தூய்மையை நோக்கி இந்தியா
2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தபோது தெரிவித்தார். இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் இயக்கமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர் இந்தியா தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தி அடிகளின் கனவு நனவாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். புதுதில்லியில் உள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்தை தூய்மைப்படுத்துவதை பிரதமர் மோடி தானே முன்னின்று நடத்தினார். தூய்மை இந்தியா திட்டத்தை இவ்வாறு துவக்கிய பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் அசுத்தப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் மற்றவர்கள் அசுத்தப்படுத்துவதையும் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தூய்மை இந்தியா இயக்கத்தை பரப்புவதற்காக 9 பிரபலங்களை தெரிந்தெடுத்த பிரதமர் நரேந்திர மோடி, மேலும் 9 பேர் அவர்கள் மூலம் தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்றார்.
தூய்மை இந்தியா இயக்கத்தை இவர்களை அழைத்ததன் மூலம் தேசிய இயக்கமாக மாறியுள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது. மகாத்மா காந்தி கண்ட கனவான தூய்மையான இந்தியா மக்களின் முழு ஈடுபாட்டுடனான பங்கேற்பினால் சிறந்த நிலையை எட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் தூய்மை இந்தியா இயக்கத்தை தனது பேச்சின் மூலமும், நடவடிக்கைகளின் மூலமும் மக்களிடையே பரப்பி வருகிறார். வாரணாசியில் அவரே தூய்மைப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டார். வாரணாசியில் உள்ள அசிகாட் என்னுமிடத்தில் அவரே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை தூய்மையாக்கினார். இதில், அங்குள்ள மக்கள் பலரும் பங்கேற்றனர். சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அப்போது எடுத்துக் கூறியதோடு, சுகாதாரம் இல்லாமல் போனால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்றும், அவர்களை தங்களது இல்லங்களில் கழிப்பறைகளை அமைப்பது அவசியம் என்றும் கூறினார்.
சமுதாயத்தின் பல பிரிவினரும் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த இயக்கத்திற்கு அரசு அலுவலர்கள் முதல் போர்வீரர்கள் வரை, திரைப்பட நடிகர்கள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை, தொழிலதிபர்கள் முதல் ஆன்மிகத் தலைவர்கள் வரை அனைவருமே ஆதரவு அளித்துள்ளனர். மத்திய அரசின் பல துறைகள் மேற்கொள்ளும் இத்திட்டத்திற்கு அரசு சாரா அமைப்புகளும் உள்ளூர் சமுதாய மையங்களும் இணைந்துள்ளன. நாட்டின் பல இடங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தூய்மை இந்தியா இயக்கத்தில் மக்களும் பல்வேறு அரசுத்துறைகளும், மற்ற அமைப்புகளும் கலந்து கொள்வது குறித்து பிரதமர் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் ஆதரவிற்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார். தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ‘தூய்மைப்படுத்தும் எனது இந்தியா’ என்ற இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது பகுதிகளை தூய்மைப்படுத்தும் செயல்பாட்டை இந்த இயக்கம் விளக்கும்.
மக்களின் பேராதரவு தூய்மை இந்தியா திட்டத்திற்கு கிடைத்துள்ளதால் இது மக்களின் இயக்கமாக மாறியுள்ளது. இந்தியாவை தூய்மைப்படுத்த மக்கள் திரளாக வந்திருந்து தங்கள் பகுதிகளை தூய்மைப்படுத்துகிறார்கள். தூய்மை இந்தியா திட்டம் துவக்கப்பட்ட பின்னர் தெருக்களை சுத்தப்படுத்துவது, குப்பைகளை அகற்றுவது, சுத்தம் சுகாதாரத்தை மேற்கொண்டு, சுற்றுப்புற தூய்மையை காப்பது போன்றவற்றிற்கு தற்போது முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கடவுளுக்கு அடுத்தபடியாக தூய்மைதான் என்ற செய்தி மக்களிடையே தற்போது நிலவி வருகிறது.