Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேதுவை பிரதமர் தொடங்கி வைத்தார்

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேதுவை பிரதமர் தொடங்கி வைத்தார்


இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மைத்ரி சேதுபாலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

திரிபுராவில் ஏராளமான உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

திரிபுரா மாநில முதல்வர் மற்றும் ஆளுநர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வங்கதேச பிரதமரின் காணொலி செய்தி நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 30 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த முந்தைய அரசுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சி புரியும் இரட்டை எஞ்சின்அரசுக்கும் உள்ள வேறுபாட்டை திரிபுரா மாநிலம் தெளிவாக உணர்ந்து வருகிறது என்று கூறினார்.

முந்தைய ஆண்டுகளில் ஊழல் மற்றும்  கலாச்சாரம் நிலவிய இடத்தில் தற்போது பயனாளிகளுக்கான தொகை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக சென்றடைகின்றன.

உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்காமல் ஊழியர்கள் துயரடைந்ததை நினைவுகூர்ந்த அவர், ஊழியர்கள் தற்போது 7 ஆவது ஊதிய ஆணையத்தின் படி சம்பளத்தைப் பெறுவதாகக் கூறினார். விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை விற்பதில் ஏராளமான சவால்களை சந்தித்து வந்த சூழலில், முதல்முறையாக திரிபுராவில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னர் நிலவிய வேலை நிறுத்த கலாச்சாரத்திற்கு மாற்றாக தற்போது எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளும் சூழல் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தொழில் துறைகள் முடங்கி வந்த முந்தைய சூழலை மாற்றி தற்போது புதிய முதலீடுகள் ஏற்பட்டு வருகின்றன. திரிபுராவின் ஏற்றுமதி அளவு ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த ஆறு வருடங்களில் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு பெருமளவு உயர்ந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 2009-2014 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்காக திரிபுரா மாநிலம் ரூ. 3500 கோடியை பெற்ற நிலையில், 2014-19-ஆம் ஆண்டுகளில் இந்த மாநிலத்திற்கு ரூ. 12,000 கோடி வழங்கப்பட்டது.

இரட்டை எஞ்சின்அரசுகளால் ஏற்படும் பயன்கள் குறித்து பிரதமர் விளக்கினார். இரட்டை எஞ்சின்அரசுகள் இல்லாத மாநிலங்களில், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களின் வளர்ச்சிக்கான திட்டங்களின் செயல்பாடுகள் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தற்போதுள்ளஇரட்டை எஞ்சின்அரசு, திரிபுராவை வலுப்படுத்துவதற்காக பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார். மின்சார பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து அபரிமிதமான மின்சாரத்தை பெற்றுள்ள மாநிலமாக இரட்டை எஞ்சின்அரசு திரிபுராவை மாற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2 லட்சம் ஊரக வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்பு வசதி, 2.5 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு திரிபுராவின் ஒவ்வொரு கிராமத்தையும் மாற்றியமைத்தது, மாத்ரு வந்தனா திட்டத்தின் மூலம் 50,000 கர்ப்பிணி பெண்கள் பயனடைவது, 40 ஆயிரம் ஏழை குடும்பங்கள் புதிய வீடுகளை பெறுவது போன்று இரட்டை எஞ்சின்அரசால் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை அவர் பட்டியலிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு, அபரிமிதமான வளர்ச்சியை சந்தித்துள்ளதாக பிரதமர் கூறினார்.

விமான நிலையம், திரிபுராவில் இணையதள வசதியை மேம்படுத்துவதற்கான கடல் இணைப்பு, ரயில் மற்றும் நீர்வழி இணைப்புகள் போன்றவற்றின் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், ரயில்வே, விமானம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அவர் பேசினார்.

இந்த இணைப்பின் மூலம் இந்தியா, வங்கதேச உறவுகள் மட்டும் வலுவடையவில்லை என்றும், வர்த்தகர்களுக்கும் வலுவான இணைப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

வடகிழக்கு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முழு பகுதியும் வர்த்தக தளமாக மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அண்மைக் காலங்களில் ஏற்படுத்தப்பட்ட ரயில் மற்றும் நீர்வழி இணைப்புத் திட்டங்கள், இந்தப் பாலத்தினால் வலுப்பெற்றிருப்பதாக பிரதமர் கூறினார்.

இதன்மூலம் தெற்கு அசாம், மிசோரம், மணிப்பூர் ஆகிய பகுதிகள் மற்றும் வங்கதேசம், தென்கிழக்கு ஆசியாவுடனான திரிபுராவின் இணைப்பு மேம்படும்.

வங்கதேசத்திற்கான பொருளாதார வாய்ப்புகளையும் இந்த பாலம் வழங்கும் என்று திரு மோடி கூறினார்.

இந்தப் பாலத்தின் திட்டப்பணிகள் நிறைவடைவதில் ஒத்துழைப்பு வழங்கிய வங்கதேச அரசுக்கும் அந்நாட்டு பிரதமருக்கும் திரு நரேந்திர மோடி தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தமது வங்கதேச பயணத்தின்போது இந்த பாலத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது வடகிழக்கு பகுதிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பொதுமக்கள் சாலை போக்குவரத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டாம் என்று பிரதமர் கூறினார்.

வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துடன் வடகிழக்கு பகுதிகளை ஆற்றின் வழியாக இணைக்கும் மாற்றுப் பாதையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். சப்ரூமின் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி, சேமிப்பு கிடங்குகள், கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு பொருட்களை மாற்றும் வசதிகள் போன்றவற்றை பெற்று முழு தளவாட முனையமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஃபென்னி ஆற்றின் மீது இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் உள்ள சர்வதேச கடற்கரை துறைமுகத்திற்கு மிக அருகில் உள்ள நகரமாக அகர்தலா மாறும்.

இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை-08 மற்றும் தேசிய நெடுஞ்சாலை-208-ன் விரிவாக்கத் திட்டங்கள், துறைமுகத்துடன் வடகிழக்கு பகுதிகளுடனான இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று திரு மோடி கூறினார்.

அகர்தலாவை மேம்பட்ட நகரமாக மாற்றும் நடவடிக்கைகளாக இன்று ஏராளமான திட்டங்கள் இங்கு தொடங்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். புதிய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், போக்குவரத்து சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்.

இன்று தொடங்கப்பட்டுள்ள பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடம், வணிக வளாகம், விமான நிலையத்தை இணைக்கும் விரிவுபடுத்தப்பட்ட சாலை ஆகியவை அகர்தலாவில் சுமூகமான வாழ்க்கை ஏற்படவும், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

அரசின் நடவடிக்கைகளினால் பல தசாப்தங்களாக நிலவிய பழமை வாய்ந்த ப்ரூ அகதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

ரூ. 600 கோடி மதிப்பிலான தொகுப்புத் திட்டம், ப்ரூ மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

திரிபுரா மாநிலத்தின் வளமான கலாச்சாரம் குறித்து பேசிய பிரதமர், மகாராஜா வீர் விக்ரம் கிஷோர் மாணிக்யா, திரிபுரா மாநில வளர்ச்சி குறித்து கொண்டிருந்த தொலைநோக்கு பார்வைக்கு மரியாதை செலுத்தும் வகையில் அகர்தலா விமான நிலையத்திற்கு அவரது பெயர் மாற்றி அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதேபோல் தங்கா தர்லாங், சத்யாராம் ரியாங், பெனிசந்திரா ஜமாதியா போன்று திரிபுரா மாநிலத்தின் புகழ்மிக்க கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்காக சேவையாற்றிய தலைசிறந்த மக்களை கௌரவிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பிரதமரின் வனம் தானம்  திட்டத்தின் கீழ் மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட உள்ளூர் கலைகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருவதையும், இதன் வாயிலாக அந்தப் பகுதியின் பழங்குடி மக்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் திரிபுரா அரசை பாராட்டிய திரு மோடி, அந்த மாநில மக்களுக்காக தொடர்ந்து அந்த அரசு சேவையாற்றும் என்ற தமது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

*****************