Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுகாதாரத்துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை திறம்பட அமல்படுத்துவது பற்றிய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்

சுகாதாரத்துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை திறம்பட அமல்படுத்துவது பற்றிய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்


சுகாதாரத்துறையில் பட்ஜெட் ஒதுக்கீட்டை திறம்பட அமல்படுத்துவது பற்றிய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.

வலைதள கருத்தரங்கில் பேசிய பிரதமர், முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுகாதார துறைக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனுக்கும் மேம்பட்ட சுகாதாரத்தை வழங்க அரசு உறுதிபூண்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது என்று கூறினார்.

பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு எவ்வளவு கடினமானதாகவும், சவாலானதாகவும் இருந்தது என்பதை நினைவு கூர்ந்த திரு மோடி, இத்தகைய சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் துறைகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார்.

ஒருசில மாத காலத்திலேயே எவ்வாறு சுமார் 2500 ஆய்வகங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டன என்றும், பரிசோதனைகளின் எண்ணிக்கை சுமார் 12லிருந்து எவ்வாறு 21 கோடி என்ற மைல்கல்லை எட்டியது என்பது பற்றியும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

பெருந்தொற்றுக்கு எதிராக இன்று மட்டும் போராடாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு நாட்டை தயார்படுத்துவது குறித்தும் கொரோனா நமக்கு உன்னத பாடத்தை கற்றுத் தந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். எனவே சுகாதாரத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு துறையையும் வலுப்படுத்துவதும் மிகவும் அவசியம்.

வருங்காலத்தில் ஏதேனும் சுகாதார பேரிடர் நிகழ்ந்தால் அதற்கு நாட்டை தயார்ப்படுத்தும் வகையில் மருத்துவ உபகரணங்கள் முதல் மருந்துகள் வரை, செயற்கை சுவாச கருவிகள் முதல் தடுப்பூசிகள் வரை, அறிவியல் ஆராய்ச்சிகள் முதல் கண்காணிப்பு உள்கட்டமைப்பு வரை, மருத்துவர்கள் முதல் தொற்றுநோய் வல்லுநர்கள் வரை அனைத்து துறைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதுதான் பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் பின்னணியில் ஊக்கம் அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி முதல் பரிசோதனைகள், சிகிச்சைகள் வரை நவீன சூழலியலை நாட்டிலேயே ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு துறையிலும் நமது செயல் திறன் அதிகரிக்கப்படும்.

15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி சுகாதார சேவைகளைக் கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 70000 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். அதாவது, மருத்துவ சேவைகளின் முதலீடுகளில் மட்டுமல்லாமல், நாட்டின் தொலைதூர பகுதிகளிலும் மருத்துவ சேவை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதிலும் அரசு உறுதியாக உள்ளது. இதுபோன்ற முதலீடுகள் மருத்துவ சேவையை மேம்படுத்துவதுடன், வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோனா பெருந்தொற்றின் போது தனது அனுபவம் மற்றும் திறமையினால் வெளிப்படுத்தப்பட்ட இந்திய சுகாதாரத் துறையின் மீண்டெழும் தன்மையையும் ஆற்றலையும் உலகம் தற்போது வெளிப்படையாக பாராட்டுவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவின் சுகாதாரத் துறையின் தன்மானமும் உலகநாடுகள் கொண்டிருந்த நம்பிக்கையும் பலமடங்கு அதிகரித்திருப்பதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தை நோக்கி நாடு முன்னேற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்திய மருத்துவர்கள், இந்திய செவிலியர்கள், இந்திய துணை மருத்துவ பணியாளர்கள், இந்திய மருந்துகள், இந்திய தடுப்பூசிகளின் தேவை உலகளவில் உயரும் என்றார் அவர்.

இந்திய மருத்துவ கல்வி முறையை நோக்கி உலகின் கவனம் கட்டாயம் திரும்பும் என்றும், இந்தியாவில் மருத்துவம் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெருந்தொற்றின் போது செயற்கை சுவாச கருவிகள், உபகரணங்கள் தயாரிப்பில் நாம் அடைந்த சாதனைகளைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் இவற்றிற்கான தேவை பெருகி வருவதால், இதனை பூர்த்தி செய்ய நாம் விரைவாக பணியாற்ற வேண்டும் என்று திரு மோடி கேட்டுக் கொண்டார்.

குறைந்த செலவில் அத்தியாவசியமான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உலகிற்கு வழங்குவது தொடர்பாக இந்தியா கனவு காணலாமா என்று கருத்தரங்கில் பங்கேற்றவர்களிடம் அவர் கேள்வி எழுப்பினார். எளிதான தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைவருக்கும் கிடைக்கக்கூடிய, நிலையான முறையில், இந்தியா எவ்வாறு உலக நாடுகளுக்கு விநியோகம் செய்வது என்பது பற்றி நாம் கவனம் செலுத்தலாமா?

கடந்த ஆட்சிகளிலிருந்து வேறுபட்டு, சுகாதார பிரச்சினைகளுக்கு பகுதி வாரியாக அல்லாமல் முழுமையான தீர்வுகளை வழங்க தற்போதைய அரசு பணியாற்றி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். எனவே சிகிச்சையில் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.

 

தடுப்பு முறைகள் முதல் குணப்படுத்துதல் வரை முழுமையான, ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்பற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆரோக்கியமான இந்தியாவை நோக்கி நான்கு முனை வியூகங்களுடன் அரசு பணியாற்றுவதாக அவர் கூறினார்.

முதலாவதாக, “நோய்களை தடுத்தல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்”. தூய்மையான இந்தியா திட்டம், யோகா, உரிய நேரத்தில் மருத்துவ சேவை, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

இரண்டாவதாக, “ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் தரமான சிகிச்சை வழங்குவது”. ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் முதலிய திட்டங்கள் இதனை செயல்படுத்துவதற்காக அமல்படுத்தப்படுகின்றன.

சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதார சேவையில் ஈடுபடுவோரின் தரத்தை உயர்த்துதல்என்பது மூன்றாவது வியூகமாகும். இதை நிறைவேற்றுவதற்காக கடந்த ஆறு ஆண்டுகளில் எய்ம்ஸ் போன்ற நிறுவனங்கள் விரிவாக்கப்படுவதுடன், நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

நான்காவது வியூகம், “இடர்பாடுகளை எதிர்கொள்ள அதிக ஆற்றல் சக்தியுடன் பணியாற்றுவது”. நாட்டின் தொலைதூர இடங்களில் உள்ள பழங்குடி பகுதிகளுக்கு இந்திரதனுஷ் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. காச நோயை 2030-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் அதை விட 5 ஆண்டுகள் குறைவாக 2025-க்குள் இந்தியாவில் இந்த நோயை முற்றிலும் நீக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் திவலைகளின் வாயிலாக பிறருக்கு இந்நோய் பரவுவதால், கொரோனா தொற்றைத் தடுக்க பின்பற்றப்பட்ட நெறிமுறைகளை, காசநோயைத் தடுக்கவும் பின்பற்றலாம் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார். முகக் கவசங்கள் அணிவது, தொடக்கக் கட்டத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவதும் காசநோயை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியம்.

கொரோனா காலகட்டத்தில் ஆயுஷ் துறையின் நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டினார். நோய் எதிர்ப்புத் திறன், அறிவியல் ஆராய்ச்சிகளை அதிகரிப்பதில் ஆயுஷ் உள்கட்டமைப்பு நாட்டிற்கு பெரும் உதவிகரமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். கொவிட்-19 தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தடுப்பூசிகளுடன் பாரம்பரிய மருந்துகள், வாசனை பொருட்களின் முக்கியத்துவத்தை உலகம் அனுபவித்து வருவதாக அவர் கூறினார். இந்தியாவில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான சர்வதேச மையத்தை உலக சுகாதார அமைப்பு ஏற்படுத்தவிருப்பதாக அவர் அறிவித்தார்.

குறைந்த செலவில், அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் சுகாதாரத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சிறந்த தருணம் தற்போது அமைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்த இலக்கை அடைவதற்கு சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சாமானிய மக்கள் தங்களது வசதிக்கேற்ப தரமான சிகிச்சையைப் பெறுவதில் டிஜிட்டல் சுகாதார இயக்கம் உதவியாக இருக்கும் என்றார் அவர். இது போன்ற மாற்றங்கள் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கு மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

உலகின் மருந்தகமாக தற்போது இந்தியா செயல்படும் வேளையிலும், கச்சா பொருட்களுக்கான ஏற்றுமதியை சார்ந்தே இந்தியா இருப்பதாக திரு மோடி குறிப்பிட்டார். இவ்வாறு சார்ந்து இருப்பது நமது தொழில்துறையின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்காது என்றும், ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் மருந்துகளையும் மருத்துவ சேவைகளையும் வழங்குவதற்கு இது மிகப்பெரும் தடையாக இருக்கும் என்றும் பிரதமர் வேதனை தெரிவித்தார்.

அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் தன்னிறைவு அடைவதற்காக நான்கு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

இதன்படி மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பிற்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல மருந்துகள், மருத்துவ கருவிகளுக்காக மிகப்பெரிய பூங்காக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆரோக்கிய மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், அவசரகால மையங்கள், சுகாதார கண்காணிப்பு உள்கட்டமைப்பு, நவீன ஆய்வகங்கள், தொலை மருத்துவ சேவை போன்றவை நாட்டிற்கு மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு கட்டத்திலும் பணியாற்றி ஒவ்வொரு பிரிவையும் மேம்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களும் போதிய சிகிச்சை பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர். இதனை செயல்படுத்துவதில் மத்திய மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொது சுகாதார ஆய்வகங்களுக்கான இணைப்பை உருவாக்குவதிலும், பிரதமரின் ஜெய் திட்டத்தில் பங்கு வகிப்பதிலும் பொதுதனியார் கூட்டு முயற்சியில் தனியார் துறையினரும் ஆதரவு வழங்கலாம் என்று பிரதமர் தெரிவித்தார். தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம், குடிமக்களில் மருத்துவ அறிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவது, இதர உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களிலும் கூட்டணி அமையலாம்.