திரு. சந்திர சேகர் 1927 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி பிறந்தார். உத்திர பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் இவர் பிறந்தார். 1977 முதல் 1988 வரை ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார்.
திரு.சந்திரசேகர் மாணவ பருவத்திலேயே அரசியலில் ஆர்வத்தோடு ஈடுபட்டார். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் புரட்சியாளராகத் திகழ்ந்தார். 1950-51 ல் அலகாஹாபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற இவர் சோஷியலிச இயக்கத்தில் சேர்ந்தார். ஆச்சாரிய நரேந்திர தேவுடன் இணைந்து பணிபுரியும் அரிய வாய்ப்பை இவர் பெற்றார். பிரஜ சோஷியலிச கட்சியின் பலியா மாவட்ட செயலராக இவர் தேர்வு செய்யப்பட்டார். அதில் இருந்து ஒரு ஆண்டிற்குள் பிரஜா சோஷியலிச கட்சியின் உத்திர பிரதேச மாநில இணை செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1955-56 ல் பிரஜா சோஷியலிச கட்சியின் உத்திர பிரதேச மாநில செயலராக பொறுப்பேற்றார்.
1962-ல் உத்திர பிரதேசத்தில் இருந்து இவர் மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-ல் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சியின் பொது செயலராகப் பொறுப்பேற்றார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, விரைவான சமூக மாற்றத்தை அளிக்கும் கொள்கைகளை உருவாக்குவதில் பெரும் ஆர்வம் காட்டினார். அரசு ஆதரவுடன் தனி நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து இவர் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். இதனால் அவர் மத்திய அரசுடன் மாற்றுக்கருத்தை கொண்டிருந்தார்.
தனிப்பட்ட நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதில் அவரது நம்பிக்கை, தைரியம், ஒருமைப்பாடு ஆகியவை அவரை இளம் போராளியாக அடையாளம் காட்டியது. 1969-ல் “யங் இந்தியன்” என்ற வார இதழைத் துவக்கி தில்லியில் இருந்து வெளியிட்டார். இந்த வார இதழுக்கு அவர் ஆசிரியராகவும் திகழ்ந்தார். அந்த காலக்கட்டத்தில் மிகவும் பேசப்பட்டபத்திரிக்கை தலையங்கத்தில் இந்த இதழும் ஒன்று. ஜூன் 1975 முதல் மார்ச் 1977 வரையான அவசரக் காலத்தின் போது இந்த இதழ் மூடப்பட்டது. பின்னர், 1989 பிப்ரவரியில் மீண்டும் இவ்வார இதழ் வெளிவரத் தொடங்கியது. இவர் இந்த இதழின் ஆசிரியர் ஆலோசனை குழுவின் தலைவராக செயல்பட்டார்.
ஒரு தனிநபரை கொண்டு அரசியல் நடத்துவதை அவர் என்றுமே எதிர்த்தார். கொள்கைகள் மற்றும் சமூக மாற்றத்தை அடிப்படையாக கொண்ட அரசியலைத்தான் அவர் ஆதரித்தார்.
மத்திய தேர்தல் குழு, பணிக்குழு மற்றும் இந்திய தேசிய காங்கிரஸின் உயர்மட்ட குழுவின் உறுப்பினராக இவர் இருந்த போதும் 1975, ஜூன் 25ம் தேதி அவசர கால சட்டம் அமலாக்கப்பட்ட பின் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் சிறைபிடிக்கப்பட்டார்.
அவசர காலசட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சில ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களில் திரு சந்திரசேகரும் ஒருவர்.
அதிகாரத்திற்கான ஆட்சியை அவர் என்றுமே புறக்கணித்தார். சமூதாய மாற்றம் மற்றும் ஜனநாயக நலனை உறுதி செய்யும் அரசியலையே என்றும் தேர்ந்தெடுத்தார்.
அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்த கால கட்டத்தில் இவர் சிறையில் இருந்த போது இந்திமொழியில் டைரி எழுதினார். பின்னர் அது “மேரி ஜெயில் டைரி” என்ற பேரில் வெளியிடப்பட்டது. “சமூக மாற்றத்திற்கான கோட்பாடுகள்” குறித்து அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மிகவும் பிரபலமானது
திரு. சந்திரசேகர் கன்னியாகுமரி முதல் புதுதில்லியில் உள்ள மகாத்மா காந்தி சமாதி ராஜ்காட் வரை பாதையாத்திரை மேற்கொண்டார். 1983 ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் ஜூன் 25 வரை 4260 கீ.மீ. நடந்துள்ளார். மக்களிடம் உள்ள தொடர்பை புதுப்பிக்கவும், அவர்களின் பிரச்சனையை புரிந்து கொள்ளவும் இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்திர பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில் பாரத யாத்திரை மையங்களை இவர் நிறுவினார். சமூக மற்றும் அரசியல் பணியாளர்கள் மக்களுக்கு கற்பித்தல் குறித்தும் சேவை செய்வது குறித்தும் இந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
1962 முதல் இவர் நாடாளுமன்ற உறுப்னிராக (1984 முதல் 1989 வரை தவிர) பணியாற்றினார். 1989-ல் பீகாரில் உள்ள தனது சொந்த தொகுதியிலும் மஹாராஜ்கஞ்ச் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார்.
திரு. சந்திரசேகர் திருமதி. துஜா தேவியை மணந்து கொண்டார் இவருக்கு பங்கஜ், நீரஜ் என இரு ஆண்பிள்ளைகள் உள்ளனர்.