கல்வி, திறன் மேம்பாட்டிற்கு ஊக்கம் தரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு
கல்வியின் தரம் மற்றும் வீச்சு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கென பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதான் மந்திரி வித்யாலஷ்மி கார்யகிரம் (பிரதமர் கல்விச் செயலகம்) மூலம் கல்விக்கடன் மற்றும் கல்வி உதவித் தொகைகள் ஆகியவற்றை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் என முற்றிலும் தகவல்-தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான நிதியுதவி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்றுவிப்பதன் தரத்தை மேம்படுத்துவதற்கென ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க பண்டிட் மதன்மோகன் மாளவியா இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களுக்கு சர்வதேச தரத்தை அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் கோடை- குளிர்கால விடுமுறைகளின்போது நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்சி அளிப்பதற்கென உலகம் முழுவதுமுள்ள முன்னோடி கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து புகழ்பெற்ற ஆசிரியர்கள், அறிவியல் அறிஞர்கள், தொழில்முனைவர்கள் ஆகியோரை அழைப்பதற்கென உலகளாவிய கல்வித்திட்ட இணைப்பிற்கான முன்முயற்சி என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இணைய வழிக் கல்வியை வழங்குவதற்கு என உருவாக்கப்பட்டுள்ள ஸ்வயம் என்ற திட்டமானது பெருமளவிலான திறந்த இணைய வழி பாடத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளும். நாடு தழுவிய அளவிலான இணையவழி நூலகமானது கல்வி தொடர்பான விஷயங்கள் மற்றும் அறிவுசால் ஆதாரங்கள் ஆகியவற்றை அனைவரும் பெறுவதற்கு வழிவகுக்கும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவும் வகையில் பள்ளிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலான ஷாலா தர்ப்பண் என்ற கைபேசி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் பள்ளிகளில் சேருவதை ஊக்குவிக்கும் வகையில் பெண் குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்கென உதான் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறைக் காலங்களில் ஐ. ஐ. டி, என். ஐ. டி, கிழக்குப்பகுதிக்கான இந்திய அறிவியல் நிறுவனம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் பள்ளி மாணவர்களும், வடகிழக்கு இந்திய பகுதிகளில் உள்ள பொறியியல் மாணவர்களும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் இஷான் விகாஸ் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய கலைகள்/ கைத்தொழில்கள் ஆகியவற்றில் திறனையும் பயிற்சியையும் மேம்படுத்திக் கொள்வதற்கென உஸ்தாத் என்ற திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கலைஞர்கள்/ கைவினைஞர்கள் ஆகியோரின் திறனை வளர்த்தெடுப்பது; பாரம்பரிய கலைகள்/ கைத்தொழில்கள் ஆகியவற்றை தரவரிசைப்படுத்துவது; அவற்றை ஆவணப்படுத்துவது; அவற்றின் சந்தைக்கான தொடர்புகளை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாக இத்திட்டம் அமைகிறது.
திறன் பெற்ற இந்தியா என்ற கருத்தோட்டத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். நமது இளைஞர்களுக்கு வலுவூட்டும் வகையில் இதற்கெனவே பிரத்யேகமாக திறன் மேம்பாட்டிற்கென ஒரு அமைச்சகத்தையும் அவர் உடனடியாக உருவாக்கினார். திறன் மேம்பாட்டை வளர்த்தெடுப்பது ஒன்றே இந்த அமைச்சகத்தின் ஒரே இலக்காகும். அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் இதுவரை 76 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ‘பள்ளியிலிருந்து திறனுக்கு’ என்ற திட்டத்தின் கீழ் கல்விக்கு இணையாக திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரூ. 1500 கோடி மதிப்பீட்டுடன் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா கிராம திறன் திட்டத்தின் கீழ் மூன்றாண்டுகளில் 10 லட்சம் கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி குறித்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செயல்முறை பயிற்சி பெறுவதற்கு மேலும் அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்தப் பயிற்சி பெறுவோருக்கான ஊக்கத்தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம் அடுத்த இரண்டரை ஆண்டு காலத்தில் ஒரு லட்சம் பயிற்சியாளர்களுக்கு அரசு உதவி வழங்கும். தற்போதுள்ள 2.9 லட்சம் பயிற்சியாளர்கள் என்பதற்கு பதிலாக அடுத்த சில ஆண்டுகளில் 20 லட்சம் பயிற்சியாளர்கள் என்ற நிலையை எட்டுவதற்கென அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. நாடுதழுவிய அளவிலான வாய்ப்புகளை வழங்கவும், இணையம் மூலமான சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையிலும் தேசிய வேலை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. வேலை தொடர்பான உயரிய உட்பொருட்களையும், சுயமதிப்பீட்டிற்கான கருவிகளையும் வழங்குவதன் மூலமும் அவை இளைஞர்களுக்கு உதவி புரியும். ஆலோசகர்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னலும் இந்த இளைஞர்களுக்கு உதவும்.