புத்துயிர் பெற்ற இந்தியாவிற்கென கட்டமைப்பை உருவாக்குவது
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே கட்டமைப்புக்குக் கொடுத்து வந்த முக்கியத்துவம் மிகத் தெளிவாகவே புலப்பட்டது. அது ரயில்வேயாக இருந்தாலும் சரி, சாலைகள் அல்லது கப்பல் போக்குவரத்தாக இருந்தாலும் சரி, அவற்றின் இணைப்புக்குத் துணைபுரியும் வகையில் கட்டமைப்பை மேம்படுத்துவதில்தான் அரசின் கவனம் முழுவதும் இருந்து வந்தது.
முதன்முறையாக அமைப்புரீதியான சீர்திருத்தங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் ஆகியவற்றில் ரயில்வே பட்ஜெட் தனது கவனத்தைச் செலுத்தியது. வருடாவருடம் நடைபெறுகின்ற அரசியல் வேடிக்கையாக இருந்துவந்த, புதிய ரயில் சேவைகள் குறித்த அறிவிப்பு என்பது இப்போது வழக்கமான நடவடிக்கையாக மாறிவிட்டது. ரயில் நிலையங்களில் இணைய தொடர்பு (வைஃபை) வசதி, பயணிகளின் உதவி மையம் (138), பாதுகாப்பிற்கான உதவி மையம் (182), காகிதமற்ற முன்பதிவற்ற பயணச்சீட்டு, இணையம் மூலமான உணவு வழங்கும் சேவை, பாதுகாப்பிற்கான கைப்பேசி செயலிகள், பெண்களின் பாதுகாப்பிற்கென கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பயணிகளின் தேவைக்கென எண்ணற்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மும்பை-அகமதாபாத் ரயில்பாதையில் அதிவிரைவு புல்லெட் ரயில் வசதியைத் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதுதில்லி- சென்னை ரயில்பாதையில் புல்லெட் ரயில் வசதியை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றிய ஆய்வு தற்போது நடந்து வருகிறது.
இந்த ஆண்டில் 1983 கி.மீ. நீளத்திற்கு இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1375 கி.மீ. நீளத்திற்கு இருப்புப்பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளிலேயே மிகச் சிறந்த செயல்பாடாக இது விளங்குகிறது. திருத்தல யாத்ரீகர்களுக்கென ஆறு புதிய ரயில் வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வைஷ்ணவ் தேவி கோயிலுக்கு பயணம் செய்ய உதவும் வகையில் கத்ரா ரயில்பாதை திறக்கப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்தைப் பொறுத்தவரையில் நின்றுபோயிருந்த சாலைத் திட்டங்களில் இருந்த இடையூறுகள் அகற்றப்பட்டன. ஒப்பந்தம் தொடர்பாக நீண்ட நாட்களாக கிடப்பிலிருந்த சச்சரவுகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதோடு, பயனற்ற திட்டங்களும் கைவிடப்பட்டன. இந்தியாவின் எல்லைப் பகுதிகள், கடற்கரையோரப் பகுதிகள் வழியாக பாரத் மாலா என்ற பெயரில் சாலைகளை உருவாக்கும் பணி துவங்கியுள்ளது.ச் 62 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது கைவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அனுமதி வழங்கப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்களின் எண்ணிக்கை 120 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. பிரதமர் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சாலைகளின் எண்ணிக்கையும் பெருமளவிற்கு அதிகரித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கப்பல் போக்குவரத்துத் துறையில் இந்தியா பெரும் முன்னேற்றங்களை எட்டியுள்ளது. சாகர்மாலா திட்டமானது உயிர்த்துடிப்புள்ள கடற்கரையோர மக்களின் வளர்ச்சியின் மூலம் முழுமையானதொரு துறைமுகத்தினை முன்னணியாகக் கொண்ட வளர்ச்சியை உறுதி செய்யும். துறைமுகங்களில் சரக்கு கையாளுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது 4 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கண்டிராத வகையில் ஒரே ஆண்டில் 71 மில்லியன் டன் ஓராண்டிற்கு சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய பகுதிகளுடன் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் சஹாபஹார் துறைமுகத்தை செயல்தந்திரரீதியாக வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் ஈரான் நாட்டுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. கங்கையாற்றின் வழியாக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து வசதியை உருவாக்குவதற்கென ஜல் மார்க் விகாஸ் திட்டம் ( நீர்வழி போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்துத் துறையிலும் மிக வேகமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. மொஹாலி, திருப்பதி, கஜுராஹோ ஆகிய இடங்களில் புதிய ஒருங்கிணைந்த விமான நிலையங்களை உருவாக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. கடப்பா, பிகானீர் ஆகிய இடங்களில் விமான நிலையம் உருவாக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பகுதிவாரியான தொடர்பை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் ஹூப்ளி, பெல்காம், கிஷண்கர், தேஸு, ஜார்சுகுடா ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் துவங்கியுள்ளன. சர்வதேச விமான போக்குவரத்திற்கான பாதுகாப்பு தணிக்கை அமைப்பு இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறைக்கும் உயரிய பாதுகாப்பு தகுதியை (எஃப் ஏ ஏ) வழங்கியுள்ளதன் மூலம் மேலும் அதிகமான விமான போக்குவரத்து வசதிகள் உருவாக வழியேற்பட்டுள்ளது.
கட்டமைப்பு வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்பதை காணுங்கள்.