Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

டாக்டர். மன்மோகன் சிங்

மே 22, 2004 - மே 26, 2014 | இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி

டாக்டர். மன்மோகன் சிங்


இந்தியாவின் பதினான்காவது பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங்  சிந்தனையாளர் மற்றும் அறிஞர் என்று பாராட்டப்பட்டவர். அவரது விடாமுயற்சி, வேலைக்கான கல்வி அணுகுமுறை, அணுகல் மற்றும் எளிமையான நடத்தை ஆகியவற்றிற்காக அவர் நினைவுகூரப்படுவார்.

பிரதமர் மன்மோகன் சிங், செப்டம்பர் 26, 1932ல், ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த பஞ்சாப் மாகாணத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1948ல் தன்னுடைய மெட்ரிக்குலேஷன் தேர்வுகளை முடித்தார். அவருடைய சிறந்த படிப்பாற்றல் அவரை பஞ்சாப்பில் இருந்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் 1957ல் பொருளாதாரத்தில் முதல்நிலை ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து 1962ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நஃப்ஃபீல்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் டி.ஃபில். பட்டத்தைப் பெற்றார். ‘‘இந்தியாவின் ஏற்றுமதிப் போக்கு மற்றும் தன்னிறைவான வளர்ச்சிக்கான வாய்ப்புகள்’’ (கிளாரென்டண் பிரஸ், ஆக்ஸ்போர்டு, 1964) என்ற அவருடைய புத்தகம், இந்தியாவின் உள்நோக்கு அடிப்படையிலான வர்த்தகக் கொள்கைப்பற்றி அலசுகிறது.

டாக்டர் சிங்கின் சிறந்த கல்வி அறிவு, அவர் பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் பெருமைமிக்க டெல்லி பொருளாதாரப் பள்ளியில் கல்வி நிபுணராக இருக்க உதவியது. இந்த காலத்தில் அவர் யூஎன்சிடிஏடி (UNCTAD) செயலகத்திலும் குறுகிய காலம் பணியாற்றினார். இதனால் 1987 மற்றும் 1990ம் ஆண்டில், ஜெனீவாவில் உள்ள சவுத் கமிஷனின் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

1971ல், டாக்டர் சிங் இந்திய அரசில் இணைந்தார். வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மிக விரைவிலேயே, 1972ல், அவர் மத்திய நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசில், மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை என்னவென்றால், 1991 முதல் 1996 வரையில் மத்திய நிதியமைச்சர் பதவியில் டாக்டர் மன்மோகன் சிங் இருந்ததுதான். அப்போது அவர் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள், இன்று உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. டாக்டர் சிங் என்ற தனிநபர் செய்த சாதனைகள் இன்றளவும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.

டாக்டர் சிங் தனது வாழ்நாளில் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம விபூஷன் (1987), இந்திய அறிவியல் காங்கிரசின் ஜவஹர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது (1995), ஆண்டின் சிறந்த நிதி அமைச்சருக்கான ஆசியா மணி விருது (1993 மற்றும் 1994), ஆண்டின் சிறந்த நிதி அமைச்சருக்கான யூரோ மணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956), மற்றும் கேம்பிரிட்ஜில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் புகழ்பெற்ற செயல்திறனுக்கான ரைட்ஸ் பரிசு (1955) ஆகியவை அவர் பெற்ற முக்கியமான விருதுகளில் சிலவாகும்.

இந்தியாவின் பிரதிநிதியாக டாக்டர் சிங் பல்வேறு சர்வதேச மாநாடுகள், சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். சிப்ரசில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் (1993) இந்தியக் குழுவினருடன் அவர் கலந்து கொண்டார். மேலும், வியன்னாவில் 1993ல் நடந்த உலக மனித உரிமைகள் மாநாட்டிலும் அவர் பங்கேற்றார்.

தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் டாக்டர் சிங், நாடாளுமன்றத்தின் மேலவையில் (மாநிலங்களவை) உறுப்பினராக 1991ல் இருந்து இருக்கிறார். அங்கு அவர் 1998 முதல் 2004 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2004ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், மே மாதம் 22ம் தேதி டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். அதன்பின்னர் 22 மே 2009ல் இரண்டாவது முறையாக பிரதமராக அவர் பதவியேற்றார்.

இவருக்கு குர்சரண் கவுர் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.