பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இடையே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது-
இந்த ஒப்பந்தத்தின் மூலம், உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து, ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படவும், ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்து பயிற்சி, திறன் வளர்ச்சி, வெளியீடுகள் கொண்டு வருவது, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆயுஷ் இடையே திறன் வளர்ச்சி, ஆயுஷ் மருத்துவ முறைகளை உறுப்பு நாடுகளிடையே பரப்புவது, உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருத்துவத் திட்டம் 2014-2023-ஐ வலுப்படுத்துவது ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செலவினத்துக்காக ஆயுஷ் அமைச்சகம் நிதி ஒதுக்கும்.
இரு தரப்பும் ஏற்றுக் கொண்ட பிறகு, இரு தரப்பாலும் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். நீண்ட கால ஒத்துழைப்பிற்கான முதல் கட்டமாக, இந்தியா கீழ்கண்ட உலக சுகாதார நிறுவன நடவடிக்கைகளுக்காக வெளியீடுகளை கொண்டு வரும். அதன் மூலம், இந்திய மருத்துவ முறைகளை உலகளாவிய அளவில் புகழ்பெறச் செய்ய முடியும்.
1) யோகா பயிற்சிக்கான அளவுகோல்
2) ஆயுர்வேத மருத்துவ பயிற்சிக்காக அளவுகோல்
3) யுனானி மருத்துவ பயிற்சிக்கான அளவுகோல்
4) பஞ்சகர்மா மருத்துவ முறைக்கான அளவுகோல்
நீண்டகால ஒத்துழைப்பின் மூலம், ஆயுஷ் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து, பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் துறைகளில் பாரம்பரிய மற்றும் பரஸ்பர மருத்துவ முறைகளை வளர்க்கும். உலக சுகாதார நிறுவனம் சார்பில், பாரம்பரிய மருத்துவ முறைகளின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வெளியீடுகள் கொண்டு வரப்படும். மேலும், பாரம்பரிய மருத்துவர்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு, சர்வதேச அளவில் சிகிச்சை அளிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்படும்
ஆயுஷ் மருத்துவ முறைகளை கையாளும் மருத்துவர்களுக்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தோடு ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் பயனளிக்கும்.
பின்னணி
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா ரிக்பா மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளை உலகெங்கும் பரப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆயுஷ் அமைச்ககம், உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் வரையறைக்கு உட்பட்ட உலக சுகாதார நிறுவனம், சுகாதாரம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கிறது. உலக சுகாதாரம் தொடர்பான விவகாரங்களில் உலக சுகாதார நிறுவனம் தலைமைப் பொறுப்பேற்று, சுகாதார ஆராய்ச்சி, கொள்கை முடிவு, தொழில்நுட்ப ஆதரவு போன்றவற்றை அளித்து, சுகாதாரம் தொடர்பானவைகளை கண்காணித்து வருகிறது.
ஆயுஷ் அமைச்சகம் பிரதமர் முன்பாக 3 ஜுலை 2014 அன்று காணொளி காட்சி நடத்தியபோது, பிரதமர் அவர்கள், மருத்துவத்தில் இந்தியா முன் முயற்சிகள் மேற்கொண்டு, உலக அளவில் முன்னேற வேண்டும் என்று கூறினார். மூலிகை மருத்துவத்தைப் பொறுத்தவரை, இந்தியா சீனாவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். சுகாதார உலகில் இந்தியா முன்னோடி என்பதை உணர்த்தும் வகையில் தேவையான வெளியீடுகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தியா மற்றும் உலக சுகாதார நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள உறவின் மூலம், உலக அளவில் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை (ஆயுர்வேதா, யுனானி, சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும். இதன் பொருட்டு, ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார நிறுவனத்தோடு நீண்டகால உறவை பேண வேண்டும்.