Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரிட்டோரியாவில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பிரதமர் உரை.

பிரிட்டோரியாவில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொழில் அதிபர்கள் கூட்டத்தில்  பிரதமர் உரை.

பிரிட்டோரியாவில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொழில் அதிபர்கள் கூட்டத்தில்  பிரதமர் உரை.


தென் ஆப்பிரிக்க குடியரசின் அதிபர் மேன்மை மிகு திரு ஜேக்கப் ஜூமோ அவர்களே,

சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான மாண்புமிகு அமைச்சர் அவர்களே,

தொழில் மற்றும் வர்த்தகத்துக்கான மாண்புமிகு அமைச்சர் அவர்களே,

தென் ஆப்பிரிக்க – இந்திய தொழில் அதிபர்களே,

அன்பான பெரியோர்களே, தாய்மார்களே,

உங்களைச் சந்திப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான உறவுகள் வலுவான வரலாற்றுப் பூர்வமான அடிப்படையில் கட்டப்பட்டது.

நமது இணைப்பு காலத்தின் கட்டளை.

லட்சியக் கனவு நம்மை இணைத்திருக்கிறது.

நமது வரலாறு பல பொதுவான அத்தியாயங்களைக் கொண்டது.

போராட்டங்கள் மற்றும் தியாகத்தின் மூலம் வரலாற்றின் திசையையே மாற்றியவர்கள் நாம்.

இந்த மாற்றத்தில் மனிதகுலம் கண்ட மாபெரும் தலைவர்களின் வழிகாட்டுதலை பெறும் பேறு பெற்றிருக்கிறோம்.

நண்பர்களே,

நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி போன்ற நமது தலைவர்கள் நமக்கு அரசியல் விடுதலையை பெற்றுத் தந்தார்கள்.

பொருளாதார விடுதலைக்காக நாம் பாடுபடவேண்டிய தருணம் இது.

நமது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது என்ற பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் நமது உறவு நிலை கொண்டுள்ளது.

சிரமமான காலத்திலும் நமது நட்புறவு நீடித்திருக்கிறது.

வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ள கொள்ள வேண்டிய நேரம் இது.

நமது மகத்தான தலைவர்களின் ஆசியுடன் நம் இரு நாடுகளும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தை தென் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நம் நாட்டு மக்களும் உலக மக்களும் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் நம்மை எதிர் நோக்கி நிற்கிறார்கள்.

இந்த இரண்டு எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற நமது கரங்கள் இணையட்டும்.

வாய்ப்புள்ள அனைத்து துறைகளிலும் பயன்தரும் வகையில் நாம் இணைந்திருப்பது இதம் அளிக்கிறது.

இந்த மகத்தான கூட்டம் அந்த தொடரில் ஓர் அம்சம் தான்.

நண்பர்களே,

இந்த மகத்தான நாட்டுக்கு நான் சற்று தாமதமாகவே வந்துள்ளேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

ஆனாலும் அதிபர் ஜூமோவும் நானும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை சந்தித்து இருக்கிறோம்.

தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் வர்த்தகத்திலும் முதலீட்டிலும் முக்கியப் பங்காளிகள்.

கடந்த 10 ஆண்டுகளில் நமது பரஸ்பர வர்த்தகம் சுமார் 380 சதவீதம் உயர்ந்துள்ளது.

முதலீடு வருகையும் தொடர்ந்து பிரகாசமாகவே உள்ளது.

இருதரப்பிலும் தொடர்ந்து முதலீடு குவிகிறது.

தென்னாப்பிரிக்காவில் 150 – க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன.

அதே போல் இந்தியாவிலும் தென்னாப்பிரிக்க நிறுவனங்கள் அற்புதமாக பணியாற்றுகின்றன.

என்றாலும், நம் இரு நாடுகளுக்கிடையே உள்ள அளப்பரிய வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இரு நாடுகளும் தங்களின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்தி இருப்பதுதான் இதற்குக் காரணம்.

எனவே நமது மக்களின் தேவைகளை பரஸ்பரம் நிறைவேற்றுவது மக்களுக்குச் சேவையாற்றவும் வகையில் நமது வர்த்தகத்தை வெவ்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும்.

பல்வேறு துறையிலும் அரங்குகளிலும் நம்மிடையே ஏற்பட்டுள்ள தீவிரமான பங்களிப்பு இது போன்ற உறவும் ஒத்துழைப்பும் சாத்தியமே என்பதற்கு சான்று பகர்கிறது.

நண்பர்களே,

இங்குள்ள இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் தென்னாப்பிரிக்காதான் உறைவிடம்.

பல இந்திய நிறுவனங்கள் இங்கு தங்கள் தடத்தைப் பதித்துள்ளன.

பரந்துபட்ட செயல்பாடுகளில் இவை ஈடுபட்டுள்ளன.

பல இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகள் இங்கு நம்முடன் இருக்கிறார்கள்.

அவர்கள் தொழில்களின் பலன் இந்த மகத்தான நாட்டின் சமூகப் பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்பதே எனது ஆலோசனை.

பப்ளிக் செக்டார், பிரைவேட் செக்டார், பீப்பிள்ஸ் பார்ட்னர்ஷிப் (பொதுத்துறை, தனியார்துறை மக்கள் பங்களிப்பு) என்பதைக் குறிக்கும் மூன்று பி என்ற ஆங்கில எழுத்தை நான் எப்போதுமே இந்தியாவுக்கு எடுத்துரைப்பதுண்டு.

பெர்சனல் செக்டார் – தனிநபர் துறை என்பதையும் நான் அழுத்தி வருகிறேன்.

அந்த முறை இந்த நாட்டுக்கும் பொருந்தும்.

உங்கள் தொழிலின் லட்சியத்தில் திறன் மேம்பாடு, அதிகாரப்படுத்துதல் என்பதை மையப் பொருளாக கொண்டிருக்கவேண்டும்.

உபுன்டூ எனப்படும் ஆப்பிரிக்க மனிதாபிமான உணர்வு உங்கள் தொழில் தர்மத்தில் பிரதிபலிக்க வேண்டும்.

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எங்கள் நாட்டின் தத்துவத்துக்கு இணையானது இது.

இதைத்தான் மகாத்மா காந்தி வலியுறுத்தினார்.

நாம் எப்போதுமே ஒருவருக்கொருவர் உதவுவதிலும் வளம் சேர்ப்பதிலும் நம்பிக்கை கொண்டவர்களே தவிர ஒருவரையொருவர் சுரண்டுவதில் அல்ல.

எங்கள் தொழில் ஈடுபாடு ஒருவழிப்பாதை அல்ல என்பது ஒரு நல்ல அம்சம்.

தென்னாப்பிரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் சிறப்பாக செயல்படுகின்றன.

அவற்றில் பல நிறுவனங்கள் அங்கேயே நிலை கொண்டுள்ளன.

உங்களின் ஆற்றல், உங்களின் கண்டுபிடிப்பு மூலம் கிடைத்த பலன் ஆகியவற்றிலிருந்து நிரம்பக் கற்றுக் கொண்டுள்ளோம்.

தென்னாப்பிரிக்க தொழில்களின் நேர்த்தியும் இந்தியத் திறனும் ஒன்றிணைந்து இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் உதவ வேண்டும்.

நண்பர்களே,

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதாரத்தை எல்லா முனையிலும் சரியான வகையில் தூக்கி நிறுத்த நாங்கள் கடுமையாக பாடுபட்டு வருகிறோம்.

எங்களது உழைப்புக்கும் உண்மைக்கும் ஊக்கம் தரும் பலன் கிட்டியுள்ளது.

இன்றையப் பொருளாதாரத்தில் இந்தியா ஒளிரும் நட்சத்திரமாக விளங்குகிறது.

உலகப் பொருளாதார வளர்ச்சியை இழுத்துச் செல்லும் என்ஜினாக எங்களை உலகம் பார்க்கிறது.

உலகிலேயே அதி வேகமான வளர்ச்சி பெற்ற பரந்த பொருளாதார நாடாக மாறியுள்ளது.

உலகமே தேக்க நிலையைச் சந்திக்கும் போது நாங்கள் ஒட்டு மொத்த உற்பத்தியில் 7.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளோம்.

இதைவிடக் கூடுதலான வளர்ச்சியை எதிர்காலத்தில் எய்துவோம் என்று உலக வங்கியும் ஐ.எம்.எப்– ம் இதர நிறுவனங்களும் மதிப்பீடு செய்துள்ளன.

அது மட்டுமல்ல 2014-15 ல் உலக வளர்ச்சியில் இந்தியா 12.5 சதவீதம் தனது பங்களிப்பைச் செலுத்தி உள்ளது.

உலக பொருளாதாரத்தில் இந்தியாவுக்குள்ள பங்கைக் காட்டிலும் அதிகமாக 68 சதவீத அதிகப் பங்களிப்பை செலுத்தி உள்ளது.

இந்த ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு இதுவரை இல்லாத உச்சத்தில் உள்ளது.

பொருளாதாரத் தர வரிசையை அளவீடு செய்யும் மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு எந்த ஆண்டைக் காட்டிலும் 2016 –ல் அதிகம் என்றும் இது இந்தியாவில் தயாரிப்போம் என்ற தாரக மந்திரத்தின் வெற்றி இது என்றும் மதிப்பீடு செய்துள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம் என்பது இதுவரை இந்தியா காணாத மிகப் பெரிய பிராண்ட் ஆக உருவெடுத்துள்ளது.

உள்நாட்டிலும் நாட்டுக்கு வெளியேயும் மக்கள், நிறுவனங்கள், தொழில்கள், வணிக நிலையங்கள், ஊடகங்கள், அரசியல் தலைமை அனைத்துத் தரப்பையும் இந்தக் கோஷம் கவ்விப் பிடித்துள்ளது.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற தத்துவத்தின் ஒரு பகுதியாக தொழில்கள் தொடங்க வழி முறைகளை இலகுவாக்கியுள்ளோம்.

தொழில்களுக்கான உரிமம் வழங்குவதிலும் அனுமதி அளிப்பதிலும் ஆய்வு செய்வதிலும் எளிமைப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

சில குறியீடுகளை நான் குறிப்பிட்டால்,

• தொடர்ச்சியாக முதலீட்டைக் கவரும் இடம் இந்தியா என்று பல்வேறு உலக அமைப்புகளும் நிறுவனங்களும் தரவரிசைப்படுத்தி உள்ளன.

• எளிதாகத் தொழில் தொடங்க முடியும் என்று உலக வங்கி வரிசைப் படுத்தி உள்ள தரவரிசையில் 12 படிகளில் உயர்ந்த நிற்கிறோம்.

• முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியா முன்னேறி உள்ளதாக ஐநாவில் உங்டாட் தரவரிசை மதிப்பீடும் தெரிவித்துள்ளது.

• இதுவரை 15 –வது இடத்திலிருந்த இந்தியா இப்போது 9 – வது இடத்துக்கு தாவி உள்ளது.

• உலக பொருளாதார பேரவையின் குறியீட்டின்படி உலகத்தர வரிசையில் 16 இடங்களை இந்தியா தாண்டி முன்னேறி உள்ளது.

எங்களது ஆக்கபூர்வமான கொள்கை மற்றும் நடைமுறை காரணமாக எங்களின் தன்னம்பிக்கையும் உயர்ந்துள்ளது.

தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை மேலும் எளிமைப்படுத்தும் உந்து சக்தியை இது தந்துள்ளது.

புதுப்புது சிந்தனைகளை உருவாக்கி அவற்றை தொழில்முனைவுக்குப் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவே புதுமையான ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் வேலைவாய்ப்புச் சந்தையை விரிவுபடுத்தி மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தி உள்ளது.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி உயர்ந்த நிலை கொண்ட இந்தியாவை உருவாக்க இது வழி வகுக்கிறது. வளர்ச்சியின் பலன்கள் கிராமப்புற மக்களுக்கும் நகர்ப்புற சமுதாயத்துக்கும் கிட்டும் வகையிலான உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்துள்ளோம்.

சமுதாய ரீதியிலும் பொருளியல் ரீதியிலும் நவீன கட்டமைப்பை உருவாக்குவதில் நாங்கள் வேகமான அடியெடுத்து வைக்கிறோம்.

நண்பர்களே,

நம் இரு நாடுகளும் சந்திக்கும் சமூக – பொருளாதார சவால்கள் அநேகமாக ஒரே மாதிரியானவை.

வளர்ச்சியின் சக்கரங்கள் நிறுத்தப்படக் கூடாது என்பது எனது ஆலோசனை.

நம்மிரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உதவவேண்டிய பிரத்தியேக நிலையில் உள்ளன.

உதாரணமாக

இயற்கை நம்மீது கனிவு காட்டுகிறது.

நமது இயற்கை வளம் அபரிமிதமானது.

சாதாரண மக்கள் நலனைப் பேணும் வகையில் இந்த வளம் சரியான – நீடித்த முறையில் பயன்படுத்தப்படுவது அவசியம்.

நாம் ஒருவருக்கொருவர் ஏராளம் கற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பாக உங்கள் நாட்டின் உலகத் தரம் வாய்ந்த சுரங்க நிறுவனங்களுடன் ஈடுபாடு கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.

இவற்றில் சில இப்போதே இந்தியாவில் தீவிரமாக இயங்கி வருகின்றன.

ஆனால் இந்தத் துறையில் கேந்திரமான ஈடுபாட்டை நாங்கள் விரும்புகிறோம்.

எங்களின் இந்த ஆர்வம் ஒருதலைப் பட்சமானது அல்ல. இரண்டாவதாக பருவநிலை மாற்ற சவாலும் துரிதமான வளர்ச்சி என்ற இலக்கும் நம் முன்னால் நிற்கின்றன.

முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் வழி தூய்மையாகவும் பசுமையாகவும் இருக்க வேண்டும் என்பது நமது உறுதிப்பாடு.

அதே சமயம் நமக்கு எரிசக்தி ஆதார வளங்கள் தேவை.

ஏராளமான நாடுகளின் உதவியுடன் சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

இது நமக்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்.

மாறுபட்ட பருவநிலைகள் நம் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும்.

இந்தியாவில் கோடைக்காலம் அல்லது மாம்பழப்பருவம் என்பது இங்கே குளிர்காலமாகவும் உங்கள் நாட்டில் குளிர்காலம் எங்கள் நாட்டில் கோடை காலமாகவும் இருக்கும் மாறுபட்ட பருவநிலைகளை இரு நாடுகளும் சந்திக்கின்றன.

இந்த பூகோள மாறுதல்களால் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் விளைபொருட்களை பரஸ்பரம் நாம் சந்தைப் படுத்திக் கொள்ள முடியும்.

பரந்த சந்தையைக் கொண்ட இந்தியா உங்கள் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு அளப்பரிய வாய்ப்பை வழங்குகிறது.

இந்தத் துறையில் நமது ஒத்துழைப்பு கிராமங்களில் வாழும் நமது விவசாயிகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும்.

இந்தியாவில் பிரமாண்டமான கட்டமைப்பை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

விடுதலை பெற்ற நாளிலிருந்து நிறைவேற்றப்படாத அந்தத் திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

இந்த இடைவெளியை நிரப்புவதில் நாம் இணைந்து பணியாற்ற முடியும்.

தொழில்நுட்பம் மற்றும் திறனை உங்களுக்கு தருவதற்கு பொருத்தமான நாடு இந்தியாதான்.

அதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

50 ஆயிரம் ஆப்பிரிக்கர்களுக்கு 5 ஆண்டுகளில் கல்வியும் பயிற்சியும் அளிக்கும் பணியை கடந்த ஆண்டு புதுதில்லியில் நடந்த இந்தியா – ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டில் இந்தியா ஏற்றுக் கொண்டது.

இவையெல்லாம் சில உதாரணங்கள் தான்.

இன்னும் ஏராளமான துறைகளில் நாம் இணைந்து பணியாற்ற முடியும்.

பாதுகாப்பு முதல் பால்வளம் வரை.

வன்பொருள் முதல் மென்பொருள் வரை

மருந்துகள் முதல் மருத்துவ சுற்றுலா வரை

மென்திறன் முதல் அறிவியல் தொழில்நுட்பம் வரை.

இப்படிப் பல வாய்ப்புகள் நம்முன் விழுந்து கிடக்கிறது.

இந்தியா இன்று திறந்த பொருளாதார நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

ஏராளமான துறைகளில் எல்லாவிதமான வழிகளிலும் நேரடி அந்நிய முதலீட்டுக்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கான தொழில்கள் துவங்கவும் வளர்க்கவும் தேவையானபடி நெறிமுறைகள் சீரமைக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நண்பர்களே,

நம் இரு நாடுகளிடையே நிறுவன ரீதியாக ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பின் ஆழம் அதிகரித்திருப்பதை எனது உரையை நிறைவு செய்யும்போது நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

நமது பிரிக்ஸ் நாடுகளின் தொழில் ஈடுபாடும் தலைமை நிர்வாக அலுவலர்கள் அமைப்பும் இந்தப் பங்களிப்பை செழுமைப்படுத்த உதவியுள்ளன.

இன்று நாம் இந்தியா – தென்னாப்பிரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரிகள் பேரவையின் 3 –வது கூட்டத்தை சிறப்பாக நடத்தி உள்ளோம்.

உங்கள் பரிந்துரைகளை மதிக்கிறோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை நோக்கிச் செயல்படுத்த முனைகிறோம்.

தொழில் நிமித்தமாக வழக்கமாக செல்லும் பயணிகளுக்கு 10 – ஆண்டு பிரிக்ஸ் விசா முறையை அறிமுகம் செய்தமைக்காக தென்னாப்பிரிக்க அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இந்த அறிவிப்பால் இந்திய தொழில்கள் ஊக்கம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு ஈ விசா திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.

இது குறுகிய கால சுற்றுலாப் பயணிகளுக்கும் தொழில் காரணமாக செல்லும் பயணிகளுக்கும் பொருந்தும்.

வீட்டில் இருந்தபடியே நீங்கள் எந்த செலவுமின்றி மின்னஞ்சல் மூலம் இந்த விசாவைப் பெற முடியும்.

நண்பர்களே,

• மீண்டும் ஒரு முறை நமது கரங்கள் இணையட்டும்

• மீண்டும் ஒரு முறை உறுதி பூணுவோம்.

• வறுமை என்ற எதிரியை எதிர்த்துப் போரிட இது அவசியம்.

• இது மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.

• இதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

• நமது மாபெரும் தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி அதுதான்.

நன்றி.