Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி- அமெரிக்க அதிபர் திரு பைடன் இடையே தொலைபேசி உரையாடல்


பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர்  மேதகு ஜோசப் ஆர். பைடனுடன் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார்.

தடுப்பூசித் திட்டங்கள் வாயிலாக கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், அவரவர் நாடுகளில் கொவிட்-19 தொற்றின் நிலை குறித்தும், அவசர மருந்துகள், சிகிச்சைகள், மருத்துவ உபகரணங்கள் விநியோகத்தின் உறுதித் தன்மை குறித்தும் இரண்டு தலைவர்களும் ஆலோசித்தனர்.

இந்தியாவுடன் துணை நிற்பதாக உறுதி அளித்த அதிபர் திரு பைடன், சிகிச்சை முறைகள், செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களைக் கண்டறிவது போன்றவளங்களை விரைவாக வழங்கி இந்தியாவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா உறுதிபூண்டிருப்பதாகக் கூறினார்.

அமெரிக்க அரசின் ஆதரவு மற்றும் உதவிக்கு தமது மனமார்ந்த நன்றியை பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துக் கொண்டார். தடுப்பூசி மைத்திரி, கோவாக்ஸ் மற்றும் குவாட் தடுப்பூசி முன்முயற்சிகள் போன்றவற்றில் கலந்து கொள்வதன் வாயிலாக உலகளவில் கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கொவிட்-19 சம்பந்தமான தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விநியோகம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதன் அவசியத்தை பிரதமர் அடிக்கோடிட்டுக் கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் தடுப்பூசியின் உருவாக்கம் மற்றும் விநியோகத்தில் இந்தியஅமெரிக்க கூட்டணியின் சாத்தியக்கூறுகளை இருநாட்டு தலைவர்களும் எடுத்துரைத்ததுடன், இது சம்பந்தமான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கி ஒருங்கிணைந்து பணியாற்றுமாறு இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளும், மருந்துகளும் விரைவாகவும் சுலபமாகவும் கிடைக்கும் வகையில் ட்ரிப்ஸ் ஒப்பந்தத்தின் நெறிமுறைகளை தளர்த்துமாறு உலக வர்த்தக மையத்தில் இந்தியா மேற்கொண்ட முன்முயற்சி குறித்தும் அதிபர் திரு பைடனிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

இருநாட்டு தலைவர்களும்  தொடர்ந்து தொடர்பில் இருக்க இசைவு தெரிவித்தனர்.

——-