ஜன்தன் திட்டம், ஆதார் மற்றும் அலைபேசி ஆகிய மூன்று வசதிகளின் மூலம் மக்களுக்கு அளிக்க வேண்டிய நேரடி மானிய பயன்கள் வழங்கப்படுகின்றன. இந்த புதுமையான முறையின் மூலம் மானியத் தொகையை நேரடியாக காசாக அளிக்காமல் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே பணப் பரிமாற்றம் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டது. மானியங்கள் தவறான முறையில் அளிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது. ஆனால், மானியங்கள் நிறுத்தப்படுவதில்லை.
சரக்கு மற்றும் சேவை வரிக்கான மசோதாவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய அளவில் அனைவராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய அளவில் இந்த மசோதா உள்ளது. 2016ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து இது அமலுக்கு வரும் வகையில் மசோதாவின் சரத்துக்கள் உள்ளன. பல விதமான வரிகளுக்கு பதிலாக ஒருங்கிணைந்த பொதுவான வரிவிதிப்பு முறை இதனால் உருவாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிக்க அரசு சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. இதனால், குறிப்பிட்ட திட்டங்களை மட்டும் நிறைவேற்றுவதற்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களின் முழுமையான மேம்பாட்டு முயற்சிகளில் ஈடுபடும் வகையில் தூண்டப்படுவார்கள்.
உர ஆலைகளில் யூரியா உற்பத்திக்கு தேவையான இயற்கை எரிவாயுவை அளிக்க பெட்ரோலிய அமைச்சகம் அளித்த திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மின்சார அமைச்சகம் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகியவை இணைந்து 16000 மெகாவாட் அளவிற்கு மின்சாரத்தை இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்ய முடியும்.
மூலதன உச்ச வரம்பு சில தொழிற்துறை பிரிவுகளில் தளர்த்தப் பட்டுள்ளது. பாதுகாப்பு, கட்டுமானம், ரயில்வே ஆகிய பிரிவுகளில் உலக நாடுகள் பங்கேற்கும் வகையில் இவை தளர்த்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பிரிவில் அந்திய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பிரிவின் இன்னொரு வகை முதலீடு 24 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவின் தொழில்நுட்ப துறையில் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமும் அதேபோல் கட்டிட வேலைப்பாடு, ரயில்வே கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றிற்கும் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு உயர்த்தப்பட்டுள்ளது.