சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு பிரதமர் தலைமை தாங்கினார். தேர்வு தொடர்பாக இது வரை நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகள், மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விரிவாக எடுத்து கூறினர்.
கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழல் மற்றும் பல தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில், இந்தாண்டு 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வை நடத்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகளை தொகுக்கும் நடவடிக்கை சிபிஎஸ்இ மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் கூறினார். கொவிட்-19 இந்த கல்வி ஆண்டை பாதித்து விட்டதாகவும், வாரியத் தேர்வுகள் விஷயம், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசியர்கள் இடையே மிகுந்த கவலையை ஏற்படுத்திவிட்டதாகவும், அதற்கு முடிவுகட்ட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.
கொரோனா சூழல் நாடு முழுவதும் மாறுபட்ட சூழலாக உள்ளது என பிரதமர் கூறினார். தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், சில மாநிலங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் நிலைமையை சமாளித்து வருகின்றன, சில மாநிலங்களில் இன்றும் ஊரடங்கு நிலை தொடர்கிறது. இது போன்ற சூழலில், மாணவர்களின் ஆரோக்கியம் பற்றி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவலைப்படுவது இயற்கையானதுதான். இதுபோன்ற அழுத்தமான சூழ்நிலையில், தேர்வுகள் எழுத மாணவர்களை வற்பறுத்தக் கூடாது என பிரதமர் கூறினார்.
மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது, இதில் எந்த சமரசமும் இல்லை என பிரதமர் வலியுறுத்திக் கூறினார். இன்றைய காலகட்டத்தில், இதுபோன்ற தேர்வுகள், நமது இளம் சுமுதாயத்தினரை, ஆபத்தில் ஆழ்த்துவதற்கு காரணமாக இருக்க முடியாது என அவர் கூறினார்.
அனைத்து தரப்பினரும் மாணவர்கள் மீது உணர்வை காட்ட வேண்டும் என பிரதமர் கூறினார். நன்கு வகுப்பட்ட மதிப்பீடுகள் மூலம், நியாயமான முறையில் தேர்வு முடிவுகளை சரியான நேரத்தில் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
விரிவான ஆலோசனை முறையை குறிப்பிட்ட பிரதமர், நாடு முழுவதும் அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து மாணவர்களுக்கு சாதகமான முடிவு எடுக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்த விஷயத்தில் மாநிலங்கள் தங்கள் கருத்தை தெரிவித்ததற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
கடந்த ஆண்டைப்போல், சில மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால், அதற்கான வசதியை, நிலைமை சீரடையும் போது சிபிஎஸ்இ வழங்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் கடந்த 21ம் தேதி ஏற்கனவே உயர்நிலை கூட்டத்தை நடத்தினார். அதன்பின் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் கடந்த 23ம் தேதி ஒரு கூட்டம் நடந்தது. இதில் மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவதற்கு பல விருப்பங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.
இன்றைய கூட்டத்தில் மத்திய உள்துறை, பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, பெட்ரோலியம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சர்கள், பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
*****************
Government of India has decided to cancel the Class XII CBSE Board Exams. After extensive consultations, we have taken a decision that is student-friendly, one that safeguards the health as well as future of our youth. https://t.co/vzl6ahY1O2
— Narendra Modi (@narendramodi) June 1, 2021