Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகமதாபாத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை

அகமதாபாத்தில் ராமகிருஷ்ண மடம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை


மதிப்பிற்குரிய சுவாமி கௌதமானந்தா ஜி மகராஜ் அவர்களே, ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் மதிப்புமிக்க துறவிகளே, குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே, இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சிறப்பு விருந்தினர்களே, தாய்மார்களே, வணக்கம்!

குஜராத்தின் மைந்தன் என்ற முறையில், இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னை சாரதா, குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் பாதங்களில் நான் வணங்குகிறேன். இன்றைய நிகழ்ச்சி சுவாமி பிரேமானந்த் மகராஜ் ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறுகிறது. நானும் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

நண்பர்களே,

மகத்தான ஆளுமைகளின் ஆற்றல் பல நூற்றாண்டுகளாக உலகில் நேர்மறையான படைப்பாக்கத்தை விரிவுபடுத்துகிறது. அதனால்தான் இன்று, சுவாமி பிரேமானந்த் மகாராஜின் பிறந்த நாளில் இத்தகைய புனிதமான நிகழ்வை நாம் காண்கிறோம். லேகம்பாவில் புதிதாக கட்டப்பட்ட பிரார்த்தனை மண்டபம் மற்றும் சாது இல்லம் பாரதத்தின் புனித பாரம்பரியத்தை வளர்க்கும். சேவை மற்றும் கல்விக்கான பயணம் இங்கே தொடங்குகிறது, இது பல தலைமுறைகளுக்கு பயனளிக்கும்.

நண்பர்களே,

ஒரு மரத்தின் ஆற்றலை அதன் விதையிலிருந்து அறியலாம். சுவாமி விவேகானந்தர் போன்ற பெரும் துறவிகளின் எல்லையற்ற சக்தியைக் கொண்ட அந்த மரமே ராமகிருஷ்ண மடம். எனவே, அதன் தொடர்ச்சியான விரிவாக்கமும் அது மனிதகுலத்திற்கு வழங்கும் நிழலும் எல்லையற்றது. ராமகிருஷ்ண மடத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள, ஒருவர் சுவாமி விவேகானந்தரைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் மிக முக்கியமாக, அவரது போதனைகளை பின்பற்றி வாழ வேண்டும். அவரது எண்ணங்களை நீங்கள் வாழத் தொடங்கிவிட்டால், ஒரு வித்தியாசமான ஒளி உங்களை எவ்வாறு வழிநடத்துகிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள். இதை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன். ராமகிருஷ்ண மிஷனும், அதன் மகான்களும், சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும் என் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்தின என்பதை பழைய மகான்கள் அறிவார்கள்.

நண்பர்களே,

தற்போது, ராமகிருஷ்ண மிஷன் உலகளவில் 280-க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது. மேலும் பாரதத்தில் ராமகிருஷ்ண இயக்கத்துடன் இணைந்த கிட்டத்தட்ட 1200 ஆசிரமங்கள் உள்ளன. இந்த ஆசிரமங்கள் மனித சேவை மையங்களாக செயல்படுகின்றன. ராமகிருஷ்ண மிஷனின் பணிகளுக்கு குஜராத் நீண்டகாலமாக சாட்சியாக இருந்து வருகிறது. கடந்த சில பத்தாண்டுகளில் குஜராத்தில் எப்போதெல்லாம் நெருக்கடி வந்ததோ, அப்போதெல்லாம் ராமகிருஷ்ண மிஷன் எப்போதும் அங்கேயே இருந்து மக்களுக்காக உழைத்து வந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகள் அனைத்தையும் நான் நினைவு கூர்ந்தால், அதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால் சூரத்தில் வெள்ளம் ஏற்பட்ட காலம், மோர்பி அணை சோகம், பூஜ் பூகம்பத்திற்குப் பிந்தைய விளைவுகள், பஞ்ச காலம் மற்றும் அதிக மழை பெய்த காலங்கள் உங்களுக்கு நினைவிருக்கும். குஜராத்தில் எப்போதெல்லாம் பேரிடர் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் ராமகிருஷ்ண மிஷனுடன் தொடர்புடையவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர். பூகம்பத்தால் அழிக்கப்பட்ட 80 க்கும் மேற்பட்ட பள்ளிகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் ராமகிருஷ்ண மிஷன் முக்கிய பங்கு வகித்தது. குஜராத் மக்கள் இந்த சேவையை இன்னும் நினைவுகூர்கிறார்கள், உத்வேகம் பெறுகிறார்கள்.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தருக்கு குஜராத்துடன் சிறப்பான தொடர்பு உண்டு. அவரது வாழ்க்கைப் பயணத்தில் குஜராத் முக்கிய பங்கு வகித்தது. சுவாமி விவேகானந்தர் குஜராத்தில் பல இடங்களுக்குச் சென்றார். இங்குதான் சுவாமிஜி முதன்முதலில் சிகாகோ உலக மதங்களின் பாராளுமன்றத்தைப் பற்றி அறிந்தார். இங்கு பல சாஸ்திரங்களை ஆராய்ந்து வேதாந்தத்தை பரப்ப தன்னை தயார்படுத்திக் கொண்டார். 1891 ஆம் ஆண்டில், சுவாமிஜி போர்பந்தரில் உள்ள போஜேஷ்வர் பவனில் பல மாதங்கள் தங்கியிருந்தார். குஜராத் அரசு இந்த கட்டிடத்தை நினைவு கோயிலாக மாற்றுவதற்காக ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைத்தது. குஜராத் அரசு 2012 முதல் 2014 வரை சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டைக் கொண்டாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

சகோதர சகோதரிகளே,

சுவாமி விவேகானந்தர் நவீன அறிவியலின் பெரும் ஆதரவாளர். விஷயங்களை அல்லது நிகழ்வுகளை விவரிப்பதில் மட்டுமல்ல, நம்மை ஊக்குவித்து முன்னேற்றுவதிலும் அறிவியலின் முக்கியத்துவம் உள்ளது என்று சுவாமிஜி நம்பினார். தற்போது, நவீன தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் இருப்பு, உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பு மற்றும் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான படிகள், நவீன உள்கட்டமைப்பு திட்டங்களுடன், பாரதம் அதன் அறிவு, பாரம்பரியம் மற்றும் பண்டைய போதனைகளின் அடிப்படையில் வேகமாக முன்னேறி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இளைஞர் சக்தியே நாட்டின் முதுகெலும்பு என்று சுவாமி விவேகானந்தர் நம்பினார். சுவாமிஜி ஒருமுறை கூறினார், “தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலுடன் நிரப்பப்பட்ட 100 இளைஞர்களை எனக்கு கொடுங்கள், நான் பாரதத்தை மாற்றுவேன்.” இப்போது, இந்த பொறுப்பை நாம் ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நண்பர்களே,

சுவாமி விவேகானந்தர் இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த மற்றும் தற்சார்பு தேசமாகக் காண விரும்பினார். அவரது கனவை நனவாக்க நாடு இப்போது அந்த திசையில் முன்னேறி வருகிறது. இந்தக் கனவு கூடிய விரைவில் நிறைவேறட்டும், வலிமையான, திறமையான இந்தியா மீண்டும் ஒருமுறை மனிதகுலத்திற்கு வழிகாட்டட்டும். இதற்காக, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் குருதேவ் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் போதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வுகளும், துறவிகளின் முயற்சிகளும் இதை அடைய ஒரு முக்கிய வழியாகும். மீண்டும் ஒருமுறை, இந்த நிகழ்ச்சிக்காக உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், வணக்கத்திற்குரிய அனைத்து புனிதர்களுக்கும் எனது மரியாதைக்குரிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்தப் புதிய தொடக்கம், புதிய சக்தியுடன், சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்குவதற்கான அடித்தளமாக அமையட்டும். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

***

(Release ID: 2082319)

TS/IR/AG/KR