உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் அவர்களே, மாநிலத்தின் கொண்டாடப்பட்டு வரும் பிரபலமான முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, உ.பி அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே, வணக்கம்!
தேசியத் தலைவர் மகாராஜா சுகல்தேவின் பிறந்த இடமான பஹ்ரைச் புண்ணிய பூமியை நான் மதிப்புடன் வணங்குகிறேன். வசந்த பஞ்சமியையொட்டி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் அறிவியலும், ஞானமும் செழிக்க அன்னை சரஸ்வதி அருளட்டும்.
மனிதகுலத்துக்குத் தொண்டாற்றும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் அன்னை சரஸ்வதியின் அருளைப் பெற பிரார்த்திப்போம்.
சகோதர, சகோதரிகளே, கோஸ்வாமி துளசிதாஸ் ராமசரிதத்தில், வசந்த காலத்தில் புதிய, மிதமான, நறுமணம் கமழும் மூன்று விதமான காற்று வீசும் என்றும், பண்ணைகள் முதல் பழத்தோட்டங்கள் வரை மகிழ்ச்சி தவழும் என்றும் கூறியுள்ளார். இந்த வசந்த காலம், பெருந்தொற்றால் நிலவிய அவநம்பிக்கையை புறம் தள்ளி, புதிய நம்பிக்கை, இந்தியாவுக்கான புதிய உறுதிப்பாடு ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளது.
நண்பர்களே, காசிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாராஜா சுகல்தேவின் தபால் தலையை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றேன். இன்று, பஹ்ரைச்சில் அவரது நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் பெருமையைப் பெற்றுள்ளேன். இங்கு அமையவிருக்கும் நவீனத்துவம் மிக்க பிரம்மாண்டமான மகாராஜா சுகல்தேவின் நினைவுச் சின்னம், இனி வரும் தலைமுறையினருக்கு உந்துசக்தியாக இருக்கும்.
மகாராஜா சுகல்தேவின் பெயரால் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி, இன்று, புதிய, பிரம்மாண்டமான கட்டிடத்தைப் பெற்றுள்ளது. பின்தங்கிய மாவட்டமான பஹ்ரைச்சில் மருத்துவ வசதிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. இது அருகில் உள்ள ஷ்ராவஸ்தி, பல்ராம்பூர், சித்தார்த் நகர் ஆகிய இடங்களுக்கும், நேபாளத்தில் இருந்து வரும் நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சகோதர, சகோதரிகளே, இந்தியாவின் வரலாறு என்பது, காலனி ஆதிக்கம் அல்லது காலனி மனப்பான்மை கொண்டவர்களால் எழுதப்பட்டது மட்டுமல்ல. இந்திய வரலாறு, சாதாரண மக்கள் தங்கள் நாட்டுப்புறங்களில் வளர்த்து, தலைமுறை, தலைமுறையாக முன்னெடுத்து வந்ததாகும். நாம் சுதந்திரமடைந்து 75-ம் ஆண்டில் நுழையவிருக்கும் இந்த நேரத்தில், அவர்களது தியாகம், தீரம், போராட்டங்கள், பங்களிப்புகள் ஆகியவற்றை நினைவு கூர்ந்து அவற்றுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக, இந்தியாவுக்காகவும், இந்தியத்துவத்துக்காகவும் தங்களது அனைத்தையும் தியாகம் செய்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. வரலாறு படைத்தவர்களுக்கு எதிராக வரலாற்று ஆசிரியர்கள் இழைத்த அநீதி மற்றும் முறைகேடுகள் இப்போது புதிய இந்தியாவில் திருத்தப்பட்டு வருகின்றன. சுதந்திர இந்து ராஜ்ஜியத்தின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பங்களிப்பை நாம் கொண்டாடி வருகிறோம்.
இன்று இந்த அடையாளத்தை செங்கோட்டை முதல் அந்தமான் நிக்கோபார் வரை கொண்டு சென்று, நாட்டுக்கும், உலகத்துக்கும் காட்டியுள்ளோம். 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை நாட்டுடன் இணைத்த கடினமான பணியை மேற்கொண்ட சர்தார் பட்டேலுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதா? இந்த நாட்டின் சிறு குழந்தைகள் கூட இதனை அறியும். இன்று உலகின் மிக உயர்ந்த சிலையான ஒற்றுமை சிலை நமக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது. நாட்டுக்கு அரசியல் சாசனத்தை வகுத்து தந்தவரும், ஒடுக்கப்பட்ட, சுரண்டபட்ட மக்களின் குரலாக ஒலித்த பாபாசாகிப் அம்பேத்கர் அரசியல் பிம்பமாக மட்டுமே பார்க்கப்படுகிறார். இன்று, அம்பேத்கருடன் தொடர்புடைய, இந்தியா முதல் இங்கிலாந்து வரையிலான அனைத்து இடங்களும் சுற்றுலா மையங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, நாட்டுக்காக தியாகம் செய்த எண்ணற்ற ஆளுமைகள் பல்வேறு காரணங்களால் அங்கீகரிக்கப்படவில்லை. சவுரி சவ்ராவில் என்ன நடந்தது என்பதை நாம் மறக்கலாமா? இந்தியத்துவத்தைப் பாதுகாக்க முயன்ற மகாராஜா சுகல்தேவும் அதே போலவே நடத்தப்பட்டார். அவரது வீரமும், தீரமும் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். அவற்றில் மகாராஜா சுகல்தேவ் புறக்கணிக்கப்பட்டாலும், அவாத், தாரை, பூர்வாஞ்சல் ஆகிய பகுதிகளில், நாட்டுப்புற மக்களின் மனதில் வாழுகின்றார்
நண்பர்களே, 40 அடி உயரத்தில் அவரது வெண்கலச் சிலை அமையவுள்ளது. அமையவிருக்கும் அருங்காட்சியகம் மகாராஜா குறித்த வரலாற்றை அறிய உதவும். சாலைகள் விரிவாக்கப்பட்டு, குழந்தைகள் பூங்கா, சுற்றுலா விடுதிகள், உணவு விடுதிகள் போன்றவை உருவாக்கப்பட்டு பெரும் சுற்றுலா தளமாக இது உருவெடுக்கும்.
சகோதர, சகோதரிகளே, கடந்த சில ஆண்டுகளில் வரலாறு, நம்பிக்கை, ஆன்மீகம் தொடர்பான நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலாவை மேம்படுத்துவதே இவற்றின் முக்கிய நோக்கமதாகும். உத்தரப் பிரதேசம், சுற்றுலாவிலும், ஆன்மீக யாத்திரையிலும் சிறந்து விளங்குகிறது. ராமாயண சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, புத்த சுற்றுலா ஆகியவை, ராம பிரான், கிருஷ்ண பரமாத்மா, புத்த பகவான் வாழ்க்கை தொடர்புடைய உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி, சித்திரக்கூடம், மதுரா, பிருந்தாவனம், கோவர்தன், குஷி நகர், ஷ்ராவஸ்தி போன்ற இடங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. தற்போது, மற்ற மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் உள்ளூர் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மூன்று முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உ.பி. திகழ்கிறது.
சகோதர, சகோதரிகளே, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான நவீன தொடர்பு வசதிகளுடன், உத்தரப் பிரதேசத்தில் இதர வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அயோத்தி விமான நிலையம், குஷி நகர் சர்வதேச விமான நிலையம் ஆகியவை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வருங்காலத்தில் பெரிதும் பயன் அளிக்கும். உ.பி.யில் சுமார் 12 சிறு, பெரு விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பூர்வாஞ்சல் பகுதியில் உள்ளன.
பூர்வாஞ்சல் விரைவுச் சாலை, புந்தேல் கண்ட் விரைவுச் சாலை, கங்கை விரைவுச் சாலை, கோரக்பூர் இணைப்பு விரைவுச் சாலை, பல்லியா இணைப்பு விரைவுச் சாலை, போன்ற நவீன, அகலமான சாலைகள் உத்தரப் பிரதேசம் முழுவதும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு வகையில் இது, நவீன உ.பி.-யின், நவீன உள்கட்டமைப்பின் துவக்கமாகும். இரண்டு பிரத்யேக பெரிய சரக்கு வழித்தடங்கள் சந்திக்கும் இடமாக உ.பி.உள்ளது. உ.பி.யில் நவீன கட்டமைப்புகளை உருவாக்குவது, முதலீட்டாளர்களிடம் தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் துறைக்கும், இளைஞர்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே, உத்தரப் பிரதேச அரசு கொரோனா பெருந்தொற்றை சமாளித்த விதம் பெரிதும் பாராட்டத்தக்கதாகும். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நிலைமை மோசமாகி இருந்தால், இந்தியாவிலிருந்தும், வெளியிலிருந்தும் என்னென்னவோ விமர்சனமெல்லாம் வந்திருக்கும். ஆனால், யோகி அரசு நிலைமையைத் திறம்படக் கையாண்டது. புலம் பெயர்ந்து ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் உ.பி அரசு அளித்தது. கடந்த 3-4 ஆண்டுகளில் சுகாதாரத்துறையை மேம்படுத்த உ.பி. அரசு எடுத்த முயற்சிகள் காரணமாக, கொரோனாவுக்கு எதிராகவும் அந்த அரசால் சமாளிக்க முடிந்தது. மாநில அரசின் முயற்சியால், பூர்வாஞ்சலில் மூளைக் காய்ச்சல் பிரச்சினை வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில், உ.பியில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 14-லிருந்து 24 ஆக உயர்ந்துள்ளது. கோரக்பூர், பரேலி அகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை தவிர, 22 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. வாரணாசியில் நவீன புற்றுநோய் மருத்துவமனை பூர்வாஞ்சலுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
சகோதர, சகோதரிகளே, உத்தரப் பிரதேசத்தில், முன்னேற்றமான மின்சாரம், குடிநீர், சாலைகள், சுகாதார வசதிகள் ஆகியவற்றால் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோர் பயனடைந்து வருகின்றனர். பிரதமர் கிசான் சம்மான் நிதி மூலம்,உ.பி.யில் 2.5 கோடி விவசாய குடும்பங்களுக்கு பணம் நேரடியாக அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அவர்களிடம் உரம் வாங்கக்கூட பணம் இல்லாமல் பிறரிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். மேலும், விவசாயிகள், பாசனத்துக்கு மின்சாரத்தைப் பயன்படுத்த இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டியிருந்தது. அரசு மின்சார விநியோகத்தை மேம்படுத்தியதன் மூலம் அத்தகைய பிரச்சினைகள் தற்போது அகன்றுள்ளன.
நண்பர்களே, வேளாண் நிலங்களை ஒருங்கிணைக்க விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை (எப்பிஓ) அமைப்பது மிகவும் முக்கியமானதாகும். இதன் மூலம் விவசாயிகளின் சாகுபடி பரப்பு குறைந்து வருவதை சமாளிக்கலாம். 1-2 ஏக்கர்களை வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்கள் 500 ஒன்று சேரும் போது, 500-1000 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை விட வலிமை பெற முடியும். இது போல, காய்கறி, பழங்கள், பால், மீன் போன்றவற்றுடன் தொடர்புடைய சிறு விவசாயிகள் கிசான் ரயில் மூலம் இப்போது பெரிய சந்தைகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றனர்.
நண்பர்களே, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வேளாண் சீர்திருத்தங்கள், சிறு, குறு விவசாயிகளுக்குப் பயன் அளிக்கக்கூடியதாகும். இந்த வேளாண் சட்டங்கள் குறித்த ஆக்கபூர்வமான கருத்துக்கள் நாடு முழுவதும் குவிந்து வருகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்து விதமான தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுக்காக சட்டங்களை இயற்றியவர்கள், இந்திய நிறுவனங்களைப் பற்றி கூறி விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றனர். இந்தப் பொய்களும், பிரச்சாரமும் இப்போது அம்பலமாகியுள்ளன. புதிய சட்டங்களை இயற்றிய பின்னர், உத்தரப் பிரதேசத்தில், கடந்த ஆண்டை விட நெல் கொள்முதல் இருமடங்காகியுள்ளது. யோகி அரசு கரும்பு விவசாயிகளுக்கு ஏற்கனவே ரூ.1 லட்சம் கோடியை விடுவித்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் நிலுவைத் தொகையை வழங்க வகை செய்ய, மத்திய அரசும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பணம் கிடைப்பதை உறுதி செய்ய உ.பி. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.
நண்பர்களே, கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அனைத்து இயன்ற முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது. சுவமிதா திட்டம் கிராமவாசியின் வீட்டை சட்டத்துக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்வதை முற்றிலுமாக அகற்றும். இத்திட்டத்தின் கீழ், உ.பி.யில் சுமார் 50 மாவட்டங்களில் ட்ரோன்கள் மூலம் சர்வே செய்யப்பட்டு வருகிறது. 12 ஆயிரம் கிராமங்களில் ட்ரோன் சர்வே பணி இது வரை நிறைவடைந்துள்ளது. இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் சொத்து அட்டையைப் பெற்றுள்ளன. இந்தக் குடும்பங்கள் தற்போது, அனைத்து விதமான அச்சத்திலிருந்தும் விடுபட்டுள்ளன.
இந்த நிலையில், வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம், விவசாயிகளின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் என்ற பொய் எடுபடாது. ஒவ்வொரு மனிதனும் அதிகாரம் பெற வேண்டும் என்பதே நமது லட்சியமாகும். நம் நாட்டை தன்னிறைவாக்குவதே நமது உறுதியாகும். இந்த இலக்கை எட்ட நாம் உறுதிபூண்டுள்ளோம். சரியான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் எந்த இலக்கையும், வெற்றி பெறச் செய்ய ராமபிரான் மனதில் இருந்து அருளுவார்.
மீண்டும் ஒருமுறை மகாராஜா சுகல்தேவ் அவர்களை வணங்கி, உங்கள் அனைவரையும், யோகி அவர்களையும், அவரது குழுவினர் அனைவரையும் வாழ்த்துகிறேன்!
********
A tribute to the great Maharaja Suheldev. https://t.co/emgua921lP
— Narendra Modi (@narendramodi) February 16, 2021
इतिहास की किताबों में भले ही महाराजा सुहेलदेव के शौर्य और पराक्रम को सही स्थान नहीं मिला, लेकिन पूर्वांचल की लोकगाथाओं में, लोगों के हृदय में वे हमेशा बने रहे।
— Narendra Modi (@narendramodi) February 16, 2021
इतिहास लिखने के नाम पर जो अन्याय किया गया, उसे अब आज का भारत सुधार रहा है, गलतियों से देश को मुक्त कर रहा है। pic.twitter.com/3DYDzVxrXx
उत्तर प्रदेश में जिस प्रकार आज आधुनिक इंफ्रास्ट्रक्चर पर काम चल रहा है, उससे राज्य में उद्योग लगाने के लिए देश और दुनिया के निवेशक उत्साहित हैं। pic.twitter.com/iGedgTwlwf
— Narendra Modi (@narendramodi) February 16, 2021
छोटे और सीमांत किसानों के जीवन में समृद्धि और खुशहाली लाने के लक्ष्य के साथ आज सरकार कृषि क्षेत्र में अनेक महत्वपूर्ण कार्य कर रही है। pic.twitter.com/n2BnbTEZNu
— Narendra Modi (@narendramodi) February 16, 2021