Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மருத்துவப் பயன்பாட்டிற்கு பிராணவாயுவின் உபயோகம் பற்றி பிரதமர் ஆய்வு


பிராண வாயுவின் விநியோகத்தையும், கையிருப்பையும் அதிகரிப்பதற்காக பல்வேறு புதுமையான வழிகளை ஆய்வு செய்யுமாறு தாம் உத்தரவிட்டதையடுத்து, சிகிச்சைக்குப் பிராணவாயுவைப் பயன்படுத்துவது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

எஃகு ஆலைகள், பெட்ரோ இரசாயனப் பிரிவுகளுடன் கூடிய சுத்திகரிப்பு நிலையங்கள்உயர்தர வெப்பச் செயல்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், எரிசக்தி நிலையங்கள் முதலியவற்றில் பிராணவாயுவை உருவாக்கும் உற்பத்தி மையங்கள் இயங்குகின்றன. இந்தப் பிராணவாயுவை மருத்துவப் பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்தலாம்.

இது போன்ற பிராணவாயுவை குறிப்பிட்ட தன்மையில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை நகரங்கள்/ அடர்த்தியான பகுதிகள்/ தேவை ஏற்படும் மையங்களுக்கு அருகே கண்டறிந்து, பிராணவாயு படுக்கை வசதிகளுடன் கூடிய கொவிட் சிகிச்சை மையங்களை அவற்றிற்கு அருகில் நிறுவுவதுதான் இதற்குப் பின் உள்ள உத்தியாகும். சோதனை முயற்சியாக இதுபோன்ற ஐந்து மையங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது சம்பந்தப்பட்ட ஆலையை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து இந்தப் பணியை மேற்கொள்கின்றன.

இதுபோன்ற ஆலைகளுக்கு அருகே தற்காலிக மருத்துவமனைகளை அமைப்பதன் வாயிலாக குறுகிய காலத்தில் பிராணவாயு வசதியுடன் கூடிய சுமார் 10,000 படுக்கைகளை ஏற்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருந்தொற்றைச் சமாளிக்க பிராணவாயுப் படுக்கைகளுடன் கூடிய இது போன்ற மையங்களை அமைக்க மாநில அரசுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

அழுத்த விசை உறிஞ்சுதல் தொழில்நுட்பத்தில் செயல்படும் (பிஎஸ்ஏ) ஆலைகளை நிறுவும் பணியின் வளர்ச்சி குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். அவசர கால சூழ்நிலையில் பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்), பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் வாயிலாக சுமார் 1500 பிஎஸ்ஏ ஆலைகளை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பணிகளை விரைந்து நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர், மத்திய அமைச்சரவைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைச் செயலாளர் மற்றும் இதர உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

——