னுரிமை. இன்று, நாடு முழுவதும் உள்ள 14,000 பிரதமரின் மக்கள் மருந்தக மையங்கள்  நமது  அரசு எவ்வளவு உணர்வுப்பூர்வமாக செயல்படுகிறது என்பதற்கு சாட்சியாக  திகழ்கின்றன. இந்த மையங்களில் மருந்துகள் 80 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும். இந்த  மையங்கள்  இல்லாவிட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மருந்துகளுக்காக கூடுதலாக 30,000 கோடி ரூபாய் செலவழித்திருப்பார்கள்.

 

இலவச டயாலிசிஸ் திட்டத்தால் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்கும் நோக்கத்தில் நமது அரசு இந்திரதனுஷ்  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், கடுமையான நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறது.

நண்பர்களே,

ஆயுர்வேதம் தொடர்பான நமது நாட்டின் பரந்த கையெழுத்துப் பிரதிகளை பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம். இத்தகைய கையெழுத்துப் பிரதிகள் பல இடங்களில் சிதறிக்கிடக்கின்றன. இந்த அறிவுப் பொக்கிஷங்கள் அனைத்தும் கற்களில் பொறிக்கப்பட்டிருக்கலாம், செப்புத் தகடுகளில் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது கையால் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளில் காணப்படலாம். இவை அனைத்தையும் சேகரித்து, இந்த செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில், அவற்றிலிருந்து  புதிய நுண்ணறிவுகளைப் பிரித்தெடுக்க தொழில்நுட்பத்துடன் இணைக்கும்  குறிப்பிடத்தக்க  முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.

மீண்டும் உங்கள்  அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

நன்றி!

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2069264

***

(Release ID: 2069264)

TS/BR/RR