Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை மூலம் நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் 551 பிஎஸ்ஏ பிராண வாயு உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படவுள்ளன


மருத்துவமனைகளில் பிராணவாயுவின் இருப்பை அதிகரிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளதையடுத்து, 551 பிரத்தியேக அழுத்த விசை உறிஞ்சுதல்  தொழில்நுட்பத்தில் செயல்படும் (பிஎஸ்ஏ) மருத்துவ பிராணவாயு உற்பத்தி ஆலைகளை நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் நிறுவுவதற்கு அவசர கால சூழ்நிலையில் பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) என்ற  அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது.

இந்த ஆலைகள் மிக விரைவாக இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்‌. மாவட்ட அளவில் பிராண வாயுவின் இருப்பை இந்த ஆலைகள் பெருமளவு ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாவட்ட தலைநகரங்களில் கண்டறியப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த பிரத்தியேக ஆலைகள் அமைக்கப்படும். இதற்கான கொள்முதல், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வாயிலாக நடைபெறும்.

இந்த ஆண்டின் துவக்கத்தில், நாட்டில் உள்ள பொது சுகாதார மையங்களில் கூடுதலாக 162 பிரத்தியேக பிஎஸ்ஏ மருத்துவ பிராணவாயு உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கு ரூ. 201.58 கோடியை பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை ஒதுக்கியது.

பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதும், இந்த ஒவ்வொரு மருத்துவமனையிலும் பிராணவாயு உற்பத்தித் திறனை உறுதி செய்வதும், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிஎஸ்ஏ பிராண வாயு உற்பத்தி ஆலைகளை நிறுவுவதன் அடிப்படை நோக்கமாகும்.

இதுபோன்ற பிராண வாயு உற்பத்தி வசதிகள் மேம்படுத்தப்படுவதன் வாயிலாக, இந்த மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தின் அன்றாட மருத்துவ பிராணவாயுவின் தேவை பூர்த்தி செய்யப்படும். திரவ மருத்துவ பிராண வாயு, பிராணவாயு உற்பத்திக்கு மேலும் வலு சேர்க்கும்.

இதுபோன்ற அமைப்பு, அரசு மருத்துவமனைகளில் பிராணவாயு விநியோகத்திற்கு திடீரென இடையூறு ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கு உதவுவதுடன், கொவிட்-19 நோயாளிகள் மற்றும் இது போன்ற தேவைகளை எதிர்நோக்கும் பிற நோயாளிகளுக்காக இடைவிடாத போதிய பிராணவாயு விநியோகம் கிடைப்பதையும் உறுதி செய்யும்.

——