திரு. பி.வி. நரசிம்ம ராவ், திரு.டி ரங்கா ராவின் மகன். ஜூன் 28, 1921 அன்று கரிம் நகரில் பிறந்தவர். ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக் கழகம். பாம்மே பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். மனைவியை இழந்த இவருக்கு மூன்று மகனும் ஐந்து மகளும் உள்ளனர்.
வேளாண் நிபுணரும், வக்கீலுமான இவர் அரசியலில் சேர்ந்து, சில முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 1962 முதல் 1964 வரை சட்டம் மற்றும் தகவல் அமைச்சராகப் பணியாற்றினார். அதேபோல், சட்டம் மற்றும் அறக்கட்டளைகள் அமைச்சராக 1964-67 வரையும், சுகாதார மற்றும் மருத்துவ அமைச்சராக 1967-ஆம் ஆண்டும் பணியாற்றினார். 1971 முதல் 1973 வரை ஆந்திர பிரதேச முதலமைச்சராகப் பதவிவகித்தார். 1971-73 ஆம் ஆண்டுகளில் அனைத்திந்திய காங்கிரஸ் குழுவின் பொது செயலராகவும், 1975-76 ல் ஆந்திர பிரதேசத்தில் உள்ள தெலுகு அகாடமியின் தலைவராகவும் இருந்தார். 1972 முதல் மெட்ராஸ் தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபையின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 1957 முதல் 1977 வரை ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1977 முதல் 1984 வரை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய அவர் ராம்தக்தொகுதியிலிருந்து எட்டாவது மக்களவையில் டிசம்பர், 1984 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978-79ல் பொது கணக்கு குழுவின் தலைவராக பணியாற்றியபோது அவர் தெற்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டை லண்டன் பல்கலைக்கழகத்தின், ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆய்வுப் பள்ளி நடத்தியது. பாரதிய வித்யா பவனின் ஆந்திர மையத்திற்கும் தலைவராகவும் இருந்தார். ஜனவரி 14, 1980 முதல் ஜுலை18, 1984 வரை வெறியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றிய இவர், ஜூலை 19, 1984 முதல் டிசம்பர் 31, 1984 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். மேலும், டிசம்பர் 31, 1984 முதல் செப்டம்பர் 25, 1985 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். பின் செப்டம்பர் 25, 1985 அன்று மனிதவள மேம்பாட்டு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இசை, திரைப்படம், நாடகம் என இவருக்கு பல துறைகளில் நாட்டம் உண்டு. இந்திய தத்துவம், கலாச்சாரம், கற்பனை கதை எழுதுதல், அரசியல் விமர்சனம்,பலமொழிகளை கற்றல், இந்தி மற்றும் தெலுங்கில் கவிதை எழுதுதல் மட்டுமல்லாமல் அனைத்து வகையான இலக்கியத்திலும் அவருக்கு தனி விருப்பம் உண்டு. ஜனான்பித் பிரசுரம் செய்த மறைந்த விஸ்வநாத சத்யநாராயணா எழுதிய ‘‘வேயி படகலு“ என்ற தெலுங்கு நாவலை ஹிந்தியில் மொழியாக்கம் செய்தார்.அதேபோல் மத்திய சாஹித்ய அகாடமி வெளியிட்ட “பான் லக்ஷத் கோன் கைடோ” என்ற திரு ஹரி நாராயணன் அப்தேவின் மராத்தி நாவலின் தெலுங்கு மொழி பெயர்ப்பை இந்தியில் வெளியிட்டார். இதேபோல் பல்வேறு புகழ்பெற்ற கதைகள், நாவல்களை அவர் மராத்தியில் இருந்து தெலுங்குக்கும், தெலுங்கிலிருந்து ஹிந்திக்கும் மொழி பெயர்த்துள்ளார். அவர் பல்வேறு நாளிதழ்களிலும் கட்டுரைகள், கதைகள் எழுதியுள்ளார். அரசியல் மற்றும் அது சார்ந்த துறைகள் தொடர்பாக அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும், மேற்கு ஜெர்மனியிலும் உரையாற்றியுள்ளார். 1974-ல் வெளியுறவுத்துறை அமைச்சராக இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, மற்றும் எகிப்து நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அவர் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தபோது, சர்வதேச அரசு விவகாரங்களில் அவர் எடுத்த முடிவுகளால் அவரது திறமையும், அரசியல் அனுபவமும் நன்கு வெளிப்பட்டது. அவர் பதவியேற்ற சில நாட்களில், 1980 ஜனவரி மாதம் நடந்த முன்றாவது ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு மாநாட்டிற்கு தலைமை வகித்தார். 1980 மார்ச் மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற 77 வளரும் நாடுகளின் குழுவின் சந்திப்பிற்கு தலைமையேற்றார். 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கூட்டு சாரா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் அவரது பங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. சர்வதேச பொருளாதார விவகாரங்களில் திரு. ராவ் பெரிதும் ஆர்வம் காட்டினார். 1981, மே மாதம் கராகஸ்ஸில் நடந்த வளரும் நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பில் 77-பேர் குழு மாநாட்டிற்கு இந்திய பிரதிநிதிகளுக்கு இவரே தலைமையேற்றுசென்றார்.
இந்தியாவுக்கும், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கும் 1982 மற்றும் 1983 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமானது. வளைகுடாவின் போரின் போது நடந்த கூட்டுச்சேரா இயக்கம் இந்தியாவை ஏழாவது உச்சி மாநாட்டை நடத்த வைத்தது. இந்த இயக்கத்தை திருமதி. இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா வழிநடத்தியது. 1982-ஆம் ஆண்டில் ஐ.நா. மற்றும் புது தில்லியில் நடந்த உச்சி மாநாட்டில் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பிற்கு திரு. பி.வி. நரசிம்ம ராவ் தலையேற்றார். இந்த இயக்கத்திற்கு தொடர்பான அரசாங்க மற்றும் அதன் தலைவர்களின் முறைசாரா ஆலோசனைகள் நியூயார்க்கில் நடைபெற்றது.
1983, நவம்பரில் மேற்கு ஆசிய நாடுகளைப் பார்வையிட்ட சிறப்பு கூட்டு சாரா இயக்கத்திற்கு திரு. ராவ் தான் தலைவர். இந்த இயக்கம் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் பிரச்சனையைத் தீர்க்க முற்பட்டது. காமன்வெல்த் தொடர்பான இந்திய அரசாங்க தலைவர்களுடன் திரு. ராவ் நெருக்கமாக பணியாற்றினார்.
அமெரிக்கா, ரஷ்யா சோவியத் யூனியன், பாகிஸ்தான், பங்காளதேஷ், ஈரான், வியட்நாம், டான்ஸானிசியா, கயனா உடனான பல்வேறு இணை குழுக்களை திரு. நரசிம்ம ராவ் தலைமையேற்று நடத்திச் சென்றார்.
1984, ஜூலை 19 ஆம் தேதி திரு. நரசிம்ம ராவ் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 1984, நவம்பர் 5 ஆம் தேதி திட்டத் துறை அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்புடன் அவர் இப்பதவியில் மீண்டும் நியமிக்கப்பட்டார். 1984, டிசம்பர் 31 முதல் 1985, செப்டம்பர் 25 வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1985, செப்டம்பர் 25 ஆம் தேதி மனிதவள மேம்பாட்டு அமைச்சராகவும் அவர் பொறுப்பேற்றார்.