Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“துக்ளக் வார இதழின் 47வது ஆண்டு தினம்- மறைந்த திரு சோ. ராமசாமி அவர்களுக்கு புகழஞ்சலி” என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற நிகழச்சியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் ஆற்றிய உரை

“துக்ளக் வார இதழின் 47வது ஆண்டு தினம்- மறைந்த திரு சோ. ராமசாமி அவர்களுக்கு புகழஞ்சலி” என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்ற நிகழச்சியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் ஆற்றிய உரை


அன்புள்ள பத்மா சுப்ரமணியம் அவர்களே,

திரு.ரவி அவர்களே,

திரு. விஸ்வநாதன் அவர்களே,

திரு.ரஜினிகாந்த் அவர்களே,

திரு. குருமூர்த்தி அவர்களே,

துக்ளக் வாசகர்களே,

மறைந்த திரு சோ அவர்களின் ரசிகர்கள், மற்றும் தமிழக மக்கள் ஆகியோருக்கு என் வணக்கத்தையும், பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நல்லதொரு நாளில் கூடியிருக்கிறோம்.

நேற்று தெலுகு சகோதர சகோதரிகள் போகியையும், வட இந்திய நண்பர்கள், குறிப்பாக பஞ்சாப் மக்கள் லோஹ்ரியையும் கொண்டாடினார்கள். இன்று குஜராத்தில் மகர சங்கராந்தி. குஜராத் முழுதும் என்று பட்டங்கள் பறக்கும். இந்த விழா உத்தராயன் என்றும் அழைக்கப்படுகிறது. அசாம் மக்கள் இன்று மக் பிஹு பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

பொங்கல்- சூரியன், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் உயிரினங்கள் மற்றும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விழா. இயற்கையுடனான நமது மகிழ்ச்சிகரமான உறவுதான் நம் கலாச்சாரத்தின், பண்பாட்டின் பலம். வடக்கில் இருந்து தெற்கு வரை, கிழக்கில் இருந்து மேற்கு வரை இன்று நாடு விழாக்காலம் பூண்டிருப்பதை இன்று காண்கிறோம். விழாக்கள் மகிழ்ச்சியின் திறவுகோல்கள். விழாக்கள் மகிழ்ச்சியை மட்டுமல்லாது ஒற்றுமையையும் சேர்த்தே கொண்டு வருகின்றன. இந்தியா முழுவதும் இன்று பண்டிகைகளை கொண்டாடும் மக்களுக்கு என் வாழ்த்துகள்.

சூரியன் இன்று மகர ராசிக்குள் பரிணமிக்கும் நாளை மகர சங்கராந்தி என்கிறார்கள். பலருக்கு மகர சங்கராந்தி என்பது இருண்ட குளிர்காலத்தில் இருந்து இதமான, ஒளிமயமான காலத்தில் நுழையும் விழாவாகும். இன்று நாம் கொண்டாடும் சில விழாக்கள் அறுவடை விழாக்கள். இந்த விழாக்கள் நம் உழவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வர பிரார்த்திப்போம்.

நண்பர்களே,

நான் உங்களை நேரில் சந்திக்கவே விரும்பினேன் – ஆனால் என் பணிச்சுமை அதை அனுமதிக்கவில்லை. துக்ளக் இதழின் 47ஆம் ஆண்டு விழாவான இன்று எனது அன்பார்ந்த நண்பர் திரு.சோ. ராமசாமிக்கு என் மரியாதைகளை தெரிவித்துக் கொள்கிறேன். சோ அவர்களின் மறைவு எல்லோருக்கும் அறிவையும், ஆலோசனைகளையும் அள்ளி வழங்கிய நம் நண்பர் ஒருவரை நம்மிடம் இருந்து பறித்துச் சென்றுவிட்டது. அவரை பல ஆண்டுகளாக எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதால் அவரது இழப்பு எனக்கு தனிப்பட்ட இழப்பு.

நான் அறிந்தவர்களில் பன்முகங்களைக் கொண்ட சிலரில் அவர் ஒருவர். நடிகர், இயக்குநர், பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல்வாதி, அரசியல் விமர்சகர், கலாச்சார விமர்சகர், மத, சமூக விமர்சகர், வழக்கறிஞர், இன்னும் எத்தனையோ முகங்களைக் கொண்டவர்.

அவரது எண்ணற்ற முகங்களில் கிரீடமாகத் திகழ்ந்தது அவர் வகித்த துக்ளக் ஆசிரியர் எனும் பதவிதான். 47 ஆண்டுகளாக ஜனநாயக மாண்புகளையும், தேசிய நலனையும் காத்ததில் துக்ளக்கின் பங்கு மகத்தானது.

துக்ளக்கையும், சோவையும் பிரித்துப்பார்க்கவே நினைக்கவே முடியவில்லை. ஐம்பந்தாண்டுகளாக அவர் துக்ளக்கை நிர்வகித்தார். யாராவது இந்தியாவின் அரசியல் வரலாற்றை எழுத நினைத்தால் திரு. சோ. ராமசாமியை விட்டுவிட்டு எழுத முடியாது.

சோவை ரசிப்பது சுலபம். ஆனால் புரிவது கடினம். அவரை புரிந்துகொள்ள மதம், மொழி, இனம் கடந்த அவரது துணிச்சல், உண்மை, தேசப்பற்று ஆகியவற்றையும் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

எல்லா பிரிவினை சக்திகளுக்கும் எதிரான ஆயுதமாக அவர் துக்ளக்கை வளர்த்தது அவரது பெரும் சாதனை. சுத்தமான, ஊழல் இல்லாத அரசியல் அமைய போராடினார். அந்தப் போரில் அவர் யாரையும் விட்டுவைக்கவில்லை. பல்லாண்டுகள் பழகியிருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், அவர்களுக்கு குருவாக இருந்தாலும் பாரபட்சமின்றி எல்லோரையுமே விமர்சித்தார். அவர் மனிதர்களைப் பார்க்கவில்லை, பிரச்சினைகளையே பார்த்தார்.

தேசம் தான் அவரது மையநோக்கு. அவரது எழுத்து, சினிமாக்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என எல்லாவற்றிலுமே அது பிரதிபலிக்கும்.

அவரது பகடி அவரால் விமர்சிக்கப்பட்டவர்களையும் ரசிக்க வைத்தது. அது பழக்கத்தால் வந்த திறன் அல்ல. கடவுளால் அவருக்கு அளிக்கப்பட்ட வரம். அதை அவர் பொதுமக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தினார். பல நூல்களால் சொல்ல முடியாததைக் கூட கேலிச்சித்திரங்கள் மூலமாகவோ, ஒரு வரியிலோ சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார்.

ஒரு கேலிச்சித்திரம் எனக்கு நினைவுக்கு வருகிறது. என் மீது துப்பாக்கியை நீட்டியபடி சிலர் நிற்கிறார்கள். என் முன் பொதுமக்கள் நிற்கிறார்கள். துப்பாக்கியை நீட்டியவர்களைப் பார்த்து சோ கேட்கிறார், “உங்கள் குறி மோடியா? அல்லது பொதுமக்களா?” என்று. இந்த காலத்தில் அது எவ்வளவு பொருந்துகிறது!

சோ பற்றிய ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சிலர் சோ மீது முட்டைகளை எறிந்தார்கள். அப்போது சோ கேட்டார், “அய்யா ஏன் என் மீது முட்டைகளை எறிகிறீர்கள்? ஆம்லேட் செய்து சாப்பிடலாமே?” என்று. எறிந்தவர்கள் சிரித்துவிட்டார்கள். இப்படி தன் மீதி கோபம் கொண்டோரையும் சிரிக்க வைத்து சூழலை தனக்கேற்றவாறு மாற்றுவதில் வல்லவர்.

துக்ளக் எல்லோருக்குமே ஒரு மேடையாக இருந்தது. சோ முரணான கருத்துக்களை சொல்வார், அவருக்குமே ஆபத்து விளைவிக்கும் கருத்துக்களும் வரும், அவரையே விமர்சித்தும் திட்டியும் கூட அதில் கருத்துக்கள் வரும். அவர் விமர்சித்தவர்களின் கருத்து கூட துக்ளக்கில் சோ கட்டுரைகள் எப்படி வருமோ அப்படியே வரும். இதுதான் ஊடக மற்றும் பொதுவாழ்க்கை ஜனநாயகம்.

அவரது எண்ணங்களும், சேவைகளும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவைச் சேர்ந்த பல தலைமுறை பத்திரிக்கையாளர்களுக்கும், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் கூட பயன்பட்டிருக்கிறது.

துக்ளக் இதழ் வெறும் அரசியல் பத்திரிக்கை மட்டுமல்ல என்பதை நம்மில் பலர் அறிவோம். பல லட்சம் மக்களின் காதுகளாகவும், கண்களாகவும் இருந்த பத்திரிக்கை அது. மக்களையும், ஆட்சியாளர்களையும் துக்ளக் மூலமாக இணைக்கும் பாலமாக சோ இருந்தார்.

சோ வகுத்த பாதையில் துக்ளக் பீடுநடை போடும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். துக்ளக்கின் பாரம்பரியத்தை ஏற்றுள்ளவர்களின் தோளில் பெரும் பொறுப்பு இருக்கிறது. சோவின் தொலைநோக்கு மற்றும் உறுதி அவர்களின் பெரும் சவால்களில் அவர்களை வழிநடத்தும். அவரது நோக்கங்களை ஏற்று செயல்பட்டாலே அது மக்களுக்கு செய்யும் சேவையாக இருக்கும்.

திரு. குருமூர்த்திக்கும் அவரது அணியினருக்கும் என் வாழ்த்துகள். குருமூர்த்தியை அறிந்தவன் என்பதால் சொல்கிறேன் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். நமக்கு இன்னும் அதிகமாக நையாண்டியும், நகைச்சுவையும் தேவைப்படுகிறது. நம் வாழ்வில் நகைச்சுவை தான் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. நகைச்சுவையே நன்மருந்து. புன்னகையின் சக்தி, சிரிப்பின் ஆற்றல் வசைச் சொல்லிற்கோ வேறு எந்த ஒரு ஆயுதத்திற்கோ இல்லை. நகைச்சுவை பாலங்களை இடிப்பதற்கு பதிலாக கட்டுகிறது. அதுதான் இன்றைய தேவை. ஆம். மக்களை, சமூகங்களை இணைக்கும் பாலங்கள் தான் இன்றைய தேவை.

நகைச்சுவை மனித புத்தாக்கத்தை கொண்டு வருகிறது. ஒரு பேச்சு அல்லது ஒரு நிகழ்ச்சி ஏராளமான மீம்களையும், குறுஞ்செய்திகளையும் கொண்டு வரும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

நண்பர்களே,

நான் முன்பொருமுறை சென்னையில் துக்ளக் விழாவில் நேரில் பங்குபெற்றிருக்கிறேன். அனைத்து நிகழ்ச்சிகளையும் பகவத் கீதையுடன் முடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருப்பதால் சோவுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் நானும் அப்படியே செய்கிறேன்.

தெய்வம் இடம் விட்டு இடம் செல்வதில்லை,

ஆனால் இல்லம் விட்டு இல்லம் செல்கிறது.

பல துறைகளில் தன் பங்கை சிறப்பாக ஆற்றிய சோவுக்கு நன்றி தெரிவிப்போம். சோவுக்கு நிகரானவர் சோ. அவருக்கு அஞ்சலி.

*****